அல்லாஹ்வும் பிதாவும் ஒருவரா? -அலசல்

 


அல்லாஹ்வும் பிதாவும் ஒருவரா?

இதன் உள்ளடக்கம் 

1.அல்லாஹ்வை ஏன் பிதா என முஸ்லிம்கள் அழைப்பதில்லை 


2.அகிலத்தாரின் இரட்சகனும் உலகத்தின் அதிபதியும்


3.சாத்தானை ஏன் உலகின் அதிபதி என புதிய ஏற்பாடு அழைக்கப்படுகிறது?


4.படைப்புகளின்மீது சத்தியம் செய்வதும் பைபிளும்


5..பிதாவும் சாத்தானும்


1.அல்லாஹ்வை ஏன் பிதா என முஸ்லிம்கள் அழைப்பதில்லை?

தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்ளும் போதகர்களால் தமது சர்ச்சு மக்களை ஏமாற்றுவதற்காகவும், இஸ்லாத்தின்பக்கம் அவர்களது பார்வை திரும்பி விடக்கூடாது என்பதற்காக வைக்கப்படும் வாதமே "அல்லாஹ் வேறு புதிய ஏற்பாடு கூறும் பிதா வேறு" என்பதாகும்.


உண்மையில் அனைத்தையும் படைத்து பரிபாலித்து மரணிக்கவைத்து உயிர்ப்பிக்கிற கடவுள் ஒருவர் மட்டுமே. ஆனால் வெவ்வேறு மதங்களில் படைத்த கடவுளுக்கு மொழி, கலாச்சார வேறுபாடு காரணமாக வித்தியாசமான பெயர்களை அடையாளங்களை பண்புகளை கொடுக்கிறது. ஆனாலும் மெய்யான இறைவன் ஒருவனே. 


அந்தவகையில் யூதர்களின் நூல்களில், மெய்யான கடவுள் ஒருவரே என்றும் அவரை எபிரேய பாசையில் "எலோஹிம்-கடவுள் (ஆதி1:1)", "அதோனாய்,யாஹ்வே/யெஹோவா- ஆண்டவன்/கர்த்தர் (Lord) (பைபிளில் அதிகமாக கடவுளுக்கு பாவிக்கப்படும் வார்த்தை)", "பாஆல் (בעל) (Ba'al)/ ஈஷ் (אש) (ISH) -கணவர் (தமிழ் கலாச்சாரத்தில் மாமா) (ஏசாயா 54:5, எரேமியா 31:32 & ஓசியா 2:16)" , அப் (Ab -אב) -தகப்பன் (Father (ஏசாயா 63:16, 2 சாமுவேல் 7:14)" என வித்தியாசமான பெயர்களால் அழைக்கப்படுகிறார்.


கடவுள் மனைவிக்கு மாமாவாகவும் (கணவர்) , பிள்ளைகளுக்கு அப்பாவாகவும் கருதப்பட காரணம் அவை உவமைகளோடு சம்பந்தமானது.




கணவன் தன் மனைவி ஒழுக்கம் இல்லாமல் நடக்கும்போது தள்ளுதல்சீட்டை எழுதி ஒதுக்கி வைப்பது போல , விசுவாசிகள் அவரது கட்டளைகளை விட்டு விலகி மதம் மாறினால், ஒதுக்கி வைத்துவிடுவார் என்ற அர்த்தத்தில் கணவராகவும் விசுவாசிகள் மனைவிகளாகவும் கருதப்படுகிறார்கள். இதையே எரேமியா 3:7-8 கூறுகிறது.




அதுபோல தகப்பன் என்பவன் உண்டாக்கியவன் என்பதாலும், பிள்ளைகள் தவறு செய்யும் போது கண்டித்து தண்டித்து திருத்துபவனாகவும் இருப்பதாலும் விசுவாசிகளை உண்டாக்கி, அவர்கள் தவறு செய்யும்போது தண்டித்து திருத்துபவராக இருப்பதால் தகப்பன் என அக்காலத்தில் அழைத்தனர்.


இதையே 2 சாமுவேல் 7:14இலே தெளிவாக உணர முடியும். சொலமோன் ராஜாவை(யும் அவரது சந்ததிகளான யூதா கோத்திர ராஜாக்களையும்) தன் மகன் என்றும் நான் அவனுக்கு தகப்பன் என்றும் கூறிவிட்டு, அவன் தவறு செய்யும்போது மற்ற மனிதர்களை கொண்டு தண்டிப்பேன் என கூறப்பட்டுள்ளது.


அதாவது விசுவாசிகளை தவறும்போது தண்டித்து கண்டித்து திருத்துவதால் தான் தகப்பன் என கருதப்படுகிறது.




ஆனால் பிற்காலத்தில் ரோம் கிரேக்க மதங்களால் ஈர்க்கப்பட்ட யூதரும் பின்னர் கிறிஸ்தவர்களும் தகப்பன் என்பதை வேறுவிதமாக புரிந்து கொண்டனர். அதை பவுலும் ஏற்றுக்கொண்டு அப்படி சொன்ன புலவர்களை ஞானிகள் போல சித்தரித்துள்ளார் (அப்போஸ்தலர் 17:28)


இவர்களோ கடவுளுக்கு தம்மை மிகவும் நேசத்துக்குரியவர்கள் மகனுடைய அந்தஸ்த்தில் உள்ளவர்கள் என புரிந்துகொண்டனர். குறிப்பாக கிறிஸ்தவர்கள் இயேசுவின் ஆவி மூலமாக தேவனுக்கு வாரிசுகளான பிள்ளைகள் என தம்மையும் ஏனைய கிறிஸ்தவர்களையும் குறித்து பவுல் எழுதியுள்ளார் (கலாத்தியர் 4:7, ரோமர் 8:17)


இறுதியாக கூறிய இந்த கருத்தை இஸ்லாம் ஏற்கவில்லை.. கடவுளுக்கு அந்தஸ்த்தில் எவரும் மகனாகவோ, இனத்தை காரணமாக காட்டி நற்செயலின்றி மிகவும் விருப்பத்திற்குரியவர்களாகவோ ஆக முடியாது. 


இவர்கள் கூறும் விதமான மகன் மற்றும் நேசத்துக்குரியவர்கள் என்றிருந்தால், கடவுள் இவர்களின் பாவங்களுக்காக தண்டிக்க மாட்டான் மிகவும் வேதனைப்படுத்த மாட்டான் அல்லவா? ஆனால் இவர்களோ பாவம் செய்தபோது கடுமையாக வேதனைக்குள்ளாகி இருக்கிறார்கள் குறிப்பாக பாபிலோனியர்களாலும் ரோமர்களாலும். அதையே குர்ஆன் 5:18 விமர்சிக்கிறது.




பழைய ஏற்பாட்டு பிதா மகன் உறவு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்தாலும், அதன் பயன்பாடு தவறாக மாறிவிட்டது என்பதால் , இஸ்லாத்தில் எங்கேயும் இறைவனை பிதா என அழைப்பதை காண முடியாது.




இதே நடைமுறை பழைய ஏற்பாட்டிலும் உண்டு. உதாரணமாக ஆரம்பத்தில் கடவுளை பாகால் (Ba'al- בעל) எனும் வார்த்தையை பயன்படுத்தி கணவர் என பாவிக்கப்பட்டுள்ளது (உதாரணமாக ஏசாயா 54:5). ஆனால் வேறு போலி கடவுள்களும் பாகால்கள் என பிரபல்யமடைந்த போது, ஓசியா காலத்தில் "இனி என்னை பாகாலீ (என் கணவன்) என அழைக்காமல், ஈசி (என் கணவன்) என அழைப்பாய் என்றும் இவ்வாறே பாகாலீம் என்பதை அவளுடைய வாயிலிருந்து இல்லாமல் போக பண்ணுவேன் என ஓசியா 2:16-17 கூறுகிறது.


பாகால் என்பது எப்படி நீக்கப்பட்டதோ , அதுபோன்றே பிதா என்பதும் நீக்கப்பட்டு இருக்கின்றது. அதற்கு பதிலாக இறைவன்/ஆண்டவன் பரிபாலிக்கிறவன் என்பதே இஸ்லாம் பாவிக்கிறது.


இதனாலேயே நாம் இதை இப்போது பாவிப்பதில்லை.




2.அகிலத்தாரின் இரட்சகனும் உலகத்தின் அதிபதியும்

குர்ஆன் அல்லாஹ்வை அகிலத்தாரின் இரட்சகன் (The Lord) (رب العالمين) என முதல் அத்தியாயத்தின் இரண்டாம் வசனத்திலேயே சொல்கிறது.


புதிய ஏற்பாட்டில் யோவான் எழுதிய சுவிசேத்தில் சாத்தானை உலகத்தின் அதிபதி/தலைவன் என இயேசு கூறுவதாக யோவான் 12:31,14:30,16:11 கூறுகிறது. பவுலும் சாத்தானை இப்பிரபஞ்சத்தின் தேவன் என்று 2 கொரிந்தியர் 4:4இல் கூறுகிறார்.


இதை வைத்து அறிவிலிகளாகவுள்ள போதகர்கள், குர்ஆன் கூறும் அல்லாஹ் என்பவன் கிறிஸ்தவம் கூறும் சாத்தான் என்று கூறி தம் சபை மக்களை ஏமாற்றுகிறார்கள்.


உண்மையில் குர்ஆன் கூறும் அகிலத்தாரின் இரட்சகன்/ஆண்டவன் என்பதற்கு விளக்கத்தை குர்ஆனே கூறியுள்ளது. மூஸா நபியிடம் அகிலத்தாரின் இறைவன் என்றால் என்ன என்று கேட்டபோது, அதன் விளக்கம் இவ்வாறு கூறப்பட்டது.


قَالَ فِرْعَوْنُ وَمَا رَبُّ الْعٰلَمِيْنَ‏


(அதற்கு) ஃபிர் அவ்ன் “அகிலத்தாரின் இரட்சன்” என்றால் என்ன?” என்று கேட்டான்.


(அல்குர்ஆன் : 26:23)




قَالَ رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا اِنْ كُنْتُمْ مُّوْقِنِيْنَ‏




(அதற்கு) “நீங்கள் உறுதிகொண்டவர்களாக இருப்பின் வானங்கள் மற்றும் பூமி அவை இரண்டிற்கும் மத்தியிலுள்ளவை ஆகியவற்றின் இரட்சகன்” என்று (மூஸா கூறினார்),.


(அல்குர்ஆன் : 26:24)




அதாவது வானங்கள் மற்றும் பூமி ஆகியவற்றுக்கும் அவற்றுக்கிடையிலுள்ள அனைத்திற்கும் இரட்சகன்/ஆண்டவன் (The Lord) என்பதே அதன் அர்த்தம்.


அதாவது அல்லாஹ்வை தவிர மற்ற அனைத்திற்கும் அல்லாஹ்வாகிய அவன் இறைவனாக இருக்கிறான் என்பதே அர்த்தம்.




இப்பெயரை வைத்து சாத்தான் என கூறுவதானால் பிதாவையும் சாத்தான் என்று தான் கூற வேண்டும்.


ஏனெனில் இயேசுவும் வானம் பூமியின் ஆண்டவர் என பிதாவை கூறுகிறார்:


“அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.”


மத்தேயு 11:25


அரபியில் (رب السماء والارض)-வானம் பூமியின் இரட்சகன்


அப்படிப் பார்த்தால் பிதாவை தான் இயேசு சாத்தானே என்று இங்கே கூப்பிடுகிறாரா?


அதேபோல் பவுலும் அப்போஸ்தலர் 17:24இலே இதே வார்த்தையை தேவனுக்கு பாவிக்கிறார்.


உண்மையான இறைவனை தவிர , வானம் பூமியிற்கு வேறு இறைவனோ இரட்சகனோ அதிபதியோ இருக்க முடியாது .


ஆகவே மாபெரும் அறிவீனத்தினாலேயே இவர்கள் இவ்வாறு பொய் கூறுகிறார்கள்.


3.ஏன் சாத்தானை உலகின் அதிபதி என்றும் பிரபஞ்சத்தின் தேவன் என்றும் மரணத்தின் அதிபதி என்றும் கிறிஸ்தவ புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் கூறுகிறார்கள்?



புதிய ஏற்பாடு சாத்தானை வழிகெடுப்பதற்காகவேண்டி பூமியில் சகல ராஜ்யங்களின் அதிகாரம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறுகிறது.(லூக்கா 4:5-6) அவனை பணிந்து கொண்டால், இயேசுவுக்கும் அவன் தருவதாக கூறியதாக அவ்வசனங்கள் கூறுகின்றன.


ஆனால் பொதுவாக புதிய ஏற்பாடு இயேசுவையும் விசுவாசிகளையும் பரிசுத்த ஆவியையும் உலகத்தில் இருந்தாலும் உலகத்தாராக கருதவில்லை . மாறாக கெட்டவர்களை அவிசுவாசிகளை தான் உலகத்தார் என்று கூறுகிறது.


“நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது.” யோவான் 17:14


“நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது”.யோவான் 15:19


“உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.”யோவான் 14:17


இதேபோல் 1 யோவான் 3:1,13 யிலும் இவை கூறப்பட்டுள்ளது 


(சாத்தான் முன்பு தேவதூதனாக இருந்ததாக கருதி, அவனையும் அவனது தூதர்களையும் வானலோக அதிகாரப்பிரபு , வானலோக பொல்லாத ஆவிகள் என்றெல்லாம் பவுல் எழுதியுள்ளார் -எபேசியர் 2:2; 6:12)


அதாவது விசுவாசிகள் அல்லாதோரை உலகத்தார் மற்றும் உலகம் என்ற அர்த்தத்தில், அவர்களின் மீது அதிகாரத்தை சாத்தான் செலுத்துகிறான் என்ற ரீதியில் சாத்தானை உலகின் அதிபதி என்றும் பிரபஞ்சத்தின் தேவன் என்றும் கூறுகின்றன.




அத்தோடு மரணம் பாவத்தினால் வந்ததாக வருவதாக பவுலும் அவரை சார்ந்தவர்களும் நம்பியதால் (ரோமர் 5:12), மரணத்தின் அதிபதியாக சாத்தானை எபிரேயர் 2:14 கூறுகிறது. 


(ஆனால் உண்மையில் மரணிக்க செய்கிறவர் கொல்லுகிறவர் தேவன் ஒருவரே - உபாகமம் 32:39, 1 சாமுவேல் 2:6)


ஆகவே இவற்றை அறியாமல் உலருவது நியாயமல்ல.




4.படைப்புகளின்மீது சத்தியம் செய்வது

அல்லாஹ் குர்ஆனில் படைப்புகளின் மீது சத்தியம் செய்கிறான். ஆனால் கர்த்தரோ தன்னைவிட பெரியவர் இல்லாததால் தன் மீதே ஆணையிட்டார் (எபிரேயர் 6:13). அதனால் இது நம் தேவனாக இருக்க முடியாது என தற்குரித்தனமாக பேசி தம் மதத்தவர்களை மூடர்களாக்குகின்றனர்.


முதலில் இறைவன் செய்பவை பற்றி அவன் விசாரிக்கப்பட மாட்டான். இவர்கள் தான் விசாரிக்கப்படுவார்கள் (குர்ஆன் 21:23).


இறைவன் தன் படைப்புகள் மீது சத்தியம் செய்ய பூரணமாக உரிமை படைத்தவன். ஏனெனில் அவன் தான் விரும்பியதை கட்டளையிடுவான் சட்டமாக்குவான் (குர்ஆன் 5:1). படைப்புகளால் இறைவனுக்கு சட்டம் போட முடியாது.


வேடிக்கையாக எபிரேயர் 6:13ஐ எழுதிய நபர் பழைய ஏற்பாட்டை எப்போதும் தப்பு தப்பாக படித்து கதை சொல்பவர். உதாரணமாக 


*நோயாளி தேவனிடம் செய்யும் ஜெபமான சங்கீதம் 102:25-27ஐ அப்படியே தேவன் தன் மகனிடம் சொன்னது என உருட்டுவார் (எபிரேயர் 1:10-12). 


*சேவகன் தன் ராஜாவை புகழ்ந்து பாடிய சங்கீதம் 45ஐ தேவன் தன் மகனை குறித்து கூறியதாக (எபிரேயர் 1:8-9) உருட்டுவார். .


*ஏசாயா தன்னை குறித்து சொல்வதை (ஏசாயா 8:18) இயேசு ஏசாயா மூலம் பேசியதாக உருட்டுவார் (எபி 2:13),


* தாவீது தன்னை குறித்து சங்கீதம் 22:22இலே கூறுவதை இயேசு தன்னை குறித்து கூறவுதாக உருட்டுவார் (எபி 2:12). 


*மெல்கிசேதேக் பற்றி வம்சவரலாறு பிறப்பு மரணம் பற்றி தோராவில் இல்லாததால் , அவர் தாய் தகப்பனற்றவர் ஆரம்பமும் முடிவும் இல்லாதவர் தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவன் என உருட்டுவார் (எபி 7:3). 


* நான் அவர்களின் நாயகராக இருந்தேன் என எரேமியா 31:32 உள்ளதை நான் புறக்கணித்தேன் என உருட்டுவார் (எபி 8:9). 


*என் செவிகளை திறந்தீர் என தாவீது வேண்டுவதை (சங்கீதம் 40:6) , அப்படியே எனக்கு சரீரத்தை ஆயத்தம் பண்ணினீர் என இயேசு சொன்னதாக உருட்டுவார் (எபி 10:5).. 


இப்படிப்பட்ட நபரே இதன் ஆசிரியர். அதாவது வேதத்தை எப்படி படிக்க கூடாது என்பதற்கு சிறந்த உதாரணமே இவர் தான்.


வேடிக்கையாக தேவன் தன் படைப்பாகிய யாக்கோபின் மகிமையின் மீது ஆணையிட்டுள்ளார்.


அவர்கள் செய்கைகளையெல்லாம் நான் ஒருபோதும் மறப்பதில்லையென்று கர்த்தர் யாக்கோபுடைய மகிமையின்பேரில் ஆணையிட்டார்.


ஆமோஸ் 8:7


இதுவும் கர்த்தர் என் கிறிஸ்தவர்கள் உருட்டுவார்கள். ஆனால் அதே ஆமோஸ் 6:8இலே கர்த்தர் இதே யாக்கோபின் மகிமையை (மேன்மை) வெறுப்பதாக சொல்கிறார்.


அப்படியென்றால் தன்னை தானே வெறுத்துக்கொள்கிறாரா என்ன? 


மாறாக யாக்கோபின் மகிமை என்பது இஸ்ரவேலர் தம்மை உயர்வாக கருதுவதை குறிக்கிறது. அதாவது பிக்காளித்தனம். அதன்மீது தான் கர்த்தர் ஆணையிட்டார்.


கர்த்தரே இப்படி ஆணையிட்டுருக்க எபிரேய ஆசிரியர் இதை ஒழுங்காக படிக்காமல் எழுதியதை கர்த்தரே சொல்வதாக உருட்டுவது சரியல்ல


5.பிதாவும் சாத்தானும்

பழைய ஏற்பாட்டில் தேவனது சித்தப்படி தேவனால் அதிகாரம் கொடுக்கப்பட்டு, தேவனையும் ஏவக்கூடியவனாக சாத்தானை சித்தரிக்கப்படுகிறது. அத்தோடு சாத்தான் செய்த தீங்குகளை தேவன் செய்த தீங்குகள் என்றும் சாத்தான் ஏவியதை தேவன் ஏவியதாக கூறப்படுகின்றன.


அ.உலகில் நினைத்தபடி சுற்றிவர தேவனோடு கருத்துப்பரிமாறி தேவனையே ஏவிவிடுபவனாக:


1.பின்னொருநாளிலே தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றான். 


2.கர்த்தர் சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார்; சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான். 


3.அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: நீ என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமான மனுஷனாகிய அவனைப்போல பூமியில் ஒருவனுமில்லை; முகாந்தரமில்லாமல் அவனை நிர்மூலமாக்கும்படி நீ என்னை ஏவினபோதிலும், அவன் இன்னும் தன் உத்தமத்திலே உறுதியாய் நிற்கிறான் என்றார். 


4.சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: தோலுக்குப் பதிலாகத் தோலையும், தன் ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும், மனுஷன் கொடுத்துவிடுவான். 


5.ஆனாலும் நீர் உம்முடைய கையை நீட்டி, அவன் எலும்பையும் அவன் மாம்சத்தையும் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும் என்றான்.


6. அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: இதோ, அவன் உன் கையிலிருக்கிறான்; ஆகிலும் அவன் பிராணனைமாத்திரம் தப்பவிடு என்றார். 


7.அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால் அவனை வாதித்தான்.


யோபு 2:1-7


சாத்தான் ஏற்படுத்திய இந்த தீங்குகளை தேவன் ஏற்படுத்தியதாக அதே யோபு புத்தகம் கூறுகிறது:


அப்பொழுது அவனுடைய எல்லாச் சகோதரரும் சகோதரிகளும், முன் அவனுக்கு அறிமுகமான அனைவரும் அவனிடத்தில் வந்து, அவன் வீட்டிலே அவனோடே போஜனம்பண்ணி, கர்த்தர் அவன்மேல் வரப்பண்ணின சகல தீங்கினிமித்தம் அவனுக்காக அங்கலாய்த்து, அவனுக்கு ஆறுதல் சொல்லி, அவரவர் ஒவ்வொரு தங்கக்காசையும், அவரவர் ஒவ்வொரு பொன் ஆபரணத்தையும் அவனுக்குக் கொடுத்தார்கள்.


யோபு 42:11




ஆ.சாத்தான் ஏவியதை தேவன் ஏவியதாக பைபிள் சொல்வது:


2 சாமுயேல் 24:1 TCV


[1] யெகோவாவின் கோபம் மறுபடியும் இஸ்ரயேலுக்கு எதிராக மூண்டது, அவர் அவர்களுக்கு விரோதமாய் தாவீதை ஏவி, “நீ போய் இஸ்ரயேலரையும், யூதாவையும் கணக்கிடு” என்றார்.


https://bible.com/bible/2730/2sa.24.1.TCV


சாத்தான் தான் அதை செய்ய தூண்டினார்


1 நாளாகமம் 21:1 TCV


[1] சாத்தான் இஸ்ரயேலருக்கு எதிராக எழும்பி, இஸ்ரயேலரைக் கணக்கிடும்படி தாவீதைத் தூண்டினான். 


https://bible.com/bible/2730/1ch.21.1.TCV.


இ.வஞ்சிப்பவனாக சாத்தானையும் பாம்பையும் (ஆதி 3:13,வெளி 12:9) சொல்லும் அதே பைபிள் தான் தேவனும் வஞ்சிப்பவர் ,வஞ்சகத்தை அனுப்பி பொய்யை நம்பவைப்பவர் (எரேமியா 4:10, 2 தெசலோனிக்கேயர் 2:11-12) என்று சொல்கிறது.


ஈ.சாத்தான் தான் வழிகெடுப்பவன் என்று சொல்லும் அதே பைபிளில் தான் தேவனும் வழிகெடுப்பவர் (எசேக்கியேல் 20:25-26, 2 தெசலோனிக்கேயர் 2:11-12, ஏசாயா 63:17, யோவான் 12:40) என்கிறது


உ.சாத்தானே பொய்யின் பிதா என்றும், ஆதிமுதல் கொலைகாரன் (யோவான் 8:44) சொல்லும் அதே பைபிள் தான், தேவன் தான் பொய் பேசும் ஆவியை அனுப்புவார் (1 இராஜாக்கள் 22:18-23) என்றும் பொய்யை விசுவாசிக்க செய்வார் (2 தெசலோனிக்கேயர் 2:12) என்றும், குழந்தைகளை பலி கொடுக்க வைத்தவர் (எசேக்கியேல் 20:25-26) என்றும், குழந்தைகளையும் ஈவிரக்கமின்றி கொல்ல சொன்னவர் (1 சாமுவேல் 15:3, உபாகமம் 20:16-17) என்றும் அவரே கொல்லுகிறவர் (உபாகமம் 32:39, 1 சாமுவேல் 2:6) என்றும் சொல்கிறது.


இப்படி கணக்கில்லாமல் லிஸ்ட் போடுவதற்கு எம்மாலும் முடியும்.


ஆகவே இவற்றையும் கணக்கில் கொண்டு இவர்கள் பேச வேண்டும் 


---

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்