தவ்ராத் தான் பழைய ஏற்பாடாக?

 தவ்ராத் தான் பழைய ஏற்பாடா?

--------------------------------------------------------------------------------




பொதுவாக பாமர கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டை காட்டி இது தான் தவ்ராத் என்றும் புதிய ஏற்பாட்டை காட்டி இது தான் இன்ஜீல் என்றும் கதைவிடுவார்கள்.. பாமர முஸ்லிம்கள் கூட அவ்வாறு நம்பும் நிலையில் தான் உள்ளார்கள் . 


இதில் வேடிக்கை என்னவென்றால் கிறிஸ்தவர்கள் , முகம்மது நபியும் நாமும் தவ்ராத்தை பின்பற்றாதிருக்கிறார்கள் என்று மடத்தனமான வாதத்தையும் சிலபோது முன்வைக்கிறார்கள். உதாரணமாக ஒட்டக இறைச்சி விசயத்தில் இவ்வாறு குற்றம் சாட்டுகின்றனர். ஏனெனில் முஸ்லிம்கள் ஒட்டக இறைச்சி சாப்பிடுவர். ஆனால் யூதர்களுக்கு அது ஹராம் ஆகும். ஆகவே இவற்றை விரிவாக ஆராய்வதற்கு சில பகுதிகளாக பிரித்து பார்ப்போம்.


உப பிரிவுகள்

அ.தவ்ராத் என்பது யூத நம்பிக்கை படி என்ன?

ஆ.இஸ்லாமிய நம்பிக்கை படி தவ்ராத் என்பது என்ன?

இ.பழைய ஏற்பாட்டு பிரகாரம் தோரா என்பது என்ன?

ஈ.புதிய ஏற்பாட்டின்படி தோரா என்ன?

உ.தற்போதுள்ள தோராவின் நிலை.

ஊ.தோராவை முஸ்லிம்கள் எவ்வாறு நம்ப வேண்டும்?

எ.தவ்ராத்தை நாம் பின்பற்ற வேண்டுமா?


ஒவ்வொன்றாக பார்ப்போம்:


*****************************************






அ. தவ்ராத் என்பது யூத நம்பிக்கை படி எது?



யூத நம்பிக்கை பிரகாரம் அவர்கள் தம் வேதத்தை "தநாக் " என கூறுவார்கள்.


அதிலுள்ள "த" என்பது தவ்ராத்தையும், "ந" என்பது நவியீம் (தீர்க்கதரிசிகள்/நபிமார்கள். உதாரணமாக ஏசாயா, எசேக்கியேல்,எரேமியா, சகரியா போன்ற புத்தகங்கள்), "க" என்பது கித்வீம் என்பதை குறிக்கும். அதாவது ஏனைய எழுதப்பட்ட புத்தகங்களை இது குறிக்கும்.




தவ்ராத் என இவர்கள் கூறுவது பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்களை ஆகும்.


அதாவது- ஆதியாகமம் (Genesis) , யாத்திராகமம் (Exodus) , லேவியராகமம் (Leviticus), எண்ணாகமம் (Numbers), உபாகமம் (Deuteronomy) ஆகிய ஐந்து புத்தகங்களை சேர்த்து தவ்ராத் என்கிறார்கள்.


ஆதியாகமம் என்பது உலக படைப்பு முதல் யோசேப்பு வரையான காலம் வரைக்கும் கூறுகிறது. அதாவது இஸ்ரேலியர் எகிப்தில் குடியேறும் வரையான கதையை கூறுகிறது.


யாத்திராகமம் என்பது , இஸ்ரேலியர் எகிப்தில் ஒடுக்கப்பட்டதையும் அங்கே மோசே தோன்றி இஸ்ரேலியர்களை இரட்சித்து எகிப்திலிருந்து அழைத்துக்கொண்டு சென்றபோது நடந்த நிகழ்வுகளையும் கூறுகிறது. இடையிடையே சட்டங்கள் கூறப்படுகின்றன.


லேவியராகமம் இதில் பெரும்பாலும் பலிகள் பற்றி கூறப்படுகின்றது. இடையிடையே சட்டங்கள் அதிகமாக கூறப்படுகின்றதோடு சில நிகழ்வுகளும் கூறப்படுகின்றன. அவை கூட சட்டங்களோடு சம்பந்தப்பட்டதாகவே இருக்கும்.



அடுத்து, எண்ணாகமம், இதில் இவர்களது எண்ணிக்கை தொடர்பாக கூறப்பட்டிருக்கிறது. யாத்திராகமம் புத்தகத்தில் சொல்லப்பட்ட அதே நிகழ்வுகள் சிறு மாற்றங்களோடும் முரண்பாடுகளோடும் இதிலும் எழுதப்பட்டுள்ளது. யாத்திராகமத்தில் சொல்லப்படாத நிகழ்வுகளும் இதில் எழுதப்பட்டுள்ளன.


உபாகமம்- இதுவே தோராவின் கடைசி புத்தகம். இதில் மோசே மரணித்து அடக்கம் செய்யப்பட்டது வரை கூறப்பட்டுள்ளது. இது யாத்திராகமம் , எண்ணாகமம் கூறிய நிகழ்வுகளை சுருக்கமாக கூறுவதோடு முரண்பட்டும் கூறுகிறது. இதிலும் அதிக சட்டங்கள் கூறப்பட்டுள்ளன.

*****************************************


ஆ. இஸ்லாமிய நம்பிக்கை பிரகாரம் தவ்ராத் என்பது என்ன?




தவ்ராத் என்பது மூஸா நபி அவர்களுக்கு இறைவனால் எழுதிக்கொடுக்கப்பட்ட வேதம் ஆகும். (புகாரி 4476,6614, 4736,

அதாவது தவ்ராத் என்பது இறைவனால் மூசா நபியிற்கு எழுதிக்கொடுக்கப்பட்ட வேதம் ஆகும்.

அதில் நேர்வழியும் ஒளியும் உண்டு.(5:44)

*****************************************




இ.பழைய ஏற்பாட்டு பிரகாரம் தவ்ராத் 



இதை நியாயப்பிரமாணம் என சொல்வார்கள்.. எபிரேய பாசையில் தோரா எனப்படும்.



1.தேவன் எழுதி கொடுத்தது


“"அவர் உங்களுக்கு எழுதிக்கொடுத்த திட்டங்களின்படியும், முறைமைகளின்படியும், நியாயப்பிரமாணத்தின்படியும், கற்பனைகளின்படியும், நீங்கள் சகல நாளும் செய்கிறதற்குக் கவனமாயிருந்து அந்நிய தேவர்களுக்குப் பயப்படாதிருங்கள்."”

  — 2 இராஜாக்கள் 17:37 (TBSI)


இதன்படியும் தோரா என்பது தேவன் எழுதி கொடுத்தது ஆகும்.



2.மோசே மூலமாக தேவன் இஸ்ரேலுக்கு கொடுக்கப்பட்டதாகும்.


“"நான் மோசேயைக்கொண்டு இஸ்ரவேலுக்குக் கொடுத்த சகல நியாயப்பிரமாணத்திற்கும் கட்டளைகளுக்கும் நியாயங்களுக்கும் ஒத்தபடியே அவர்களுக்கு நான் கற்பித்தவைகளையெல்லாம் அவர்கள் செய்யச் சாவதானமாய் இருந்தார்களேயாகில், நான் இனி அவர்கள் காலை அவர்கள் பிதாக்களுக்கு நிலைப்படுத்திவைத்த தேசத்திலிருந்து விலகப்பண்ணுவதில்லையென்றும், தேவன் தாவீதோடும் அவன் குமாரனாகிய சாலொமோனோடும் சொல்லியிருந்த தேவனுடைய ஆலயத்தில்தானே, அவன் தான் பண்ணுவித்த விக்கிரகமாகிய சிலையை ஸ்தாபித்தான்."”

  — 2 நாளாகமம் 33:8 (TBSI) மேலும் 34:14

நெகேமியா 8:1, 1:29


3.அது கர்த்தருடைய தோரா -எஸ்றா 7:6, நெகேமியா 8:8



4.முதலில் மோசே இதை எழுதினார். பிறகு அதை யோசுவா பேர்த்து எழுதினார்.


“இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக மோசே எழுதியிருந்த நியாயப்பிரமாணத்தை அவன் அங்கே கற்களில் பேர்த்தெழுதினான்.”

  — Joshua 8:32 மேலும் 24:26




இதன்படி தேவன் எழுதிக் கொடுத்ததை, மோசே பேர்த்து எழுத பிறகு யோசுவா பேர்த்தெழுதினார் என்று தெளிவாகிறது.


*****************************************


ஈ.புதிய ஏற்பாட்டின்படி தோரா 


பவுல் இதை தேவன் நேரடியாக கொடுத்ததாக நம்பவில்லை.. தேவதூதன் மூலமாக மத்தியஸ்தனாகிய மோசேயிடம் கொடுக்கப்பட்டது என்கிறார்.


“"அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன? வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டு, தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது."”

  — கலாத்தியர் 3:19 (TBSI)


ஸ்தேவானும் ஆவி தூண்டி இவ்வாறு சொன்னதாகவே அப்போஸ்தலர் சொல்கிறது


“"தேவதூதரைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கைக்கொள்ளாமற்போனீர்கள் என்றான்."”

  — அப்போஸ்தலர் 7:53 (TBSI)



இதன்படி நியாயப்பிரமாணமாகிய தோரா என்பது தேவதூதன் மூலமாக மோசேயிடம் கொடுக்கப்பட்டது என்பதே புதிய ஏற்பாட்டு நம்பிக்கை



உ. தற்போதுள்ளது தோராவின் நிலைப்பாடு





 மோசேயிற்கு தேவன் எழுதிக் கொடுத்த அல்லது புதிய ஏற்பாட்டு பிரகாரம் தேவதூதன் மூலமாக மோசேயிடம் கொடுக்கப்பட்டதாக இது இருக்கிறதா?



நிச்சயமாக இல்லை.. மாறாக மோசேயை சம்பந்தமில்லாத நபர் போல் படர்க்கையிலேயே அதிகமாக எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக மோசேயின் மரணமும் அவர் அடக்கம்ஜபண்ணப்பட்டதும், மக்கள் துக்கம் கொண்டாடியதும் கூட எழுதப்பட்டுள்ளது (உபாகமம் 34)


ஆக அநேகமானவை மோசே அல்லாத நபர் மூலமாக மோசேயோடு சம்பந்தப்பட்ட வரலாறே இதில் எழுதப்பட்டுள்ளது.



தோராவுக்கு விளக்கமாக எழுதப்பட்ட பகுதிகளும் தோராவில் இணைக்கப்பட்டுள்ளது என்பதே இதிலிருந்து தெளிவாகிறது.


யூத போதகர்களது விளக்கங்களும் அவர்கள் அறிந்துவைத்திருந்த கதைகளும் இதில் புகுந்துள்ளது.




ஆனாலும் உண்மைக்கு வழிகாட்டுவதாக அது உள்ளது.. அதாவது இறைவனது தவ்ஹீதை பேசக்கூடியதாக இன்றும் அது இருக்கிறது. இதிலுள்ள குறைபாடு இறைவன் மோசேயிற்கு கொடுத்து மோசே எழுதி பின் யேசுவா எழுதியதற்கும் பின் வேறு மக்கள் எழுதியதிலேயே அவரவர் தம் குறிப்புகளாக தமக்கு தெரிந்ததை விளக்கமாக தமது பிரதிகளில் எழுதியிருக்கலாம். 


அடிவாங்கி உதைவாங்கி திரிந்த இவர்கள் அதுவும் தேவன் மோசேயிற்கு சொன்னதாக நினைத்திருப்பார்கள்!!




உதாரணமாக,


1.தேவன் தான் மனிதனை பூமியில் படைத்தற்காக மனஸ்தாபப்பட்டார் -ஆதி 6:5-6 என்று சொல்கிறது.


தேவன் முக்காலமும் அறிந்தவர். அவர் படைக்க முன்பே மனிதன் அக்கிரமம் செய்வான் என்று அவருக்கு தெரியாமல் இருக்குமா? தெரிந்தும் தான் செய்ததை நினைத்து மனஸ்தாபப்படுவதற்காக படைத்தாரா என்ன?


நிச்சயம் இது பிற்காலத்தில் வந்த பேதமை கொண்ட ரபீகள் விளக்கமாக எழுதியிருக்க வேண்டும்..



2.விபச்சாரக்கதைகள் எழுதப்பட்டுள்ளது.


உதாரணமாக தந்தைக்கு மது கொடுத்து பிள்ளை பெற்ற புத்திரிகள் என்று லோத்தின் மகள்களை சித்தரிக்கிறது -ஆதி 19:30-36


இது லோத்தின் பிள்ளைகளோடு கொண்ட குரோதத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். அல்லது தம் கற்பனை கதைகளை விளக்கமாக சொருகியிருக்கலாம்.


அதேபோல யூதாவின் மகன் ஓனான் என்பவர் தன் இறந்த சகோதரனின் மனைவியை சேர்ந்த போது விந்தை கீழே சிந்தியதற்காக தேவன் கொன்றார் என எழுதப்பட்டுள்ளது. (ஆதி 38:8-10)


இறந்த சகோதரனின் மனைவியை முடிக்கும் சட்டமே இதற்கு 400 வருடம் கழித்து தான் கொடுக்கப்பட்டது.


அதுவும் பிற்காலத்தில் கொடுக்கப்பட்ட சட்டத்திற்கமைய முற்காலத்திலேயே தண்டனையும் வழங்கப்பட்டுள்ளதாக எழுதியுள்ளார்கள்.


அதேபோல யூதா தன் மருமகளோடு அவளென அறியாமல் விபச்சாரம் செய்ததாகவும் அதற்கு மட்டும் தேவன் வாயே திறக்கவில்லை என்பது போன்றும் எழுதப்பட்டுள்ளது (அதே ஆதி 38)



3.தேவனது பெயரில் அநீதியான சட்டம்:


யூதன் தன் சகோதரனான சக யூதனிடம் வட்டி வாங்க கூடாது.. ஆனால் அந்நியனிடம் வட்டி வாங்கலாம் (உபாகமம் 23:19-20)


உன் சகோதரனிடம் வட்டி வாங்காதே என்ற போதனைக்கு விளக்கமாக அந்நியனிடம் நீ வாங்கினால் தப்பு கிடையாது என்பதை யாரோ புகுத்தியிருக்க வேண்டும்.



ஏனெனில் ஒட்டுமொத்தமாக வட்டிக்கு கொடுப்பதையே பாவமாக எசேக்கியேல் 18:8,13,17, 22:12 சொல்கிறது.


ஆகவே யாரோ இதில் விளக்கம் எனும் பெயரில் தம் மடத்தனமான கருத்தை எழுதியிருக்கிறார்.



4.மாட்டு கன்றின் சிலை செய்து வணங்குவித்த ஆரோன்:



ஆரோன் தான் மாட்டுக்கன்றின் சிலை செய்து வணங்குவித்த நபர் என்று இந்த தோரா சொல்கிறது. (யாத்திராகமம் 32:1-5, உபாகமம் 9:20)


ஆனால் சங்கீதம் 106:19, நெகேமியா 9:18 ஆகியவை மக்கள் தான் செய்தார்கள் என்கிறது. 


ஆரோன் அவர்களுக்கு பொறுப்பாக வைக்கப்பட்டிருந்ததால், ஆரோன் தான் இதை செய்வித்தார் என்று பேதமை கொண்ட ரபீகள் எழுதி வைத்திருக்கிறார்கள்.. அதுவும் இறுதியில் வேதத்தின் பகுதியாகிவிட்டது.




ஆகவே தோராவில் இவர்களது கற்பனைகளும் விளக்கங்களாக புகுத்தப்பட்டு அதுவும் வேதம் போன்றே காட்சியளிக்கின்றது.






ஊ. தோராவை முஸ்லிம்கள் எவ்வாறு நம்பவேண்டும்?



இறைவன் அருளிய தவ்றாத்தில் நேர்வழியும் பேரொளியும் உண்டு.


இறைவன் இறக்கிய தவ்றாத்தின் பகுதிகளும் இவர்கள் கூறும் தவ்ராத்தில் உண்டு.



ஆகவே இறைவன் அருளியதை நம்புகிறோம் என கூறி, இறைவன் மூஸா நபியிற்கு தவ்ராத்தை கொடுத்தான் என்றும் அதில் நேர்வழியும் பேரொளியும் உண்டு என நம்பினாலே போதுமானது,


 


"வேதக்காரர்கள் (யூதர்கள்) தவ்ராத்தை எபிரேய பாசையில் ஓதி , முஸ்லிம்களுக்கு அதை அரபுமொழியில் விளக்கம் கூறுவோராக இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேதக்காரர்களை உண்மைப் படுத்தி நம்பவும் வேண்டாம் மேலும் நிராகரிக்கவும் வேண்டாம்! மாறாக நாங்கள் அல்லாஹ்வையும் அவன் எங்களுக்கு இறக்கியதையும் உங்களுக்கு இறக்கியதையும் நம்பினோம் என்று கூறுங்கள் " என (முஸ்லிம்களுக்கு) சொன்னார்கள். (புகாரி 7362)




ஆகவே அதை அடிமட்டம் வரை அலச தேவையில்லை.. அல்லாஹ் தவ்ராத்தை இறக்கினான் என்பதை நம்பினாலே போதுமானது





எ.தவ்ராத்தை முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டுமா?



நிச்சயமாக கிடையாது..


ஏனெனில் மூசா நபி உயிரோடிருந்தாலும் அவர் முகம்மது நபியை பின்பற்றுவதை தவிர வேறு வழி இல்லை.



அதுமட்டுமின்றி ஈசா நபி வந்தாலும் அவரும் முகம்மது நபியின் ஷரீஅத் படியே தீர்ப்பளிப்பார்.



وَاِذْ اَخَذَ اللّٰهُ مِيْثَاقَ النَّبِيّٖنَ لَمَاۤ اٰتَيْتُكُمْ مِّنْ كِتٰبٍ وَّحِكْمَةٍ ثُمَّ جَآءَكُمْ رَسُوْلٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَـتُؤْمِنُنَّ بِهٖ وَلَـتَـنْصُرُنَّهٗ ‌ قَالَ ءَاَقْرَرْتُمْ وَاَخَذْتُمْ عَلٰى ذٰ لِكُمْ اِصْرِىْ‌ قَالُوْۤا اَقْرَرْنَا ‌ قَالَ فَاشْهَدُوْا وَاَنَا مَعَكُمْ مِّنَ الشّٰهِدِيْنَ‏

மேலும், அல்லாஹ் நபிமார்களிடம்: வாக்குறுதி வாங்கிய சமயத்தில் (அவர்களிடம்,) “வேதத்தையும், ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுத்து, (இதற்குப்) பின்னர், உங்களிடமுள்ளதை உண்மைப் படுத்தும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால், அவரை நீங்கள் உண்மையாக விசுவாசித்து, நிச்சயமாக அவருக்கு உதவி செய்வீர்கள் (என்று கூறி, “இதனை) நீங்களும் உறுதிப்படுத்தினீர்களா?” இதன்மீது என்னுடைய வாக்குறுதியை எடுத்துக் கொண்டீர்களா?” என்று கேட்டதற்கு, அவர்கள் “நாங்கள் (அதனை) உறுதிப்படுத்துகிறோம்” என்றே கூறினார்கள். (“இதற்கு) நீங்கள் சாட்சியாக இருங்கள், நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் உள்ளவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.

(அல்குர்ஆன் : 3:81)




ஆகவே தவ்றாத்தை நாம் பின்பற்ற தேவை இல்லை... குர்ஆன் போதுமானது.



மேலும் தவ்றாத் இஸ்ராயீலியர்களுக்காகவே கொடுக்கப்பட்டதேயன்றி , அனைவருக்குமானதாக அல்ல...


இதையே பழைய ஏற்பாடும் சொல்கிறது (2 நாளாகமம் 33:8 , 2 இராஜாக்கள் 17:37).





சோ தவ்ராத் துல்லியமான நிலையில் தற்போது இருந்தாலும் அதை நாம் பின்பற்ற வேண்டியதில்லை... காரணம் அது நாம் பின்பற்றுவதற்கு மோசேயிற்கு தேவன் கொடுக்க வில்லை.



ஆகவே தவ்றாத் என்பது கடவுள் எழுதிக் கொடுத்ததை மோசே எழுதி அதை மீண்டும் பிறகு யோசுவா எழுதியதாகும்.


அதனோடு பிற கருத்துக்களும் விளக்கங்களும் பொய்களும் கலந்தே தற்போது உள்ளது.


அது தூய்மையான நிலையில் இருந்தாலும் அதை நாம் பின்பற்ற வேண்டியதில்லை!!!!




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்