ஈசா நபி பற்றி குர்ஆன் ஹதீஸ்
ஈஸா நபி பற்றி குர்ஆன் ஹதீஸ்
----------------------------------------------------------
ஈசா நபி குறித்து பைபிளே அவரை தேவனது தாசன் (ஊழியன்) (மத் 12:18) என்றும் , பிதா ஒருவரே மெய்யான தேவன் (யோவான் 17:3) என்றும் தன்னை தேவனுடைய பையன் என்று சொல்ல காரணம், தேவனால் அனுப்பப்பட்டும் பரிசுத்தம் பண்ணப்பட்டும் இருப்பதால் தான் என்றும் வேதத்தை பெற்றவர்களை தேவர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவரே சொல்வதாக (யோவான் 10:33-36) எழுதப்பட்டிருந்தாலும், தெளிவாக தேவன் வேறு இயேசு வேறு என்று சொல்லப்பட்டிருந்தாலும் (வெளி 3:12, யோவான் 20:16-17, 17:3) இயேசு ஒருவரே மெய்யான தேவன் என்று கிறிஸ்தவர்கள் கூறுவார்கள். அதற்கு சான்றாக மூடலான வசனங்களையும் , புதிய ஏற்பாட்டாசிரியர்களே குழம்பிப்போய் எழுதியதையும் காட்டுகிறார்கள். அதோடு நிறுத்தாமல் ஏகத்துவத்தை போதிக்கும் இஸ்லாத்தில் கூட அவரை கடவுளாக தான் கூறப்பட்டுள்ளது என்று வாய் கூசாமல் பேசுவதோடு அதை வைத்து கதைப்புத்தகங்கள் கூட எழுதியுள்ளார்கள். ஆகவே இந்நிலை குறித்து அலசுவோம்:
1.ஈசா நபி தன்னையும் தன் தாயையும் கடவுள்களாக கூறவில்லை. மறுமையில் இறைவன் அவரிடமே இதுகுறித்து விசாரணை செய்வான்.
அதற்கு அவர் "எனக்கு உரிமையில்லாத விசயத்தை நான் நான் சொல்வதற்கில்லை , என் இறைவனும் உங்கள் இறைவனும் ஆகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்" என்று தான் கூறினேன் என்பார்.
இன்னும், “மர்யமுடைய மகன் ஈஸாவே, “அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?” என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், “நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்; என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்; நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்” என்று அவர் கூறுவார். (அல்குர்ஆன் : 5:116)
“நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), “என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்” என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை; மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்; அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்” (என்றும்); (அல்குர்ஆன் : 5:117)
(இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர்; அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீ தான்(யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்” (என்றும் கூறுவார்). (அல்குர்ஆன் : 5:118)
2.ஈசா நபி தான் அல்லாஹ் என்று கூறுபவர்கள் நிராகரித்தவர்கள். அல்லாஹ் நாடினால் ஈசாவையும் அவரது தாயையும், உலக மக்கள் அனைவரையும் அழித்துபோட முடியும்.
திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்தகையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். “மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்” என்று (நபியே!) நீர் கேளும்; வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவன் நாடியதைப் படைக்கிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 5:17 மேலும் 5:72)
3.ஈசா நபி அல்லாஹ்வை வணங்குவதற்கே சொன்னார். யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறாரோ, அவர்மீது சுவர்க்கத்தை தடை செயதுவிடுவான். அவரது தங்குமிடம் நரகமே. (அதாவது ஈசா நபியை வணங்கினால், அவர் நரகமே போவார். அவருக்கு சுவர்க்கம் தடைசெய்யப்பட்டுள்ளது)
“நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்” என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: “இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை. (அல்குர்ஆன் : 5:72)
4.ஈசா அல்லாஹ்வின் அடியார் ஆவார். அவரை நபியாக ஆக்கியிருக்கிறான். மேலும் அவரை பாக்கியம் பொருந்தியவராகவும், தொழுகையை நிலைநாட்டவும், ஸகாத் கொடுக்கவும், தாய்க்கு உபகாரம் செய்யவும் அவர் கட்டளையிடப்பட்டிருக்கிறார். அல்லாஹ்வுக்கு பிள்ளையை ஏற்படுத்திக்கொள்ள எந்த தேவையுமில்லை. அவன் தூயவன்.
அவரை குறித்து அபிப்பிராய பேதம் கொண்டு அவரை கடவுளுக்கியவர்களுக்கு மறுமையில் கேடு தான்.
“நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான். (அல்குர்ஆன் : 19:30 மேலும் 43:59)
“இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கானவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறை வேற்ற) எனக்கு வஸீய்யத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான். (அல்குர்ஆன் : 19:31)
“என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.(அல்குர்ஆன் : 19:32)
“இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்” என்று (அக்குழந்தை) கூறியது. (அல்குர்ஆன் : 19:33)
இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்); எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்). (அல்குர்ஆன் : 19:34)
அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை; அவன் தூயவன்; அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், “ஆகுக!” என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடுகிறது. (அல்குர்ஆன் : 19:35)
“நிச்சயமாக அல்லாஹ்வே (படைத்துப் பரிபக்குவப்படுத்தும்) என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருக்கின்றான்; ஆகையால், அவனையே நீங்கள் வணங்குங்கள்; இதுவே நேரான வழியாகும்” (என்று நபியே! நீர் கூறும்). (அல்குர்ஆன் : 19:36)
ஆனாலும், அவர்களிடையே இருந்த கூட்டத்தார் இது பற்றி(த் தங்களுக்குள்ளே) அபிப்பிராய பேதங் கொண்டனர். (சத்தியத்தை) நிராகரித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, அவர்கள் யாவரும் ஒன்று சேர்க்கப்படும் வலுப்பமான நாளில் கேடுதான்! (அல்குர்ஆன் : 19:37)
அவர்கள் நம்மிடத்தில் வரும் நாளில் எவ்வளவு தெளிவாகக் கேட்பார்கள், பார்ப்பார்கள்! எனினும் அந்த அக்கிரமக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இன்று இருக்கிறார்கள். (அல்குர்ஆன் : 19:38)
மேலும், (நபியே!) தீர்ப்பு அளிக்கப்படும் அந்த கைசேதப்படக்கூடிய நாளைக் குறித்து, நீங்கள் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! எனினும் அவர்கள் அதைப்பற்றிக் கலலைப்படாதவர்களாகவும், நம்பாதவர்களாகவும் இருக்கின்றார்கள். (அல்குர்ஆன் : 19:39)
5.அவர் ஒரு படைப்பு ஆவார். தனக்கு எப்படி மகன் பிறக்க முடியும் என அவரது தாய் கேட்டபோது, "இவ்வாறே, அல்லாஹ் நாடியதை படைக்கிறான்" என்று சொல்லப்பட்டது. ஆனால் யஹ்யா குறித்து கூறிய போது "தான் நாடியதை செய்கிறான்" என்று சொல்லப்பட்டது. காரணம் அழுத்தம் திருத்தமாக கூறுவதற்கு இவருக்கு மட்டும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
(அச்சமயம் மர்யம்) கூறினார்: “என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?” (அதற்கு) அவன் கூறினான்: “அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் “ஆகுக” எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.” (அல்குர்ஆன் : 3:47)
6.அவர் மர்யமின் மகன். ஒரு தூதரேயன்றி வேறில்லை. அவரும் அவரது தாயாரும் உணவு உண்ணுவோராகவே இருந்து வந்தனர்.
இவர்களால் மனிதர்களுக்கு நன்மை செய்யவோ தீங்கு செய்யவோ கூட சக்தி கிடையாது.
மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை, இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர். இவருடைய தாயார் மிக்க உண்மையானவர்; இவ்விருவரும் (மற்ற மனிதர்களைப் போல்) உணவு உண்பவர்களாகவே இருந்தனர்; அவர்களுக்கு நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு எவ்வாறு தெளிவாக்கினோம் என்பதை (நபியே!) நீங்கள் கவனிப்பீராக! அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் கவனிப்பீராக! (அல்குர்ஆன் : 5:75)
“அல்லாஹ்வையன்றி, உங்களுக்கு எந்த தீங்கையோ, நன்மையோ செய்ய அதிகாரம் இல்லாதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்?” என்று (நபியே!) நீர் கேளும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாவற்றையம்) அறிபவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 5:76)
7.இவர் அற்புதம் செய்ததெல்லாம் இறைவனது அனுமதிகொண்டேயாகும். அது அவர் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதர் என்பதற்கு ஆதாரமாகவே ஆகும்.
இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்:) “நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது” (என்று கூறினார்).
(அல்குர்ஆன் : 3:49 மேலும் 5:110)
சோதனைக்காக கெட்டவர்களுக்கும் இறந்தவரை உயிர்பிக்க வாய்ப்பளிப்பான். உதாரணமாக தஜ்ஜாலுக்கு இவ்வாய்ப்பை அளிப்பான்- புகாரி 1882
இங்கே இவர் இறைவனது தூதர் என்பதற்கு ஆதாரமாகவே இவை இவருக்கு வழங்கப்பட்டன
8.அவருக்கு மரணம் உண்டு. அவரும் மறுமையில் உயிர்த்தெழுப்பப்படுபவர்.
வேதமுடையவர்களில் எவரும் அவரது (ஈசாவின் ) மரணத்திற்கு முன் அவரை ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை; ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார்.
(அல்குர்ஆன் : 4:159)
“இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்” என்று (அக்குழந்தை) கூறியது.(அல்குர்ஆன் : 19:33)
மீள்வருகையின் பின் நாப்பது வருடங்கள் வாழ்ந்து அவர் மரணிப்பார்-அபூதாவூத் 4324
9.அவர் அல்லாஹ்வின் ஒரு வார்த்தை. அவனிடமிருந்துள்ள ஒரு ரூஹ் (உயிர்)
(மேலும், மர்யமிடம்) மலக்குகள் “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து (ஆகுக!என்ற) ஒரு வார்த்தையைக் கொண்டு உனக்கு (ஒரு மகவை அளிக்க) நன்மாராயங் கூறுகின்றான். அவரின் பெயர் மஸீஹ்_ மர்யமுடைய மகன் ‘ஈஸா’ என்பதாகும், அவர் இம்மையிலும், மறுமையிலும் மிக்க அந்தஸ்தையுடையவராகவும் (இரட்சகனுக்கு) மிக்க நெருங்கியவர்களில் ஒருவராகவும் இருப்பார்” என்று கூறியபோது. (அல்குர்ஆன் : 3:45)
இங்கே ஒரு வார்த்தையை கொண்டு நன்மாராயம் சொல்லப்படுகிறது. வார்த்தை (கலிமா) என்பது பெண்பால் ஆகும். ஆனால் பெயரை குறிப்பிடும் போது "இஸ்முஹு"- அவரது பெயர் என ஆண்பாலில் உள்ளது. இதன்மூலம் கூறப்படுவது, "ஒரு வார்த்தையை கொண்டு ஒரு பிள்ளையை நன்மாராயம் கூறுகிறான். அவருடைய பெயர் அல்மஸீஹ் மர்யமின் மகன் ஈசா என்பதாகும்" .
இங்கே அவர் மர்யமின் மகன் என்று சொல்வதன் மூலம், அவர் ஒரு படைப்பு மற்றும் இன்னொரு படைப்பால் ஈன்றெடுக்கப்பட்டவர் என்றும் அவருக்கு தாய் உண்டு என்றும் காட்டக்கூடியதாக உள்ளது.
வேதத்தையுடையவர்களே! உங்கள் மார்க்கத்தில், நீங்கள் அளவு கடந்து செல்லாதீர்கள், இன்னும், அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள், நிச்சயமாக மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ், அல்லாஹ்வுடைய தூதரும், அவனுடைய வார்த்தையும் ஆவார், அல்லாஹ், மர்யமின் பால் அதைப் போட்டான், மேலும் அவனிடமிருந்துள்ள ஓர் உயிர் ஆவார்., ஆகவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நீங்கள் விசுவாசியுங்கள், இன்னும் (வணக்கத்திற்குரிய தெய்வங்களான அவர்கள்) மூவர் என்று கூறாதீர்கள், (இவ்வாறு கூறுவதை) விட்டு விலகி விடுங்கள், (அது) உங்களுக்குத்தான் மிக்க நன்று, (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் ஒரே நாயன்தான், அவனுக்கு மகன் இருப்பதைவிட்டும் அவன் மிகப் பரிசுத்தமானவன். வானங்களில் உள்ளவை மற்றும் பூமியில் உள்ளவை அவனுக்கே உரியன- பொறுப்பேற்றுக் கொள்ள அல்லாஹ் (ஒருவனே) போதுமானவன். (அல்குர்ஆன் 4:171)
இவ்வசனத்தில் கூட இறைவன் ஈசா நபியை மர்யமின் மகன் என்றே அழைக்கிறான்.
அதாவது படைப்பாகிய இவர் ஒரு தூதர். அத்தோடு இறைவன் மர்யமின்மீது போட்ட அவனது வார்த்தை. அதாவது இந்த வார்த்தை மூலமாக அவர் உண்டானதால் இறைவனுடைய வார்த்தை என்று அழைக்கப்படுகிறார்.
மேலும் அவனிடமிருந்துள்ள ஒரு ரூஹ் (உயிர்). இறைவன் தன் தூதரான ரூஹ் எனும் ஜிப்ரீலை மர்யமிடம் அனுப்பி, அவர் மூலமாக தான் படைத்த ரூஹை மர்யமின்மீது ஊதவைத்தான். அது தான் ஈசா நபியின் ரூஹ். (19:17-19, 21:91,66:12)
இதேபோல் ஆதமாகிய முதல் மனிதருக்கோ இறைவன் தன் ரூஹிலிருந்து (உயிரிலிருந்து) நேரடியாக ஊதினான்.(15:29,38:72)
எல்லா உயிரும் அல்லாஹ்வின் படைப்பே. ஈசா நபியிற்கு இந்த விசேச நிலை காரணமாக அவனது உயிர் (ரூஹ்) என்று அழைக்கப்படுகிறார்.
எப்படி அல்லாஹ்வின் ஒட்டகம் (91:13) என்றும், அல்லாஹ்வின் (என்) வீடு என்று கஃபாவையும் (22:26, 2:125), ஆதமுடைய உருவத்தை இறைவனுடைய உருவம் (புகாரி 6227) என்றும் ஆதமில் ஊதப்பட்ட உயிரை "தன் உயிரிலிருந்துள்ளது" (15:29,38:72) என்றும் கூறப்படுவது போன்றே ஈசா நபியும் அல்லாஹ்வின் உயிரென அழைக்கப்படுகிறார்.
ஆனால் இவர்கள் கருதுவது போல் அல்ல. அதனால் தான் இறைவன் 4:171இன் தொடர்ச்சியாக,
"அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் விசுவாசம் கொள்ளுங்கள். (கடவுள்களான அவர்கள்) மூவர் என்று கூறாதீர்கள். விலகிக் கொள்ளுங்கள். (அதுவே) உங்களுக்கு நல்லது. அல்லாஹ் ஒரே இறைவன் தான்.அவனுக்கு மகன் இருப்பதை விட்டும் தூயவன்" என்று தொடர்கிறது.
இறைவனுக்கு மகன் கிடையாது. அவன் ஒரே இறைவன் தான் என்றும் , ஈசா நபி குறித்து அவரை கடவுள் என்றும் கடவுளது பையன் என்றும் கூறுவோரை தம் மார்க்கத்தில் வரம்பு மீறவேண்டாம் என்றும் கடவுள் மீது உண்மையை தவிர வேறெதுவும் கூற வேண்டாம் என்றும் எச்சரிக்கும் வசனத்தையே சில கிறிஸ்தவர்கள் தம் கருத்துக்கு ஆதாரமாக காட்டுவது வேடிக்கை.
காரணம், அவர் ஒரு படைப்பு-3:47, அவர் இறைவனது அடிமை -19:30,43:59 , அவரை கடவுளாக வணங்கியோருக்கு சுவர்க்கமே தடைசெய்யப்பட்டுள்ளது.-5:72, இறைவனுக்கு எந்த பையனும் கிடையாது.-4:171,19:35, இறைவன் நாடினால் ஈசாவையும் அவரது தாயையும் உலக மக்கள் அனைவரையும் அழித்துப் போட முடியும்.-5:17, அவரால் சுயமாக மக்களுக்கு நலவோ கெடுதியோ கூட ஏற்படுத்த முடியாது-5:76 என்றெல்லாம் தெளிவாக கூறும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு, தமக்கு அறிவில்லாத விசயத்தில் மூக்கை நுழைவிப்பது மடமையான செயலாகும்.
10. குர்ஆன் 9:31 பற்றி கிறிஸ்தவ பாமரர்களின் திரிபுக்கு பதில்:
ٱتَّخَذُوٓاْ أَحۡبَارَهُمۡ وَرُهۡبَٰنَهُمۡ أَرۡبَابًا مِّن دُونِ ٱللَّهِ وَٱلۡمَسِيحَ ٱبۡنَ مَرۡيَمَ وَمَآ أُمِرُوٓاْ إِلَّا لِيَعۡبُدُوٓاْ إِلَٰهًا وَٰحِدًا لَّآ إِلَٰهَ إِلَّا هُوَ سُبۡحَٰنَهُۥ عَمَّا يُشۡرِكُونَ
(இவ்வாறே) அவர்கள் அல்லாஹ்வையன்றித் தங்கள் அறிஞர்களையும், தங்கள் துறவிகளையும் மர்யமுடைய குமாரர் மஸீஹையும் தங்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டனர். இன்னும், ஒரே ஒரு இரட்சகனையே வணங்க வேணடுமென்றல்லாது (வேறு எதனையும்) அவர்கள் கட்டளையிடப்படவில்லை, அவனையன்றி வணக்கத்திற்குரியவன் (வேறெவரும்) இல்லை, அவர்கள் இணைவைப்பவற்றைவிட்டும் அவன் மிகவும் பரிசுத்தமானவன்.
(அல்குர்ஆன் : 9:31)
இதிலே தெளிவாக கிறிஸ்தவர்கள் , தம் மார்க்க அறிஞர்களையும், தம் துறவிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக எடுத்துக்கொண்டுள்ளார்கள் என்று எச்சரிப்பதை , சரியான மொழியறிவு இன்றி அல்லாஹ்வையும் மர்யமின் மகன் மஸீஹையும் தவிர்த்து தம் அறிஞர்களையும் தம் துறவிகளை யும் கடவுள்களாக எடுத்துக்கொண்டார்கள் என்றே வசனம் சொல்வதாக பைத்தியக்காரத்தனமான உலரியிருக்கிறார் ஒரு ஆங்கில கிறிஸ்தவர். இதை நம்பி பலர் பரப்பி திரிகிறார்கள்.
இவர்கள் கூறுவது போல் வரவேண்டுமாயின் "வல்மஸீஹிப்னி மர்யம-wal maseehi'bni maryama" என்று அரபியில் வரவேண்டும். ஆனால் அரபியில் "வல்மஸீஹப்ன மர்யம- wal maseeha'bna maryama" என்றே வந்திருக்கிறது. அதாவது "கடவுள்களாக எடுத்துக்கொண்டார்கள்" என்பதற்கு நேரடி செயற்படுபொருள்களில் ஒன்றாகவே இது வருகிறது.
அதுமட்டுமின்றி அதில் "மர்யமின் மகன்" என்று கூறி அவர் ஒரு மனிதர் மற்றும் ஒரு பெண்ணின் பையன் என்றும் தெளிவாக அவரது நிலையை குறிப்பிடுகிறதோடு, "அல்லாஹ்வாகிய அவனை தவிர வேறு இறைவன் கிடையாது" என்றும் அதே வசனத்திலேயே உள்ளது. இதையெல்லாம் புரியாமல் சிறு குழந்தை போன்று மற்றவர் துப்பியதை விழுங்குவது நல்லதல்ல.
11.அவர் சிலுவையில் அறையப்படவுமில்லை. கொல்லப்படவுமில்லை. மாறாக அல்லாஹ் அவரை தன் பக்கம் உயர்த்திக் கொண்டான். அவரது மரணத்திற்கு முன் அவரை மறுத்து வாழும் யூதர்கள் நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள்
இன்னும், “அல்லாஹ்வுடைய தூதர் மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹை நிச்சயமாக நாங்கள் கொலை செய்து விட்டோம்” என்று அவர்கள் கூறியதன் காரணமாகவும் (அவர்களை அல்லாஹ் சபித்துவிட்டான்), அவரை அவர்கள் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. எனினும், அவர்களுக்கு (ஈஸாவின் தோற்றத்தைப் பெற்ற) ஒருவனை ஒப்பாக்கிக் காண்பிக்கப்பட்டது, இன்னும் நிச்சயமாக இவ்விஷயத்தில் கருத்துவேறுபாடு கொண்டிருக்கிறார்களே அத்தகையோர், அதுபற்றி சந்தேகத்திலேயே உள்ளனர், வெறும் யூகத்தைப் பின்பற்றுவதைத்தவிர, அதில் அவர்களுக்கு உண்மையான அறிவு (ஆதாரம்) கிடையாது, மேலும், உறுதியாக அவர்கள் அவரை கொலை செய்யவே இல்லை. (அல்குர்ஆன் : 4:157)
மாறாக, அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக்கொண்டான், இன்னும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:158)
வேதத்தையுடையவர்களிலிருந்து எவரும் அவர் இறப்பதற்கு முன்னதாக திட்டமாக அவரை விசுவாசிக்காமல் இருப்பதில்லை, இன்னும், மறுமைநாளில் அவர்களுக்கு அவர் பாதகமான சாட்சியாளராக இருப்பார்.
(அல்குர்ஆன் : 4:159)
12.நீதமான நீதிபதியாகவும், நேர்வழிகாட்டப்பட்ட தலைவராகவும் மீள்வருகையில் அவர் இறங்கி வருவார்.
. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! (உலக அழிவுக்குமுன்) மர்யமின் மைந்தர் (ஈசா அலை) உங்களிடையே நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கி றார். அவர் சிலுவையை உடைப்பார். பன்றியைக் கொல்வார். காப்பு (ஜிஸ்யா) வரியை வாங்க மறுப்பார். (இஸ்லாம் ஒன்றையே ஏற்பார். அந்நாளில்) வாங்கு வதற்கு ஆளில்லாத அளவுக்குச் செல்வம் கொழிக்கும். (புகாரி 2222)
பிறகு அவர் மரணிப்பார். முஸ்லிம்கள் அவருக்காக ஜனாஸா தொழுகை நடத்துவார்கள்-அபூதாவூத் 4324
கருத்துகள்
கருத்துரையிடுக