திரித்துவத்தை குர்ஆன் தப்பாக விபரிக்கிறதா?

 குர்ஆன் திரித்துவம் விசயத்தில் தவறிழைக்கிறதா? -

பாமர கிறிஸ்தவர்களுக்கு மறுப்பு.

குர்ஆன் திரித்துவம் பற்றி பேசும்போது,  திரித்துவத்தில் இல்லாத மரியாளையும் நாங்கள் கடவுளாக வணங்குவதாக கூறுகிறது என்று சில பாமர கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். உண்மையில் திரித்துவத்தில் மரியாள் ஒரு நபர் என்று கூறுகிறதா குர்ஆன்? நாம் அலசலாம்.


குர்ஆனில் எங்குமே மரியாள் திரித்துவத்தில் ஒரு நபர் என்று கூறவில்லை.


அதாவது மரியாளும் இயேசுவும் அல்லாஹ்வும் ஒரே கடவுளாக இருக்கிறார்கள் என்று கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள் என்றோ அல்லது அல்லாஹ் மரியாளாகவும் இயேசுவாகவும் உலகத்தில் வந்ததாக கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள் (ஆள்மாறாட்ட கொள்கை) என்றோ கூறவில்லை!


மாறாக, அரேபியாவில் அப்போது இருந்த கிறிஸ்தவர்கள் இயேசுவை கடவுளாக நம்பிய அதேநேரம் மரியாளையும் சில பிரிவுகள் வணங்கி வந்தனர். இன்றும் கத்தோலிக்கர்கள் மரியாளிடம் நமக்காக வேண்டிக்கொள்ளும் என்று கூறுவோராக உள்ளனர். அத்தோடு அவரை கடவுளின் தாய் என்றே நம்புகின்றனர்.

அக்காலத்தில் இருந்த கிறிஸ்தவர்கள் மரியாளையும் இயேசுவையும் அல்லாஹ்வுக்கு மேலதிகமாக வணங்கி அவர்களிடம் உதவி தேடியதையே குர்ஆன் கண்டிக்கும் விதமாக குறிப்பிடுகிறது.. 


எப்படி மக்காவில் சிலை வணங்கிகள் அல்லாஹ்வை விடுத்து சிலைகளை வணங்கியதற்காக அவர்களுக்கு சிந்திக்க தூண்டும் வகையில் உரையாற்றுவதை போன்றே இத்தகைய கிறிஸ்தவர்களுக்கும் குர்ஆன் உபதேசிக்கிறது.

இனி அவ்வசனங்களை காண்போம்:


1.குர்ஆன் 5:116-119

மறுமையில் இறைவன் ஈஸாவிடம் நீர் தான் அல்லாஹ்வை விடுத்து என்னையும் என் தாயையும் இரு கடவுள்களாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று மனிதர்களிடம் கூறினீரா என்று கேட்பான் என்பதை குறிப்பிட்டு , மறுமையில் மாட்டிக்கொண்டுவிடாதிருக்க குர்ஆன் முன்கூட்டியே உபதேசிக்கிறது.


அன்றியும், அல்லாஹ் (மறுமை நாளில் ஈஸாவிடம்* 5:119 இது மறுமை என்பதை உறுதிப்படுத்துகிறது) “மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வைத் தவிர என்னையும், என்னுடைய தாயையும் இரண்டு வணக்கத்திற்குரியவர்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று மனிதர்களுக்கு நீர் கூறினீரா?” என்று கேட்பான். (அதற்கு) “நீ மிகப்பரிசுத்தமானவன், எனக்கு ஒரு சிறிதும் உரிமை இல்லாததை நான் (ஒருபோதும்) கூறுவதற்கு எனக்குத் தகுதி இல்லை, அவ்வாறு நான் கூறியிருந்தால், நிச்சயமாக நீ அதனை அறிந்திருப்பாய், என் உள்ளத்தில் உள்ளதை நீ நன்கறிவாய், உன் உள்ளத்திலுள்ளதை நான் அறிய மாட்டேன், நிச்சயமாக நீதான் மறைவானவற்றை மிக்க அறிந்தவன்” என்று கூறுவார்.

(அல்குர்ஆன் : 5:116)



“என்னுடைய இரட்சகனும் உங்களுடைய இரட்சகனுமான அல்லாஹ்வை வணங்குங்கள்” என்று நீ எதை எனக்குக் கட்டளையிட்டாயோ அதைத் தவிர (வேறு) எதையும் நான் அவர்களுக்கு கூறவில்லை, நான் அவர்களுடன் (உலகில்) இருந்தவரையில், அவர்களின் செயலைத் தெரிந்து கொண்டிருந்தேன், பின்னர், நீ என்னைக் கைப்பற்றியபொழுது, நீதான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய், நீயே ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாளன்”(,என்றும்)


(அல்குர்ஆன் : 5:117)


(இரட்சகா) “அவர்களை நீ வேதனை செய்தால், நிச்சயமாக அவர்கள் உன்னுடைய அடியார்களே! அன்றியும், அவர்களை நீ மன்னித்துவிட்டால், நிச்சயமாக நீதான் (யாவரையும்) மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோன்.” என்றும் கூறுவார்.

(அல்குர்ஆன் : 5:118)


(அதற்கு) அல்லாஹ் “இது உண்மையாளர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கக்கூடிய நாளாகும், அவர்களுக்கு சுவனபதிகள் உண்டு, அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவற்றிலேயே அவர்கள் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பவர்கள் என்று கூறுவான், அவர்களைப் பற்றி அல்லாஹ்வும் திருப்தியடைவான், அவர்களும் அவனைப் பற்றித் திருப்தியடைவார்கள், அது மகத்தான வெற்றியாகும்.

(அல்குர்ஆன் : 5:119)



2.குர்ஆன் 5:73-75

அல்லாஹ் மூவரில் ஒருவன் என்று கூறுவோர் நிராகரிப்பாளர்கள் என்று கூறிவிட்டு, மற்ற இருவருமான ஈஸா மற்றும் அவரது தாய் உணவு உண்ணும் பலவீனராகவே இருந்தனர் என்று உண்மையை உணர்த்துகிறது. இதில் மரியாளை திரித்துவத்தில் ஒருவர் என்று கூறவில்லை. மரியாளையும் இயேசுவையும் வணங்கியவர்களுக்கும் வணங்குவோருக்கும் உண்மையை உணர்த்துகிறது.



“நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாவதான (ஒரு)வன்தான்” என்று கூறியவர்கள், திட்டமாகவே நிராகரிப்போராகிவிட்டார்கள், ஏனென்றால் ஒரே நாயனைத்தவிர வேறு நாயன் (இல்லவே) இல்லை, அவர்கள் கூறுவதைவிட்டும் விலகிக் கொள்ளாவிடில், அவர்களிலுள்ள நிராகரிப்போர்களைத் துன்புறுத்தும் வேதனை நிச்சயமாக பிடித்துக்கொள்ளும்.


(அல்குர்ஆன் : 5:73)


 எனவே, இவர்கள் அல்லாஹ்வின் பக்கம் மீண்டு (இன்னும் அவனிடம் (தங்கள் குற்றத்திற்காகப்) பாவமன்னிப்புத்தேட மாட்டார்களா? மேலும், அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபையுடையவன்.

(அல்குர்ஆன் : 5:74)


மர்யமுடைய மகன் மஸீஹ் ஒரு தூதரேயன்றி இல்லை, இவருக்கு முன்னரும் (இவரைப்போல்) தூதர்கள் பலர் (வந்து) சென்று விட்டனர், அவருடைய தாய் மிக்க உண்மையானவர், இவ்விருவரும் (மற்ற மனிதர்களைப்போல) உணவு உட்கொண்டே (வாழ்ந்து) வந்தனர், இதனை பல அத்தாட்சிகளைக் கொண்டு அவர்களுக்கு நாம் எவ்வாறு தெளிவாக்கினோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக! பின்னர், (உண்மையிலிருந்து) இவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் நீர் கவனிப்பீராக.

(அல்குர்ஆன் : 5:75)



அதாவது இயேசுவும் மரியாளும் பூமியில் உணவு உண்டு கக்கூஸ் போகும் மனிதர்களாக தான் இருந்தார்கள் என்பதை இறைவன் உணர்த்துகிறான்.



உடனே சில அறிவாளிகள் , "கக்கூஸ் போவதால் தேவனில்லை என்றாகுமா? கடவுள் மனிதனாக வந்ததால் கக்கூஸ் போனார். இந்த லாஜிக் கூட தெரியவில்லை "என்கிறார்கள்

முதலில் கடவுள் மனிதனாக பிறந்து வரவேண்டுமானால், அவர் ஒரு குழந்தையை தாயின் வயிற்றில் படைக்க வேண்டும். -காரணம்: பிறக்கும் குழந்தையை இறைவனே படைக்கிறான். அப்படி படைத்துவிட்டால், படைத்தது எப்படி கடவுளாகவோ கடவுளின் அவதாரமாகவோ ஆகும்?


அத்தோடு மனிதனை வணங்கும் எல்லோரும் சொல்லும் சமாளிப்பு தான் நாங்கள் மனிதனை வணங்கவில்லை .எங்கள் தேவன் மனிதனாக வந்தார் என்பதை தான். மனிதனை வணங்குவதை நியாயப்படுத்த இவ்வாறு கூறுகிறார்கள். உண்மையில் அது சாத்தியமில்லை!!


ஏன் மனிதராக கடவுள் வந்தார் என்று கேட்டால், தன்னை மேலே இருக்குற கடவுளுக்கு பலி கொடுக்க வந்தாராம். அதாவது தன்னை தானே தனக்கே பலியிட்டுக்கொள்ள தேவன் வரவேண்டுமா? 

கடவுள் நமக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட இயலுமா? காரணம் அவர் கடவுளாக இருப்பதால் அவருக்கு சுய தேர்வு பாவ இச்சை இருப்பதில்லை. அவர் எப்படி ஆசையுள்ள மனிதருக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுவார்?

குருடன் பார்வையுள்ளவனுக்கு எப்படி பார்க்க வேண்டும் என்று கற்பிப்பது போன்றதே கடவுள் மனிதனாக வந்து முன்மாதிரியாக வாழ்வதும் அமையும்.. 

-----


3.குர்ஆன் 4:171-172

மர்யமின் மகன் விசயத்தில் கிறிஸ்தவர்கள் வரம்பு மீற கூடாது என்றும், அவர் அல்லாஹ்வின் தூதரும் மர்யமின் மீது அல்லாஹ் போட்ட அவனது வார்த்தையும், அவனிடமிருந்துள்ள ஒரு ரூஹ் (உயிர்)உம் ஆவார் என்று கூறுவதோடு,கடவுள் மூவர் என்று கூறவேண்டாம் என்றும் , அல்லாஹ்வுக்கு பிள்ளை ஏற்படுத்திக்கொள்ள எந்த தேவையும் இல்லை என்கிறது.

அத்தோடு மஸீஹும் நெருக்கமான மலக்குகளும் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதை குறைவாக கொள்ளமாட்டார்கள் என்றும் கூறுகிறது



வேதத்தையுடையவர்களே! உங்கள் மார்க்கத்தில், நீங்கள் அளவு கடந்து செல்லாதீர்கள், இன்னும், அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள், நிச்சயமாக மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ், அல்லாஹ்வுடைய ஒரு தூதரும், அவனுடைய வாக்கும் ஆவார், அல்லாஹ், மர்யமின் பால் அ(ந்த வாக்கான)தைப் போட்டான், (மற்ற ஆன்மாக்களைப் போன்று அவரும்,) அவனிடமிருந்து (படைக்கப்பட்ட) ஓர் ஆன்மாவே, ஆகவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நீங்கள் விசுவாசியுங்கள், இன்னும் (வணக்கத்திற்குரிய தெய்வங்கள்) மூன்று என்று கூறாதீர்கள், (இவ்வாறு கூறுவதை விட்டு விலகி விடுங்கள், (அது) உங்களுக்குத்தான் மிக்க நன்று, (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் ஒரே நாயன்தான், அவனுக்கு மகன் இருப்பதைவிட்டும் அவன் மிகப் பரிசுத்தமானவன். வானங்களில் உள்ளவை மற்றும் பூமியில் உள்ளவை அவனுக்கே உரியன- (உங்கள் யாவரின் காரியங்களை) பொறுப்பேற்றுக் கொள்ள அல்லாஹ் (ஒருவனே) போதுமானவன்.


(அல்குர்ஆன் : 4:171)



மஸீஹும், அல்லாஹ்வுக்கு நெருக்கமான மலக்குகளும், அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் கொள்ளவே மாட்டார்கள், எவர்கள் அவனுக்கு வணக்கம் செலுத்துவதைவிட்டும் குறைவாகக்கருதி, கர்வமும் கொள்வார்களோ அவர்கள் யாவரையும் (மறுமையில் எழுப்பி) அவன் தன் பக்கமே ஒன்று திரட்டுவான்.


(அல்குர்ஆன் : 4:172)



இங்கேயும் அல்லாஹ் ஈஸா என்பவர் இறைவன் தன் வாக்கை மர்யமின் மீது போட்டதால் உண்டானவர் என்றும் அவனிடமிருந்துள்ள ஒரு உயிர் என்றும் கூறி அவரை பற்றி கிறிஸ்தவர்கள் குழம்ப காரணமாக பாவிக்கும் வாதத்தையே குறிப்பிட்டு தெளிவுபடுத்துகிறது.


அதாவது மர்யமின் மீது எவ்வாறு வார்த்தை போடப்பட்டது என்பதை 3:59 கூறுகிறது



நிச்சயமாக, அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம்: ஆதமுடைய உதாரணத்தைப்போன்றதே! அவன், அவரை மண்ணால் படைத்துப் பின் அதற்கு (மனிதனாக!) “ஆகுக” என்று கூறினான், அவர்(அவ்வாறு) ஆகிவிட்டார்.

(அல்குர்ஆன் : 3:59)



ஆதம் எவ்வாறு மண்ணால் படைக்கப்பட்டு ஆகு என்று அவர்மீது கூறப்பட்டதோ, அதுபோன்றே பெண்ணில் இருந்து இறைவன் அவரை படைத்து ஆகு என்று அவரது தாய் மீது போட , அவரும் ஆகிவிட்டார். அதை 3:47 உம் தெளிவாக உணர்த்துகிறது.

 


(அதற்கு மர்யம்) “என் இரட்சகனே! எந்த ஒரு மனிதருமே என்னைத் தீண்டாதிருக்க எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்? என்று கூறினாள். (அதற்கு) “அவ்வாறே அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தை முடிவெடுத்தால் அவன் அதற்கு கூறுவதெல்லாம் “ஆகுக” என்பதுதான், அது ஆகிவிடும்” என்று கூறினான்.

(அல்குர்ஆன் : 3:47)


இதை குறித்து கிறிஸ்தவர்கள் வாக்கு மனிதனானதாக (யோ 1:14) தப்பாக புரிந்து கொண்டுள்ளனர். காரணம் வார்த்தை என்பது ஒரு நபராக பழைய ஏற்பாட்டில் எங்குமே கிடையாது.




ஆகவே எங்குமே குர்ஆன் இவர்களது திரித்துவத்தை குறிப்பிட முற்பட்டு பிழையாக சொல்லவில்லை!!!

 பிழையான கொள்கையுடையவர்களுக்கு உபதேசமே வழங்கப்படுகிறது. அதாவது இறைவனோடு சேர்த்து மனிதர் இயேசுவையும் அவரது தாயார் மனுஷி மர்யமையும் வணங்கி உதவிதேடும் மக்களுக்கு அறிவுரையான வசனங்களே இவை.


-------


இவர்களது திரித்துவம் என்ன?


பிதா, வார்த்தை (குமாரன்), பரிசுத்த ஆவி இம்மூவரும் ஒரே கடவுளாக இருக்கிறார்கள் என்று நம்புவதாகும்.


பிதா எனப்படுபவர் மட்டுமே மெய்யான கடவுளாக பைபிளில் காணக்கிடைக்கிறது. 


வார்த்தை என்பது ஒரு நபரே அல்ல. அது தேவனது பேச்சு ஆகும். இதுவே மனுசனாகியதாக யோவான் எழுதுகிறார். காரணம் பைலோ என்ற வழிதவறிய யூதர் "வார்த்தை" என்று ஒரு நபர் இருப்பதாகவும் அவரே சகலத்தையும் படைத்தவர் என்று கதை கட்டினார். அதை வைத்தே யோவான் எழுதியுள்ளார். வேதத்தை வைத்து அல்ல.


பரிசுத்த ஆவி என்பது கடவுளின் உயிரை குறிக்கிறது என்பார்கள். கடவுளது உயிர் எப்படி இன்னொரு நபராக இருக்க முடியும்?


ஆகவே கடவுளையும் கடவுளின் இரு பண்புகளை (பேச்சு&உயிர்) இன்னும் இரு நபர்களாகவும் கற்பனை பண்ணிக்கொண்டு மூவர் என்கிறார்கள்.


ஒரே கடவுளையே மூன்றாக பிரித்து விட்டு மூன்று நபர்கள் சேர்ந்து ஒரே கடவுள் என்று வியாக்கியானம் செய்கிறார்கள்.


அந்த வார்த்தையே இயேசுவாக பிறந்ததாக நம்புகின்றனர். அப்படியானால் திடீரென தேவன் ஊமையாகிவிட்டாரா?? காரணம் அவரது பேச்சு முழுவதும் பிரிந்து பெண்ணுள் புகுந்து மனிதனாக பிறந்துவிட்டதே.


ஆகவே தம் மதத்தை பற்றியே அரைகுறைகளாக இருக்கும் போதகர்கள் குர்ஆனை பற்றி சரியாக சிந்தித்துவிடவா போகிறார்கள்??


 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்