ஈஸா நபியின் கன்னிப் பிறப்பு - ஏன் எப்படி? இஸ்லாமும் கிறிஸ்தவமும்
ஈஸா நபி கன்னியிடம் பிறந்தார் - எப்படி? ஏன்?
இஸ்லாமும் கிறிஸ்தவமும் முரண்படும் இடம்
--------------------------
இஸ்லாம் கூறுவது என்ன?
எப்படி என்பதற்கான பதில்:
(அச்சமயம் மர்யம்) கூறினார்: “என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?” (அதற்கு) அவன் கூறினான்: “அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் “ஆகுக” எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.”
(அல்குர்ஆன் : 3:47)
இதன்படி அல்லாஹ் படைப்பதன் மூலம் தான் உண்டானார் என்பதை தெளிவாக சொல்கிறது. ஆகு என்ற கட்டளையிடுவதன் மூலம் அவர் படைக்கப்பட்டார்.
எப்படி மர்யம் கர்ப்பமானார்?
இறைவன் தன் தூதரான ரூஹ் மூலம் மர்யமின் மீது ரூஹை (உயிரை) ஊதியதன் மூலம் உண்டானார்.
அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார்.
(அல்குர்ஆன் : 19:17)
(அப்படி அவரைக் கண்டதும்,) “நிச்சயமாக நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)” என்றார்.
(அல்குர்ஆன் : 19:18)
“நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு நன்கொடை அளிக்க (வந்துள்ளேன்”) என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 19:19)
இன்னும் தம் கற்பைக் காத்துக் கொண்டவளைப் (மர்யம்) பற்றி (நபியே! நினைவு கூறும்); எனினும், நம் ஆன்மாவிலிருந்து நாம் அவரில் ஊதி அவரையும், அவர் புதல்வரையும் அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்.
(அல்குர்ஆன் : 21:91)
இறைவன் நேரடியாக உயிரை ஊதாவிட்டாலும், செய்வித்தவன் அவனே என்பதால் "நாம் ஊதினோம்" என்கிறான்.
அந்த ரூஹ் எனும் தூதர் உயிரை மர்யமின் ஆடையின் மீது ஊதவே, அது கர்ப்பத்தில் நுழைய வேண்டிய இடம் வழியாக நுழைந்தது.
இறைவனுடைய "ஆகு" எனும் கட்டளையினால் அவர் படைக்கப்பட்டார்.
ஏன் மர்யமிடம் அவ்வாறு படைக்கப்பட்டார்?
அவர், அவ்வாறே! “அது எனக்கு எளிது அவரை மனிதர்களுக்கு, ஒரு அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஓர் அருளாகவும் நாம் ஆக்குவதற்காக என்றும், இது விதிக்கப்பட்டுவிட்ட ஒரு விஷயம் என்றும் உமதிரட்சகனே கூறுகிறான்” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 19:21)
இதற்கு மூன்று காரணங்கள் கூறப்பட்டுள்ளன.
1.மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாக அவரை ஆக்குவதற்காக.
2.இறைவனிடமிருந்துள்ள ஓர் அருளாக அவரை ஆக்குவதற்காக - (இவ்வாறே முகம்மது நபியை முழு மனித-ஜின் அனைவருக்கும் அருளாக அனுப்பியதாக 21:107 கூறுகிறது)
3.இது ஏற்கனவே இறைவனால் விதிக்கப்பட்ட காரியம் என்பதால்.
இறைவனுக்கு மகனை உண்டாக்காவதற்கோ , அல்லது பலியாக ஆவதற்கோ அல்ல.
ஏனெனில், அவர் இறைவனுக்கு மகன் கிடையாது. (4:171,9:30,19:35).
அவர் மர்யமுக்கு தான் மகன் -3:45,19:19. இறைவனுக்கு அவர் ஓர் அடியார் மட்டுமே- 43:59,19:30,4:172
அவர் சிலுவையில் அறையப்படவோ கொல்லப்படவோ இல்லை.. இறைவன்பால் உயர்த்திக் கொள்ளப்பட்டார் - 4:157-158
கிறிஸ்தவம்/கிறிஸ்தவர்கள் கூறுவது என்ன?
முதலில் கிறிஸ்தவர்கள் சொல்வதை பார்ப்போம்:
1.கடவுள் மனிதனாக பிறப்பதற்கு கன்னியை தெரிவு செய்தார்-
நம்பதில்-
முதலில் இதற்கு ஆதாரம் இல்லை.
கடவுள் தான் கர்ப்பத்தில் குழந்தையை உருவாக்குபவர் -ஏசாயா 44:2,49:5, எரேமியா 1:5...
இயேசு பிறந்தார் என்றால், கடவுள் தான் அவரையும் கருவில் உருவாக்க வேண்டும். ஆகவே இறைவன் படைத்த ஒன்று கடவுளாகாது. பிறந்தவரும் கடவுளாகவோ கடவுளின் அவதாரமாகவோ ஆகமுடியாது..
வெறும் படைப்பாகவே அமைவார்...
ஆகவே கடவுள் தன்னை ஒரு வயிற்றில் எப்படி படைப்பார்?
ஒரு பேச்சுக்கு இதை ஏற்றுக்கொண்டால், கன்னியின் வயிற்றில் மட்டும் தான் தன்னை படைக்க முடியுமா? கன்னி அல்லாத பெண்கள் அசுத்தமானவர்களா?
அதையும் விட்டுவிடுவோம். இதைவிட பெரிய பிரச்சினை என்னவென்றால், கடவுள் மனிதனாக பிறந்தார் என்றால், அவர் பிறப்பதற்கு கர்ப்பத்திற்கு உள்ளே போக வேண்டும். கர்ப்பத்திற்கு செல்லும் ஒரே வழி பிறப்புறுப்பு தான். கடவுள் பிறப்புறுப்பில் நுழைந்து தலைகீழாக பிறப்புறுப்பு வழியாக பிறந்தார் என்பது கடவுளை கேவலப்படுத்துவதாக புரியவேயில்லையா?
2.பிறவிப்பாவம்/ஆதிபாவம் இல்லாமல் பிறப்பதற்காக கன்னியை தெரிவு செய்தார். அப்போது தான் பாவமில்லாதவராக இருந்து மனிதர்களின் பாவத்திற்காக பலியாக முடியும்
நம் பதில்:
ஆதாம் ஏவாள் (ஹவ்வா-எபிரேயம்) தோட்டத்தில் தடைசெய்யப்பட்ட கனியை சாப்பிட்டதால் அவர்களுடைய பாவம் அவர்கள் சந்ததிக்கும் கடத்தப்படுகிறது இதனால் அனைவரும் பாவிகளாக பிறக்கிறார்கள் என்பது தான் ஆதிபாவ கோட்பாடு.
இதன்படி மரியாளுக்கும் இதே பாவம் கடத்தப்பட்டிருக்க வேண்டுமே. அப்படியாயின் மரியாளின் இரத்தத்தை உறிஞ்சி கர்ப்பத்தில் வளர்ந்த இயேசுவுக்கும் அதே பாவம் கடத்தப்பட்டிருக்க வேண்டுமே. அப்படியாயின் அவரே பாவமுள்ளவராக இருக்க எப்படி பலியாக முடியும்?
அப்படி ஆதிபாவமின்றி பிறக்க வேண்டுமானால், மனிதனிடம் பிறக்கவே கூடாது.. மிருகத்திடம் தான் பிறக்க வேண்டும்.
இல்லை இல்லை.. மரியாவுக்கு பாவம் கடத்தப்படவில்லை அல்லது மரியாளிடமிருந்து இயேசுவுக்கு கடத்தப்படவில்லை என்று வாதிட்டால், அதே போன்று மற்றவர்களுக்கும் கடத்தப்படவில்லை.. அதனால் இந்த பலியிற்கு அவசியமும் இல்லை.. கன்னிப் பிறப்புக்கு இது காரணமும் இல்லை
வேடிக்கையாக பலிப்பிராணிக்கு உடம்பில் குறைகள் இருக்க கூடாது. ஆனால் இனத்தால் யூதரிடம் பிறந்தால், அவர்கள் விருத்தசேதனம் செய்துவிடுவார்கள். அதன்படி உடலின் ஒரு பகுதி நீக்கப்பட்டுள்ளது. இதுவும் குறை தான்.. ஆணுறுப்பு ஓரம் அறுபட்ட ஆட்டை கடவுளுக்கு பலி செலுத்த முடியுமா என்ன?
3.கடவுள் தன் மகனை பிறக்க வைப்பதற்கு அல்லது தனக்கு ஒரு பையனை ஏற்படுத்திக் கொள்வதற்கு
நம் பதில்:
இதற்கும் கன்னிப் பெண்ணாக இருக்க வேண்டிய அவசியமில்லை.. கன்னிப் பிறப்பு ஏன் என்பதற்கு பதிலாகவும் இல்லை..
ஏனெனில் ஒரு கன்னி பெற்ற குழந்தையில் அவருடைய உயிர் தான் அவரது மகன் என்றால், அதே உயிர் கன்னி அல்லாதவரிடமும் பிறக்கலாமே.
(ஒரு குழந்தை பிறக்கும்போது உயிர் உடல் இரண்டுமே மனித இயல்புக்குரியது தான். இல்லையென்றால் இயேசு பூரண மனிதர் என்ற கிறிஸ்த நம்பிக்கை பொய்யாகி விடும்.. அப்போது மனித வேசம் தரித்திருக்கிறார் என்றே வரும்.)
ஆதிபாவகோட்பாடு உண்மையானால் அப்போதும் இவர் உடல்ரீதியாக பாவம் கடத்தப்பட்டவராகவே இருப்பார்..
ஒரு பேச்சுக்கு ஏற்கனவே மகன் இருந்தால், புதிதாக ஏன் பிறக்க வேண்டும்? பலியாவதற்கு என்றால் மேலே இரண்டாவது கூற்றுக்கு பதிலாக எழுதியிருக்கிறேன்
இல்லை.. மகனை ஏற்படுத்திக் கொள்வதற்கு என்றால், கன்னிப்பெண் பெற்ற குழந்தை கடவுளுக்கு எப்படி மகனாகும்? அப்பெண்ணுக்குத் தானே மகன்.
அப்பெண் கடவுளின் மனைவி அல்லவே.. மனைவியாக இருந்தால் தத்துப் பிள்ளை என்றாவது சொல்லலாம்.
(யூதர்களின் வேதத்தில் இஸ்ராஈல் (இஸ்ராஏல்) கடவுளின் மூத்த பையன் என்றும் மகன் என்றும் சொல்லப்படுகிறது -யாத்திராகமம் 4:22, ஓசியா 11:1.
இன்னோரு இடத்தில் பலமிகுந்த மனிதர்களை தேவனுடைய குமாரர்கள் என்று சொல்கிறது. அவர்கள் மனித பெண்களை அழுகுள்ளவர்கள் என கண்டு அவர்களோடு புணர்ந்து பிள்ளை பெற்றதாக ஆதியாகமம் 6:2-4 சொல்கிறது.
இது தேர்வு செய்யப்பட்டவர் என்ற அர்த்தத்திலேயே எடுக்கப்படுகிறது.
அதாவது கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் என்பதுவே இதன் அர்த்தம்.
இதே அர்த்தத்தையே இயேசுவுக்கும் எடுக்க வேண்டும். ஆனால் புதிய ஏற்பாடு ஃபைலோ சொன்ன கருத்தான "கடவுளுக்கு வார்த்தை என்ற மகன் இருக்கிறார் என்றும் அவர் மூலமே சகலமும் படைக்கப்பட்டது என்றும் நம்பப்படுகிறது. இந்த வார்த்தை தான் இயேசுவாக பிறந்தார் என்கிறார்கள். (பார்க்க யோவான் 1:1-3,14,18)
இவரை ஏற்றவர்கள் தத்துப்பிள்ளைகள் என்றும், இவரோடு கூட தேவனுக்கு வாரிசுகளாக இருப்பார்கள் என்றும் கூறுகிறார்கள் -(பார்க்க ரோமர் 8:17, கலாத்தியர் 4:7, இயேசுவும் இப்படி ஆக்கப்பட்டவர் -எபிரேயர் 1:2)
இனி புதிய ஏற்பாடு கன்னிப் பிறப்பை பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்:
புதிய ஏற்பாட்டில் பவுல் இயேசு கன்னியிடம் பிறந்தார் என்று எதையும் எழுதவில்லை.. எல்லாரையும் போல பெண்ணிடம் பிறந்தவர் என்பதை தான் அவர் சொல்கிறார்.
அதேபோல், நான்கு சுவிசேசங்களில் யோவான் கன்னிப் பிறப்பு பற்றி எதுவும் சொல்லவில்லை.
மாற்கு அவர்கள் இயேசுவை மக்கள் மரியாளின் மகன் என்று சொன்னதாக (மாற்கு 6:3) எழுதுகிறார். யோசேப்பை பற்றி வாய் திறக்கவில்லை.
மத்தேயுவும் லூக்காவும் இயேசு கன்னிக்கு பிறந்ததாக சொல்கிறார்கள். அப்பெண் யோசேப்பு என்பவரின் மனைவி என்கிறது.
மத்தேயு மட்டும் இதற்கான காரணகாரியம் ஒன்றை குறிப்பிடுகிறார்.
1.ஏசாயா நபி (தீர்க்கதரிசி) இம்மானுவேல் எனும் பையன் ஒரு கன்னியிடம் பிறப்பான் என்று சொல்கிறார். அதன் நிறைவேற்றமே இயேசுவின் கன்னிப் பிறப்பு என்கிறார். மக்கள் அவரை இம்மானுவேல் என்று கூப்பிடுவார்கள் என்கிறார். (மத்தேயு 1:22-23)
உண்மை என்ன?:
அக்குழந்தையின் பிறப்பு இயேசுவுக்கு 700 வருடங்கள் முன்பு வாழ்ந்த மக்களுக்கு, சீரிய ராஜாவும் இஸ்ரவேல் ராஜாவும் எருசலேம் மீது யுத்தம் செய்ய வந்தபோது, அவர்கள் நினைத்தது நடக்காது என்பதற்கு கடவுள் கொடுத்த அடையாளமே இது. பிறப்பை மட்டும் அடையாளமாக கூறவில்லை.. அதன் சாப்பாடு என்ன? வாக்களித்தநிகழ்வு அக்குழந்தையின் எப்பருவத்தில் நிகழும் என்பதையும் கூறுகிறது- (ஏசாயா 7:1-16)
எழுநூறு வருடங்கள் முன்பு வாழ்ந்தவர்களுக்கு அவர்கள் எதிரிகள் நினைத்தது நடக்காது என்பதற்கு பின்னால் பிறப்பவர் எப்படி அடையாளம் ஆவார்?
-அடுத்ததாக இயேசுவின் பிறப்பு அடையாளமாக யாருக்கும் கிடையாது. காரணம் இயேசு பிறப்பதற்கு முன்பே மரியாளின் புருஷர் மரியாளை சேர்த்துக்கொண்டார் என்று மத்தேயு சொல்கிறார். (மத்தேயு 1:24-25)
இதிலிருந்து மக்கள் யாருக்கும் தெரியாது இயேசு என்பவர் கன்னியின் பிறப்பு என்று. அதனால் தான் இயேசுவின் ஊர் மக்கள் இயேசுவை யோசேப்பின் (தச்சனுடைய) மகன் என்று அழைத்ததாக எழுதியுள்ளார் -(மத்தேயு 13:55)
லூக்கா மரியாள் எப்படி கர்ப்பமாவார் என்று தேவதூதன் சொன்னதாக எழுதுகிறார்:
34.அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.
35.தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக; பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.
லூக்கா 1:34-35
பரிசுத்த ஆவி மரியாள் மீது வருவாராம் . இதேபோல் பழைய ஏற்பாட்டில் கூட கடவுளின் ஆவி மக்களின் மீது இறங்கியுள்ளார்- (1 சாமுவேல் 16:13)
உன்னதமானவருடைய பலம் மரியாளை நிழலிடும் என்பது கடவுளின் வல்லமையால் இந்த பிறப்பு நிகழ்கிறது என்பதை காட்டுகிறது..
தேவனுடைய வல்லமையினால் பிறக்கும் பரிசுத்த குழந்தையாக இருப்பதால் அது தேவனுடைய குமாரன் எனப்படும் என்கிறார்.
(தேவனுடைய குமாரன் என்பது தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர் என்பதே அர்த்தமாகும். அதனால் தான் இஸ்ரவேல் என் மூத்த குமாரன் என்றும் என் குமாரன் என்றும் யாத்திராகமம் 4:22, ஓசியா 11:1 கூறுகிறது.
பிற்காலத்தில் இது தத்துப்பிள்ளை ரேஞ்சுக்கு மாறிவிட்டது... அதாவது மகனுடைய அந்தஸ்தில் இருப்பதுபோல் ஆக்கப்பட்டு விட்டது.)
ஆகவே இந்த விசயத்தில் இஸ்லாம் சொல்வதோடு புதிய ஏற்பாடு ஓரளவு ஒத்துப்போனாலும் கிறிஸ்தவர்கள் கூறும் காரணங்கள் ஒத்துப் போவதாக இல்லை. அது உண்மைக்கு புறம்பானதாகவே உள்ளது.
குறிப்பு:
பெண்ணின் வித்து என்று ஆதியாகமம் 3:15 கூறுவது இதை குறிக்காது.
காரணம்:
1.ஆதியாகமம் 3:15 கூறும் பெண் ஏவாள் ஆவார்
2.அவளது வித்து முழு மனித இனத்தையும் குறிக்கும்.
3.பழைய ஏற்பாட்டில், ஒரு இனத்தை அவர்களது தாயின் வித்து என்றும் கூறப்படும்
உதாரணமாக இஸ்மவேலை ஆகாருடைய வித்து (ஆதி 16:10), இஸ்ரவேலரை ரெபேக்காளின் வித்து (ஆதி 24:60) என்றும் எபிரேயத்தில் உள்ளதுடன், ஆதி 3:15இலுள்ளது போல் அங்கேயும் ஒருமையில் தான் எபிரேயத்தில் உள்ளது
கருத்துகள்
கருத்துரையிடுக