இஸ்லாமும் பலதாரமணமும் விவாகரத்தும்
இஸ்லாம் அநேக மதங்களை போலன்றி ஆன்மீகத்துடன் இல்லறம் ஆட்சியதிகாரம் சமூக நீதி போன்றவற்றை உள்ளடக்கிய மார்க்கமாக இருப்பதால் வெறும் ஆன்மீகத்தை மட்டுமுடைய மதநம்பிக்கையாளர்களால் குறிப்பாக கிறிஸ்த பிரதர்களால் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் பிரதானமாக தீவிரவாதம் என்ற அவதூறுக்கு அடுத்ததாக பலதாரதிருமணத்தையும் விவாகரத்தையும இஸ்லாம் அனுமதிப்பதை குறிப்பிடுவர்.
ஆகவே இதை வெறும் இரண்டு தலைப்புகளின் கீழ் குறிப்பிடுகிறேன்
1.பலதார திருமணம்
2.விவாகரத்து
1.பலதார திருமணம்
முகம்மது (ﷺ) வழியாக இஸ்லாம் வருவதற்கு முன்பே பலதாரமணம் உலகிலும் அரேபியாவிலும் இருந்தது.
இஸ்லாம் அதை செவ்வையாக்கி அதிகபட்சமாக நான்கு வரைக்கும் அனுமதித்ததோடு நிபந்தனையும் விதித்தது. அதாவது மனைவியரிடையே நீதியாக நடக்க முடிந்தால் மட்டுமே அனுமதி (குர்ஆன் 4:3)
*பலதாரமணம் இயற்கைக்கு ஒத்துப் போகிறதும் பயனுள்ளதுமாகும்:
இயற்கையாகவே ஆணுக்கு பலதாரமணம் செய்யும் விதமாகவே மனிதயினம் படைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஓர் ஆண் ஒரே வருடத்தில் நான்கு மனைவியரோடு சேர்ந்து நான்கு பேரையும் பிள்ளை பெற வைக்க முடியும்.
ஆனால் ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை சேர்ந்தாலும் ஒருத்தனுக்கே பிள்ளை பிறப்பதோடு அதை கண்டுபிடிக்க வேறு பரிசோதனைகளும் செய்ய வேண்டி வரும்..
அத்தோடு குடும்பம் நிலைபெறவும் மனித இனம் நிலைபெறவும் அடிப்படையான அம்சம் இனப்பெருக்கமாகவுள்ளது. இதை விரைவுபடுத்துவதற்கு ஒரு முறையே பலதாரமணம்.
-பலதாரமணத்தினால் முதல் மனைவி பாதிக்கப்படுதலும் பெரு நன்மைக்குள் சிறு தீமையும்:
இதனால் முதல் மனைவியின் கணவன் மீதான உரிமை குறைவடைவதால் பாதிக்கப்படுகிறாள் என தற்குரித்தனமாக பேசுவதாயின், இரண்டாம் மூன்றாம் குழந்தைகளை பெற்றோர் ஈன்றெடுக்கும்போது முதல் குழந்தைக்கு பெற்றோர் மீதான உரிமையும் சொத்தின் மீதான உரிமையும் குறைந்து பாதிப்படைவானே.
அப்படி பார்த்தால் ஒரு தம்பதியினர் ஒரே குழந்தையை தான் பெற்றெடுக்க வேண்டும் என்று இவர்கள் கூறவேண்டும்
அத்தோடு எந்த பெரிய நலவுக்குள்ளும் சிறு கெடுதி இருக்கத்தான் செய்கின்றன.
உதாரணமாக பிள்ளையை பெற்றெடுக்கும் போது தாய் பெரும் வேதனையை அடைகிறாள். சிலபோது குழந்தை பெறும்போதே உயர்ந்த அன்னை இறக்கிறாள். இதனால் உயர்ந்த தாயினம் பாதிக்கப்படுகிறது என குழந்தை பெறுவதை எந்த தற்குரியாவது நல்லதல்ல என்பானா?
அதே போன்று தான் பலதாரமணமும் சமூக ஒழுக்கம் கருதி ஒப்பற்ற இறைவன் அனுமதித்தான்.
-பலதாரமணமும் விதவைகளும்:
பலதார மணம் இல்லாத மக்களிடையே விதவை இல்லற மறுவாழ்வு மிகவும் குறைவாகவே காணப்படும்.
இஸ்லாம் பலதாரமணத்தை ஆதரித்ததன் மூலம் விதவை மறுவாழ்வை இயல்பானதாக தொடரச்செய்தது.
பலதாரமணமில்லாத மக்களிடையே விதவையை மணப்பதை ஏதோ ஆணின் தியாகம் போன்று சித்தரித்து விதவையை அற்பமாக கருதக்காரணமாகவுள்ளது
-பலதாரமணமும் விபச்சாரமும்:
விலைமாதுக்களிடம் செல்வோரில் அநேகர் திருமணமான ஆண்களாகவும் இருப்பர். இதிலே ஆண் பொறுப்பெடுக்க வேண்டிய நிலை இல்லாததாலும் , அந்த பெண்கள் முறையாக கணவனெனும் ஆணின் கீழே இல்லாததாலுமே அதை தொழிலாக செய்கின்றதோடு ஆண்களும் விரும்பிச் செல்கின்றனர். அதனால் இஸ்லாம் இவற்றை நெறிப்படுத்தும் ஒரு வழியாக பலதாரமணத்தை அனுமதித்தது.
ஆனாலும் நீதியாக நடக்க முடிந்தால் மட்டுமே பலதாரமணம் கூடும் (குர்ஆன் 4:3)
(இதற்கு மீறிய விபச்சாரத்திற்கு இஸ்லாம் தண்டனை வழங்குகிறது)
2.விவாகரத்து
விவாகரத்தும் முகம்மது நபியிற்கு முன்பேயிருந்துள்ள ஒரு விடயம் தான். அதை இஸ்லாம் ஒழுங்கு படுத்தியது.
விருப்பம் இல்லாதவர்களை நிர்ப்பந்தித்து வாழ வைக்க இஸ்லாம் விரும்பவில்லை.
ஆனாலும் அவர்கள் சேர்ந்து போவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கிறது.
அதாவது
*மனைவி மாதவிடாயிலிருந்து தூய்மையானதிலிருந்து உடலுறவு கொள்ளாத போதே தலாக் சொல்லலாம்.(முஸ்லிம் 2918, புகாரி 5332
*அதன்பின் அவளது காத்திருப்புக்காலமான மூன்று மாதவிடாய் காலங்கள் (2:228) தன் கணவன் வீட்டிலேயே இருக்கவேண்டும். அவனே அவளுக்கு உணவும் உறையுளும் வழங்க வேண்டும்.(65:1,6-7) தலாக் சொன்ன கணவன் மனது மாறினால் சேரத்துக்கொள்ளலாம் (2:228)
அதன் பின்பும் சேராதபோது பிரிவார்கள்
அதன் பின்பும் சேர்ந்து வாழ விரும்பினால் , திரும்பவும் புதிதாக திருமணம் செய்து வாழலாம்.
இப்படி இரண்டு தடவைகள் அனுமதிக்கிறது.(2:229).
ஏனெனில் மனைவியை பழிவாங்குவதற்காக அவளோடு சேர்ந்து வாழாமலும், அவளை வேறு திருமணம் செய்ய விடாமலும் இருப்பதற்காக ஒரு ஆண் தொடர்ந்து செய்துவிட கூடாது என்பதற்கான சட்டமே இது.
மூன்றாவதாக மறுபடியும் இப்படி நடந்தால், அப்போது அவளை வேறொருவன் மணந்து , தாம்பத்யமும் நிகழ்ந்து பிறகு அவனுக்கும் வெறுத்து தலாக் சொன்னால், மீண்டும் சேர இருவரும் விரும்பினால் மீண்டும் திருமணம் செய்து சேர்ந்து வாழலாம்.(2:230). அதற்கு சாட்சிகள் இருக்க வேண்டும் (65:2)
முதல் கணவனுக்கு ஆகுமாக திட்டமிட்டு திருமணம் செய்து விவாகரத்து செய்வதை (நிகாஹ் ஹலாலா) சாபத்திற்குரிய செயலாக நபிகளார் கூறியுள்ளார்கள் (அபூதாவூத் 2076)
மீண்டும் சேர்ந்து வாழ்வதானாலும் பிரிந்துவிடுவதானாலும் அவளோடு நல்ல முறையில் இரக்கமாக நடந்துகொள்ளுமாறே குர்ஆன் 2:231 சொல்கிறது
மஹராக பொற்குவியலை கொடுத்திருந்தாலும் அதில் சிறிதும் மீள எடுக்க கூடாது (4:20)
அதுபோன்றே பெண்களுக்கும் தன் கணவனை பிடிக்காத போது , உரிமைகள் மீறப்படும் போது தன் கணவனிடமிருந்து தலாக்கை கேட்டு பெற அனுமதி உண்டு.(2:229 இன் இறுதி ).
அதற்காக அவள் காரணத்தை சொல்ல தேவையுமில்லை. (எந்த நியாயமான காரணமுமின்றி செய்வது கண்டிக்கப்பட்டுள்ளது.)
மீளமுடியாத தலாக்காக இருந்தாலும் ,கர்ப்பிணியாக இருந்தாலோ அல்லது பாலூட்டும் தாயாக இருந்தாலோ, அப்போதும் அவளுக்கு உடையும் உணவும் செலவும் கொடுக்க வேண்டும் (2:233, 65:6-7)
அதற்கு பின் பிள்ளைக்கு செலவழிப்பதும் ஆணின் மீது கடமை. அந்த ஆண் மரணித்தால், அவருடைய சொத்தில் ஏனைய பிள்ளைகளுக்கு சொத்து கிடைப்பது போல இப்பிள்ளைக்கும் கிடைக்கும்..
அத்தோடு விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணுக்கு நியாயமான கொடையை கணவன் தன் வசதிக்கேற்ப வழங்க வேண்டும் என்றும் குர்ஆன் வழிகாட்டுகிறது (2:241,236)
தாம்பத்யம் நடக்காமலே விவாகரத்து நடந்தாலும் இவ்வாறு கொடையை வழங்குவது ஆணின் மீது கடமை. (2:236).
இதன்படி நபிகளார் திருமணம் செய்து தனக்கு நபிகளாரை பிடிக்காமல் பாதுகாப்பு தேடிய பெண்ணுக்கும் இவ்வாறு கொடையாக சணல் ஆடைகளை கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.(புகாரி 5255)
*விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணை திருமணம் முடிப்பதும் இஸ்லாத்தில் சர்வசாதாரணமானது. ஆனால் புதிய ஏற்பாடு அதையும் விபச்சாரமாக கருதுகிறது.
*இதன்மூலம் பெண்கள் பாதிக்கப்படுவார்கள் என தற்குறித்தனமாக பேசுவார்கள்.
ஆனால் இஸ்லாம் அப்பெண்கள் பாதிக்கப்படாத விதத்திலேயே அதை ஆக்கியுள்ளது.
1.அவர்களுக்கு மணக்கொடையாக தங்கக்குவியலை கொடுத்திருந்தாலும் எதையும் திருப்பி எடுக்க கூடாது (குர்ஆன் 4:20)
2.விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு கணவர்மீது தன்னால் இயன்ற நன்கொடையை வழங்குவதை கடமை என்கிறது (குர்ஆன் 2:236,241). அவள் கர்ப்பிணியாகவோ பாலூட்டும்தாயாகவோ இருந்தால், அப்போது அவளுக்குரிய செலவினங்களை கணவன் கொடுக்க வேண்டும் (குர்ஆன்65:6-7, 2:233)
3.அத்துடன் குழந்தைக்கான செலவு தந்தையின்மீதே உண்டாகும்.
4.அப்பெண்ணுக்கு மறுமணம் செய்வதும் சர்வசாதாரணமாக ஆக்கியுள்ளது.
5.அத்தோடு பெண்களுக்கு சொத்துரிமையும் சம்பாதிக்கும் உரிமையும் உண்டு என்பதால் பாதிப்பு என கூறுவது தற்குரித்தனமானதே
இதே நிலை தானே கணவன் நிரந்தர நோயாளியாகவோ இறந்துவிட்டாலுமோ ஏற்படும்!
இப்படி ஒழுங்கின்றி இருந்த விவாகரத்தை மிகவும் தூய்மையாக ஒழுங்குபடுத்தியுள்ளது இஸ்லாம்.
ஆனாலும் கணவன் மனைவி பிரிவதே சைத்தானுக்கு மிகவும் விருப்பமானது என்றும் இஸ்லாம் கூறுகிறது (முஸ்லிம் 5419 (2813b)).
தகுந்த காரணங்களுக்காக செய்வதை தவிர மற்றையவை வெறுக்கப்பட்டதும் சைத்தானுக்கு விருப்பமானதும் ஆகும்.
பைபிளும் விவாகரத்தும்
தோரா விவாகரத்து செய்வதை அனுமதிக்கிறது -உபாகமம் 24:1-3.
ஆனால் இயேசுவோ விவாகரத்தை விபச்சாரம் அல்லாத காரணத்திற்காக செய்வது விபச்சாரம் என சொன்னதாக மத்தேயு 19:9. ஆனால் மோசே அதை யூதர்களின் இதய கடினத்தின் காரணமாக அனுமதித்தார் என இயேசு சொல்கிறார் (மத்தேயு 19:8). அப்படியானால் இதய கடினத்திற்காக விபச்சாரம் கூடுமா? வேடிக்கையாக இயேசு காலத்தில் கூட யூதர்களின் இதயம் கடினமாக இருந்ததாக தான் யோவான் 12:40 சொல்கிறது. அப்படி பார்த்தால் இயேசு விவாகரத்தை தடை செய்வதே அறிவீனமாக தென்படுகிறது.
அத்தோடு விபச்சாரம் செய்தால் மட்டுமே விவாகரத்து செய்ய முடியும் என்று சட்டம் போடும்போது, தன் மனைவியை பிடிக்காது போனவன் தன் மனைவி மீது விபச்சார அவதூறு சொல்லி விவாகரத்து பெறுவதற்கு வழிவகுக்கிறது. ஆனால் இஸ்லாமோ காரணத்தை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லாததால் தம்பதியினர் பிரியும்போதும் அவர்களது privacy மீதான அவதூறுகள் கூறும் வாய்ப்பை இதன்மூலம் இல்லாமலாக்கியுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக