அன்னை ஸைனப் உடனான நபிகளாரின் திருமணம் பாகம்1
அன்னை ஸைனப் அவர்களுடன் நபிகளாரின் திருமணம் பாகம்1
ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களுடனான முகம்மது நபி (ஸல்) அவர்களின் திருமணம் - ஒரு சிறு அலசல்
-------------------------------------------------------------------------------
நபி(ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களை திருமணம் செய்ததை பற்றி சில கருத்துக்கள் சில தஃப்சீர்களில் காணக்கிடைக்கின்றன. அந்த கதைகளை விரிவாக அடுத்த பாகத்தில் காணலாம்
இந்த திருமணத்தின் உண்மை நிகழ்வு என்ன❓ என்று இதில் பார்ப்போம்.
1.யார் ஸைத் (ர) ? :
இவர் அடிமையாக இருந்து, முகம்மது நபியால் விடுவிக்கப்பட்டவர். வளர்ப்பு மகனாக முகம்மது நபி இவரை அறிவித்திருந்தார்.
“வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே, அல்லாஹ்விடம் நீதியாகும்“ எனும் (திருக்குர்ஆன் 33:5 வது) குர்ஆன் வசனம் அருளப்படும்வரை, நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட (அவர்களின் வளர்ப்பு மகன்) ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களை “ஸைத் இப்னு முஹம்மத்“ (முஹம்மதின் புதல்வர் ஸைத்) என்றே அழைத்து வந்தோம்.
ஸஹீஹ் புகாரி (4782)
2. அன்னை ஸைனப் அவர்கள யார்?
இவர் முகம்மது நபி(ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரியின் மகள் ஆவார்.
ஜைனப் அவர்களுக்கு , ஜைத் அவர்களை முகம்மது நபி(ஸல்) அவர்கள் திருமணம் முடித்து வைத்தார்கள்.
ஸைனப் (ர) அவர்களை பற்றி ஆயிஷா (ர) அவர்கள் சொல்லும்போது, (நீண்ட ஹதீஸின் இறுதி பகுதி)
....... ஸைனப் அவர்கள்தான் நபியவர்களின் துணைவியரில் நபியவர்களிடம் அந்தஸ்து பெற்றிருந்த விஷயத்தில் எனக்குப் போட்டியாக இருந்தவராவார். மார்க்க ஈடுபாட்டிலும் இறைவனை அஞ்சி நடப்பதிலும் உண்மை பேசுவதிலும் உறவுகளை அனுசரிப்பதிலும் தாராளமாகத் தானம் வழங்குவதிலும் இறைநெருக்கத்தையும் வாய்மையையும் தரும் நற்செயல்களில் தம்மைத் தீவிரமாக ஈடுபடுத்திக்கொள்வதிலும் ஸைனப் அவர்களைவிடச் சிறந்த ஒரு பெண்ணை நான் ஒருபோதும் கண்டதில்லை.
ஆயினும், அவர் விரைவாகக் கோபப்படக்கூடியவராக இருந்தார். அதே வேகத்தில் கோபம் தணியக்கூடியவராகவும் இருந்தார்.
(புகாரி 4829)
--
ஜைத் அவர்களுக்கும் ஸைனப் அவர்களுக்கும் பிரச்சினை ஏற்படவே, அதை பற்றி முறையிடுவதற்காக ஜைத் அவர்களே நபியவர்களிடம் வந்து விவாகரத்து செய்வதற்கு ஆலோசனை கேட்டார்.
ஆனால் முகம்மது நபி அவர்களோ, "அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உன் மனைவியை மணபந்தத்தில் நீடித்துக்கொள்ள செய்" என்று கட்டளையிட்டார்கள்.
புகாரி 7420
அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்கள் தம் மனைவியின் போக்கு குறித்து (நபி(ஸல்) அவர்களிடம்) முறையிட வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்துகொள்; உன் மனைவியை (மண விலக்குச் செய்துவிடாமல்) மணபந்தத்தில் நீடிக்கச் செய்“ என்று கூறலானார்கள்.
👆👆👆
நபி(ஸல்) அவர்கள் (தம் வாழ்நாளில் குர்ஆன் வசனங்களில்) எதையேனும் மறைப்பவர்களாக இருந்திருந்தால் (பின்வரும் 33:37 வது வசனமான) இதைத்தான் மறைத்திருப்பார்கள். இதன் காரணத்தால் ஸைனப்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மற்ற துணைவியர் முன்பாக (தமக்குத் தனிச் சிறப்பு இருப்பதாகப்) பெருமை பாராட்டிக் கொள்வார்கள்.
“உங்களை (நபி(ஸல்) அவர்களுக்கு) உங்கள் வீட்டார் மணமுடித்துத்தந்தார்கள். என்னையோ உயர்ந்தவனான அல்லாஹ்வே ஏழுவானங்களுக்கு மேலிருந்து (நபி(ஸல்) அவர்களுக்கு) மணமுடித்துக் கொடுத்தான்“ என்று சொல்வார்கள்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸாபித் அல்புனானீ(ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
“(நபியே!) நீங்கள் (அந்நேரத்தில்) அல்லாஹ் வெளிப்படுத்த நாடியிருந்த விஷயத்தை உங்களின் உள்ளத்தில் மறைத்து வைத்துக் கொண்டீர்கள்“ எனும் (திருக்குர்ஆன் 33:37 வது) இறைவசனம், (தம்பதியராயிருந்த) ஸைனப்(ரலி) அவர்களுக்கும் ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களுக்குமிடையே நடந்த பிரச்சினையில் (நபி(ஸல்) அவர்கள் கருத்து தெரிவித்தபோது) தான் அருளப்பெற்றது“ என்று அனஸ்(ரலி) அவர்கள் சொன்னார்கள்.
-----
3. முகம்மது நபி(ஸல்) எதை தன் மனதினுள் மறைத்து வைத்திருந்தார் என்று 33:37 சொல்கிறது
ஸைத் விவாகரத்து செய்துவிட்டால், நபிகளார் ஸைனபை மணக்க வேண்டும் என்பதே அது. அதை அதே வசனத்தின் இறுதி காரணமாக கூறுகிறது
இதே போல , ஜைத் விவாகரத்து செய்ய வந்த போது,
இவர் விவாகரத்து செய்துவிட்டால், மக்கள் குறை சொல்லுவார்கள் என்க்ஷ அச்சத்தில் "அல்லாஹ்வை அஞ்சி, உன்னிடமே வைத்துக்கொள்!" என்றார்கள்.
ஏனெனில் , அக்காலத்தில் வளர்ப்பு மகனை சொந்த மகனாக கருதியிருந்தார்கள். இதனால் வளர்ப்பு மகனின் மனைவியை முடிப்பது மிகப்பெரிய தப்பாக கருதப்படும்.
இது தான் "மனிதர்களுக்கு நீர் பயப்படுகிறீர்" என்று அல்லாஹ் சொல்கிறான் (33:37).
*. இந்த வசனத்தின் (33:37) இறுதியிலும், 38வது வசனத்திலும் ,,, இது நடக்கவேண்டியிருந்த கட்டளை என்றும், இதை முகம்மது நபிக்கு அல்லாஹ் தான் கடமையாக்கினான் என்றும் சொல்லப்பட்டுள்ளது..
இது எடுத்துக்காட்டுவது என்னவென்றால், இது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட நிகழ்வு என்றும் இதை தான் நபியவர்கள் தம் உள்ளத்தில் மறைத்திருந்தார்கள் என்றும் காட்டுகிறது.
நபியவர்கள் இந்த நிகழ்வை பயந்ததால் தான் அவ்வாறு நடந்துகொண்டார்கள். இதற்கு ஆறுதலாக நபியவர்களுக்கு 33:38 ஐ சொல்கிறான்.
"
நபியின் மீது அல்லாஹ் விதியாக்கியதை அவர் நிறைவேற்றுவதில் எந்தக் குற்றமும் இல்லை; இதற்கு முன் சென்று போன (நபிமா)ர்களுக்கு ஏற்பட்டிருந்த அல்லாஹ்வின் வழி இதுவேயாகும் - இன்னும் அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட விதியாகும்.
(அல்குர்ஆன் : 33:38)
(இறை தூதர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்துக் கூறுவார்கள்; அவர்கள் அவனுக்கே பயப்படுவார்கள்; அல்லாஹ்வையன்றி வேறு யாருக்கும் அவர்கள் பயப்படமாட்டார்கள்; ஆகவே, கேள்வி கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
(அல்குர்ஆன் : 33:39)"
இந்த வசனத்தில் "நபியவர்களுக்கு அல்லாஹ் விதியாக்கியதை கடமையாக்கியதை அவர் நிறைவேற்றுவது குற்றமல்ல" என இறைவன் சொல்வது, இந்த திருமணத்தை மக்கள் குற்றமாக கருதுவார்கள் என நபியவர்கள் பயந்ததை விளக்ககூடியதாக உள்ளது.
இந்நிகழ்வை இறைவன் கடமையாக்கியதையே நபியவர்கள் மனிதர்களுக்கு பயந்து மறைத்தார்கள். இதையே அல்லாஹ் வெளியாக்க இருந்தான்.
------
*. 33:37 வசனம் முழுமையாக , முகம்மது நபி(ஸல்) அவர்கள் "உன் மனைவியை உன்னிடம் நிறுத்திக்கொள்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!" என்று சொன்ன போது இறங்கவில்லை.
அதன் ஆரம்ப பகுதியே இறங்கியது. அதாவது, "அல்லாஹ் வெளியாக்க இருந்ததை நீர் உம் மனதில் மறைத்தீர். மனிதர்களுக்கு பயப்படுகிறீர். அல்லாஹ் தான் பயப்படுவதற்கு தகுதியானவன்" என்பவையே இறங்கியது.
இதையே மேலே குறிப்பிட்ட புகாரி 7420வது ஹதீஸும் சொல்கிறது.
இதே போல திர்மிதி 3212 (ஆங்கிலம்) , 3518 (அரபு) இலும் சொல்லப்பட்டுள்ளது.
Hadith
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ نَزَلَتْ هَذِهِ الآيَةُ : (وتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى النَّاسَ ) فِي شَأْنِ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ جَاءَ زَيْدٌ يَشْكُو فَهَمَّ بِطَلاَقِهَا فَاسْتَأْمَرَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللَّهَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ."
Narrated Anas:
"அல்லாஹ் வெளியாக்கவிருந்ததை நீர் உமக்குள் மறைத்தீர் .நீர் மனிதர்களுக்கு பயந்தீர்..." எனும் வசனம் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் விசயத்தில் இறங்கியது .ஸைத் அவரை விவாகரத்து செய்ய விரும்பி முறையிட்டவராக வந்து நபிகளாரிடம் ஆலோசனை கேட்டார். அதற்கு நபிகளார் உன் மனைவியை உம்மிடம் வைத்துக்கொள். அல்லாஹ்வை அஞ்சிக்கொள் என்று கூறினார்கள்.
Sahih (Darussalam)
English : Vol. 5, Book 44, Hadith 3212
Arabic : Book 47, Hadith 3518
இதன் பின், ஜைது விவாகரத்து செய்துவிட்டார்.
இதன்படி நபிகளாரின் ஆலோசனைப்படி நடக்காமல், தன் சுயமான விருப்பத்தின்படியே விரும்பி விவாகரத்து செய்தார் என காட்டுகிறது
*. விவாகரத்து நடந்து, ஜைனபின் காத்திருப்பு காலம் (இத்தா) முடிந்த பின்னால், ஜைத் அவர்களையே ஜைனபிடம் சென்று முகம்மது நபியை முடிப்பது பற்றி பேசும்படி சொன்னார்.
ஜைத் அவர்கள் சென்று இதை சொல்ல ,
ஜைனப் அவர்கள் அல்லாஹ்விடம் அனுமதி பெறாமல் ஏதும் செய்வதற்கு இல்லை என்று சொல்லிவிட்டு, தொழுமிடத்திற்கு சென்று தொழ நின்று விட்டார்.
அப்போது தான் 33:37இன் ஏனைய பகுதி இறங்கியது.
முஸ்லிம்
2798. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் மணவிலக்குச் செய்ததையடுத்து) ஸைனப் (ரலி) அவர்களது காத்திருப்புக் காலம் (இத்தா) முடிந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் (ரலி) அவர்களிடம், ”ஸைனபிடம் என்னை (மணந்துகொள்வதை)ப் பற்றிப் பேசு” என்றார்கள்.
எனவே, ஸைத் (ரலி) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள்.
அப்போது அவர் மாவு பிசைந்து கொண்டிருந்தார்.
ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
👉👉
ஸைனபைக் கண்டதும் என் மனத்தில் அவரைப் பற்றி மரியாதை ஏற்பட்டது. அவரை ஏறெடுத்துப் பார்க்கவும் என்னால் இயலவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை(த் தாம் மணந்துகொள்வது) பற்றிக் கூறியதே அதற்குக் காரணம்.
எனவே, அவ்வாறே திரும்பி அவருக்கு எனது முதுகைக் காட்டியபடி நின்று, ”ஸைனப்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னை (மணக்க விரும்புவது) பற்றி உன்னிடம் கூறுவதற்காக (என்னை) அனுப்பிவைத்துள்ளார்கள்” என்றேன்.
அதற்கு அவர், ”நான் என் இறைவனிடம் (முடிவு வேண்டிப் பிரார்த்தித்து) அனுமதி பெறாமல் ஏதும் செய்வதற்கில்லை” என்று கூறிவிட்டுத் தாம் தொழுமிடத்திற்குச் சென்று (தொழ) நின்றுவிட்டார்.
அப்போது (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு) குர்ஆன் வசனம் (33:37) அருளப்பெற்றது.
(அதில், ”(நபியே! ஸைத், தம் மனைவியான ஸைனபை விவாகரத்துச் செய்துவிட்ட பின்னர், உமக்கு நாம் அவரை மணமுடித்து வைத்தோம் என்று அல்லாஹ் அறிவித்தான்.) அதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து அனுமதி பெறாமலேயே ஸைனபின் இல்லத்திற்குள் நுழைந்தார்கள்.
(முஸ்லிம் 2798)
👈👈👈
இதன்படி முன்னாள் மனைவி மீது ஸைதுக்கு ஆசை இல்லாத நிலையில் அவரை அனுப்பியே நபிகளார் பேசினார்.
அப்போது அவர் மீதான மரியாதை அதிகரித்தது என்று கூறுகிறார்
----------------
இப்போது 33:37 ஐ பார்ப்போம்:
37. யாருக்கு அல்லாஹ் அருள் புரிந்து (முஹம்மதே!) நீரும் அவருக்கு அருள் புரிந்தீரோ, அவரிடம் "உமது மனைவியை உம்மிடமே வைத்துக் கொள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்'' என்று நீர் கூறியதை எண்ணிப் பார்ப்பீராக! அல்லாஹ் வெளிப்படுத்த இருந்ததை உமது மனதுக்குள் மறைத்துக் கொண்டீர். மனிதருக்கு அஞ்சினீர்! நீர் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே தகுதியானவன். ஸைத் என்பார் அவரிடம் தன் தேவையை முடித்துக் கொண்ட போது (விவாகரத்துச் செய்த போது) உமக்கு அவரை மணமுடித்துத் தந்தோம். வளர்ப்பு மகன்கள் தம் மனைவியரிடம் தமது தேவையை முடித்துக் கொண்டால் (விவாகரத்துச் செய்தால்) அவர்களை (வளர்ப்புத் தந்தையரான) நம்பிக்கை கொண்டோர் மணந்து கொள்வது குற்றமாக ஆகக் கூடாது என்பதற்காக (இவ்வாறு செய்தோம்). அல்லாஹ்வின் கட்டளை செய்து முடிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.
திருக்குர்ஆன் 33:37
👆👆
இறைவன் வெளியாக்கயிருந்தது - ஜைத் விவாகரத்து செய்த பின்னால் முகம்மது நபி (ஸல்) ஜைனபை முடிப்பது.
ஜைனபுடனான இத்திருமணத்தின் நோக்கத்தையும் 33:37 இல் கூப்பட்டுள்ளது.
அதாவது வளர்ப்பு மகன்கள் விவாகரத்து செய்த பெண்களை முடிப்பதில் எந்த குற்றமும் இல்லை என்பதை காட்டுவதற்காகும்.
ஏனெனில் இதை வெறும் அனுமதியாக சொல்லப்பட்டிருந்தால், அதை யாருமே செய்திருக்க மாட்டார்கள். பயப்படுவார்கள். இதையே முகம்மது நபி(ஸல்) அவர்கள் மூலமாகவே நிறைவேற்றி விட்டால், அதற்கு பின் வருவோர் அவ்வாறு விவாகரத்து செய்யப்பட்ட வளர்ப்புமகனின் மனைவியை திருமணம் முடித்து கொள்வது தவறு அல்ல என்று உணர்ந்து அவ்வாறு வாழ்வு கொடுக்க விரும்பினால் , செய்துகொள்வதற்கு முன்மாதிரியாகவே இத்திருமணம் நடந்தது.
----------------------------------------
முடிவு:
1.நபியவர்கள் தம் உள்ளத்தில் மறைத்து வைத்திருந்தது எதையெனில், அல்லாஹ் அவர்கள் மீது கடமையாக்கிய/விதியாக்கிய இத்திருமணத்தை ஆகும்.
2.இதை மக்கள் குற்றமாக கருதுவார்கள் என்பதால், அல்லாஹ் விதியாக்கியதை செயவதில் எந்த குற்றமும் இல்லை என இறைவன் சொல்கிறான்.
மக்கள் இவ்வாறு குற்றமாக கருதுவதையே நபியவர்கள் பயந்தார்கள்.
3.இத்திருமணத்தை இறைவன் கடமையாக்க முன்பு ஜைதுக்கு ஸைனபை திருமணம் செய்ய வைத்தான்.
4.ஸைத் தன் விருப்பத்தின் படியே தன் மனைவியை விவாகரத்து செய்தார். நபிகளாரின் ஆலோசனையை எடுக்கவில்லை (திர்மிதீ 3212)
5.தன் முன்னாள் மனைவி மீது ஸைதுக்கு ஈர்ப்பு இல்லாத நிலையிலேயே அவரை அனுப்பியே நபிகளார் தனக்கு திருமணம் பேசினார் (முஸ்லிம் 2798)
6.அவர் தலாக் செய்த பின் நபிகளாருக்கு திருமணம் செய்துவைத்தான். காரணம்,
"விசுவாசிகளால் வளர்க்கப்பட்டவர்கள் தம் மனைவியரை விவாகரத்து செய்தால், அந்த விவாகரத்து செய்யப்பட்ட பெண்களை வளர்த்த விசுவாசிகளுக்கு முடிப்பதில் எந்த குற்றமும் இருக்காது" என்பதை நிகழ்த்தி காட்டுவதற்கு ஆகும் என்பதை 33:37 சொல்கிறது.
ஏனெனில் சொந்த மகன்களினால் விவாகரத்து செய்யப்பட்டால் ,விவாகரத்து செய்யப்பட்டோரை திருமணம் முடிப்பது அவர்களின் பெற்றோரான வளர்த்தவர்களுக்கு பெரும் குற்றம்(குர்ஆன் 4:23).
இதேபோன்று வளர்க்கப்பட்டோருக்கு வராது என்பதை நிகழ்த்தி காட்டுவதற்கு ஆகும்.
7..நபியவர்கள் தம் வசதிக்காக இதை இட்டுகட்டியிருக்க முடியாது. ஏனெனில் இந்த வசனங்களே அவருக்கு மிகவும் கஷ்டமானதாக இருந்தன. குர்ஆனில் எதையாவதை மறைப்பதாக இருந்திருந்தால் , இந்த 33:37 வசனத்தை மறைத்திருப்பார்கள் என நபித்தோழர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி 7420
இனி அடுத்த பதிவில் அந்த தவறான அறிவிப்புகள் பற்றியும் அதன் உண்மை நிலையையும் காண்போம்
அடுத்த பதிவை காண:பாகம்2

அஸ்ஸலாமு அலைக்கும்...அருமையான விளக்கம்...
பதிலளிநீக்குஜஸாக்கல்லாஹ் ஹைரா......அடுத்ததாக அடுத்த பதிவை காண என்ற லிங்கை சொடிக்கியதும் அந்த கட்டுரைக்கு செல்லுமாறு அமைத்தால் சிறப்பாக இருக்கும்....