அன்னை ஸைனப் உடனான நபிகளாரின் திருமணம் பாகம்2

அன்னை ஸைனப் உடனான நபிகளாரின் திருமணம் பாகம்2

-------------------------------------------------

முதல் பாகத்தை காண:

https://answeringchristian.blogspot.com/2019/01/1_17.html?m=1


ஸைனப் (ர) அவர்களுடன் நபியவர்களை சம்பந்தப்படுத்தி வரும் அறிவிப்புகளையும் அவற்றின் உண்மை தன்மையையும் காண்போம்:


1. முதலாவது அறிவிப்பு


இப்னு சஅத் அவர்களின் தபகாத் (8/101), இப்னு ஜரீர் அத் தபரீ அவர்களின் தாரீக் (3/161)

முஹம்மத் இப்னு யஹ்யா இப்னு ஹிப்பான் அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் இப்னு ஆமிர் அல்-அஸ்லமி கூற அவரிடமிருந்து முஹம்மத் இப்னு உமர் அல் வாகிதி அறிவிக்கிறார்:

"அல்லாஹ்வின் தூதர் ஸைதுடைய வீட்டுக்கு அவரை தேடி வந்தார்கள். அவர் முஹம்மதுடைய மகன் ஸைத் என சொல்லப்பட்டார்.ஸைதை காணாததால் அவர் எங்கே என கேட்பதற்கு அவருடைய வீட்டுக்கு அவரை தேடி வந்தார்கள் ஆனால் அவரை காணவில்லை. ஸைதுடைய மனைவியாகிய ஸைனப் அன்னாரை நோக்கி இரவுஆடையுடன் எழுந்துவந்தார். அல்லாஹ்வின் தூதர் தன் முகத்தை திருப்பிகொண்டார்கள். " அவர் இங்கு இல்லை அல்லாஹ்வின் தூதரே! உள்ளே வாருங்கள்" என ஸைனப் கூறினார். அல்லாஹ்வின் தூதர் நுழைய மறுத்துவிட்டார்கள். "அல்லாஹ்வின் தூதர் கதவருகே நிற்கிறார்" என ஸைனபுக்கு சொல்லப்பட்ட போது, அவர் அவசரமாக ஆடை அணிந்தார். அவசரத்தில் குதிக்க அல்லாஹ்வின் தூதரை ஈர்த்துவிட்டார். ஆகவே அல்லாஹ்வின் தூதர் திரும்பி சென்றபடி எதையோ முனுமுனுத்தார்கள். அவர் சொன்னது "மகத்தான அல்லாஹ் தூயவன், உள்ளங்களை திருப்புவன் தூயவன்" என கூறினார்கள்.

ஸைத் வீடு வந்தபோது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் வந்ததாக ஸைனப் கூறினார். "அவரை உள்ளே வர ஏன் கூப்பிடவில்லை?" என ஸைத் சொன்னார்.
"அவரை உள்ளேநுழைய நான் வேண்டினேன். அவர் மறுத்துவிட்டார்" என ஸைனப் கூறினார்.
"அவர் எதையாவது கூற நீ செவிமடுத்தாயா?" என ஸைத் கேட்டார்.

"அவர் திரும்பி செல்லும்போது மகத்தான அல்லாஹ் தூயவன், உள்ளங்களை திருப்புபவன் தூயவன் என கூற கேட்டேன்" என ஸைனப் பதில் அளித்தார்.

ஆகவே ஸைத் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் என் வீட்டுக்கு வந்ததாக கேள்விபட்டேன். நீங்கள் ஏன் உள்ளே நுழையவில்லை? ஸைனப் உங்களை ஈர்த்திருக்க கூடும். எனஙே அவளை நான் பிரிந்துவிடுகிறேன்" என கூறினார்.

"உம் மனைவியை உம்மிடமே நிறுத்திவைத்துகொள்" என அல்லாஹ்வின் தூதர் கூறினார்.

ஆனால் அந்த நாள் முதல் ஸைதுக்கு ஸைனபோடு வாழ முடியவில்லை. அவர் வந்து நபியிடம் வந்து பிரிந்துவிட அனுமதி கேட்பார். அல்லாஹ்வின்தூதர் "உம் மனைவியை உம்மிடம் நிறுத்திகொள்" என கூறிவருவார்கள். ஸைத் மீண்டும் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் "உம் மனைவியை உம்மிடம் வைத்துகொள்" என கூறினார்கள்.

ஆனால் ஸைத் விவாகரத்து செய்திவிட்டார். ஸைனபுடைய இத்தா காலம் முடிவடைந்தது.

அல்லாஹ்வின் தூதர் ஆயிஷாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது மயக்கம் அவரை ஆட்கொண்டது. பின் அதிலிருந்து தெளிந்தபோது , சிரித்துவிட்டு "ஸைனபை அல்லாஹ் எனக்கு திருமணம் முடித்து தந்துவிட்டான் என்ற நல்லசெய்தியை ஸைனபிடம் போய் சொல்பவர் யார்" என கூறினார்கள். பிறகு 33:37ஐ இறுதிவரை ஓதினார்கள்."

☝☝



🛑. இந்த அறிவிப்பு பற்றி பார்ப்போம்:

இது முர்ஸல் தரத்திலமைந்த பலவீனமான செய்தி ஆகும். ஏனெனில் இரண்டு அறிவிப்பாளர்கள் இதில் இல்லை.

இதை அறிவிப்பவரான ர முகம்மத் இப்னு யஹ்யா இப்னு ஹப்பான் என்பவர் இறந்தது ஹிஜ்ரி 121 இல் தன் 74வது வயதில் ஆகும்.

இதன்படி அவர் பிறந்தது, ஹிஜ்ரி 47 இல் ஆகும்.

ஆனால் இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட மூவரில் இறுதியாக இறந்தவர் ஸைனப் ஆவார். அவர் ஹிஜ்ரி 20இல் மரணித்துவிட்டார்.

இவர் மரணித்து 27 வருடங்களின் பின் பிறந்த ஒருவரே இச்செய்தியை கூறிகிறார்.
(தஹ்தீப் (9/507-509))

இரண்டாவது, இதில்வரும் அடுத்த அறிவிப்பாளரான
அப்துல்லாஹ் இப்னு ஆமிர் அல்-அஸ்லமி என்பாரை பற்றி இமாம் புகாரி "அவரது அறிவிப்பு புறக்கணிக்கப்பட வேண்டியது" என்கிறார். இமாம் அபூஹாதிம் "இவர் ஹதீஸ்துறையில் கைவிடப்பட்டவர்" என கூறுகிறார்
(தஹ்தீப் 5/275, மீஸானுல் இஃதிதால் 2/448)

அடுத்த அறிவிப்பாளர் முகம்மத் இப்னு உமர் அல்-வாகிதி என்பவர். இவரை பற்றி சில அறிஞர்கள் பொய்யர் எனவும் ஹதீஸ்களை இட்டுகட்டுபவர் என கூறியிருக்கிறார்கள்.
(மீஸானுல் இஃதிதால் 3/664)

எனவே இதை ஆதாரமாக கருதவே முடியாது.

இனி அடுத்த அறிவிப்பை பார்ப்போம்.






2. இரண்டாவது அறிவிப்பு:


இது இப்னு ஜரீர் அத்-தபரீயின் தஃப்சீர் (22/13) குறிப்பிடுகிறார்.

இப்னு ஸைத் கூறியதாக இப்னு வஹப் கூறியதை யூனுஸ் என்னிடம் சொன்னார்.

"அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஸைத் இப்னு ஹாரிஸாவுக்கு தன் மாமியின் மகளான ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களை திருமணம் முடித்து வைத்தார்கள்.

ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் ஸைதை தேடி புறப்பட்டார்கள்.


   அங்கு வாசலில் உரோமங்களாலான துணியால் திரைச்சீலை இடப்பட்டிருந்தது. ஆனால் காற்று திரைச்சீலையை உயர்த்திவிட்டது. இதனால் ஸைனப் தன் அறையில் ஆடையின்றி/தலையை மூடாமல் இருப்பதை வெளிப்படுத்தியது. இதனால் அல்லாஹ்வின் தூதரின் உள்ளம் ஈர்க்கப்பட்டது. அதன்பிறகு ஸைனப் மற்றவரை (ஸைதை) வெறுத்தார். ஸைத் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து: "அல்லாஹ்வின் தூதரே! என் மனைவியை பிரிந்துவிட விரும்புகிறேன்" என கூறினார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் : "உனக்கு என்ன நேர்ந்தது? ....... உன் மனைவியை உன்னிடமே வைத்துகொள் அல்லாஹ்வை பயந்துகொள்" என கூறினார்கள். அப்போது அல்லாஹ் 33:37ஐ இறக்கிவைத்தான்.

"அல்லாஹ் எவருக்கு அருள்புரிந்து, நீரும் எவருக்கு உபகாரம் செய்தீரோ அவரிடம் " உம் மனைவியை உம்மிடமே நிறுத்திகொள்ளும், இன்னும் அல்லாஹ்வை பயநுகொள்ளும்" என்று நீர் கூறியபோது, அல்லாஹ் வெளியாக்க இருந்ததை நீர் உம் மனதில் மறைத்தீர்." அதாவது நீ அவளை பிரிந்துவிட்டால் நான் மணந்துகொள்வளன் என்பதை உள்ளத்தில் மறைத்தீர்"



 🛑. இந்த அறவிப்பை பற்றி பார்ப்போம்:

முதலாவது இதிலும் அறிவிப்பாளர்கள் விடப்பட்ட பலவீனமான செய்தி ஆகும். இதை அறிவிப்பவர் இப்னு ஸைத் என்பவர். இவர் நபித்தோழரோ அதனை தொடர்ந்தவரோ இல்லை. இவர் மரணித்தது ஹிஜ்ரி 182 இல் ஆகும். இதனால் இவர் மிக பிந்தியவர்.

இரண்டாவது இந்த அறிவிப்பாளரை பொருத்தமட்டில் ஹதீஸ்துறை அறிஞர்கள் இவரை மிக பலவீனமானவர் என கூறியுள்ளார்கள். சில அறிஞர்கள் இவரது அறிவிப்புகள் அனைத்தும் கைவிடப்படவேண்டியவை என்கிறார்கள்.

இமாம் புகாரி மற்றும் இமாம் அபூஹாதிம் கூறுகிறார்கள: அலீ இப்னுல் மதீனீ அவரை (இப்னு ஸைதை) மிக பலவீனமானவராக கருதினார். சாஃபியிடமிருந்து அவர் கூறியதாக அறிவிக்கபடுவதாவது:

 அப்துர்ரஹ்மான் இப்னு ஸைத் இப்னு அஸ்லம் இவ்வாறு கேட்கப்பட்டார், " நூஹுடைய கப்பல் கஃபாவை தவாஃப் செய்து இரண்டு ரக்அத்துகள் மகாமு இப்ராஹீமில் தொழுததாக முகம்மது நபி கூறியதாக உம்முடைய பாட்டனாரிடமிருந்து உம் தந்தை உம்மிடம் சொன்னாரா?" என கேட்கப்பட்டது.

அதற்கு அவர் "ஆம்" என பதிலளித்தார்.
(தஹ்தீப் 6/178)

இந்த வசனத்துக்கு இவர் கொடுப்பது அவரது சொந்த விளக்கமே தவிர வேறொன்றுமில்லை.

எப்படி நூஹுடைய கப்பல் கஃபாவை வலம்வந்து இரண்டு ரக்அத் தொழுதது என்பது போல.

இது ஆதாரமன்று


 3.மூன்றாவது அறிவிப்பு:.


முஸ்னத் அஹ்மத் 3/149-150

அனஸ் (ர) கூறியதாக ஹம்மாத் இப்னு ஸைத் கூறியதாக முஅம்மல் இப்னு இஸ்மாயீல் எம்மிடம் கூறினார்:

அல்லாஹ்வின் தூதர் ஸைதுடைய வீட்டுக்கு வந்தார் அவருடைய மனைவி ஸைனபை கண்டார்கள்
அவர் வீட்டினுள் நுழைந்தபடி (இது ஹம்மாதின் கருத்தா அல்லது ஹதீஸிலுள்ளதா என நான் அறியமாட்டேன்).

அப்போது ஸைத் அல்லாஹ்வின் தூதரிடம் ஸைனபை பற்றி முறையிட வந்தார். ஆனால் அல்லாஹ்வின் தூதர், "உம் மனைவியை உம்மிடமே நிறுத்திகொள் அல்லாஹ்வை பயந்துகொள்" என கூறினார்கள். அப்போது "அல்லாஹ் வெளியாக்க இருந்ததை நீர் மறைத்தீர்" என்ற வசனம் "அவளை (ஸைனபை) உமக்கு திருமணம் முடித்து தந்தோம்" வரைக்கும் இறங்கியது.


 🛑. இந்த அறிவிப்பு பற்றி:

இதை அறிவிக்கும் முஅம்மல் இப்னு இஸ்மாயீல் என்பவர் அநேக அறிஞர்களால் பலவீனமானவர் என கூறப்பட்டவர்.
(தஹ்தீப் 10/381)

மேலும் இந்த அறிவிப்பானது புகாரி 7420, திர்மிதி 3212, நஸாயீ 3251 ஆகிய அறிவிப்புகளுக்கு முரணாக உள்ளது.

அவற்றில் 33:37 இன் ஆரம்ப பகுதி ஸைத் முறையிட வந்தபோது எனவும், அடுத்த பகுதி இத்தா காலம் முடிந்த பின்பு இறங்கியது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

எனவே இதுவும் ஏற்றுகொள்ள முடியாத செய்தியே... ஆனாலும் இதில் பாரதூரமான அவதூறு இல்லை



 4.நான்காவது அறிவிப்பு:


இப்னு ஜரீர் அத்- தபரீ தனது தஃப்சீரில் (22/13) கூறுகிறார்.

கதாதாவிடமிருந்து சஈத் அறிவித்ததாக யஸீத் நம்மிடம் சொன்னதாக பிஷ்ர் எம்மிடம் சொன்னார்:

"யாருக்கு அல்லாஹ் அருள்புரிந்து"- அதாவது ஸைதுக்கு இஸ்லாத்தினால் அருள் புரிந்து

"நீரும் யாருக்கு அருள்புரிந்தீரோ'- அதாவது யார் முகம்மது நபியால் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டாரோ,

"உம் மனைவியை உம்மிடம் வைத்துகொள்! அல்லாஹ்வை பயந்துகொள்!"
அல்லாஹ்வின் தூதர் அவ்விருவரும் பிரிந்திவிட வேண்டும் என விரும்பினார்.

ஹசன் கூறினார்: "அல்லாஹ் வெளியாக்க இருந்ததை நீர் உம் மனதில் மறைத்தீர்" என்ற வசனத்தைவிட நபியவர்களுக்கு கடுமையான வசனம் இருந்ததில்லை. அவர் வஹியில் எதையேனும் மறைப்பதாக இருந்தால் இதை மறைத்திருப்பார்.

"நீர் மனிதர்களுக்கு பயந்தீர். ஆனால் அல்லாஹ்வே நீர் பயப்பட மிகவும் தகுதியானவன்" - அல்லாஹ்வின் தூதர் , மக்கள் என்ன கூறுவார்களோ என பயந்தார்கள்.

இந்த கதையை கதாதாவிடமிருந்து மஃமர் வழியாக அப்துர்-ராசிக் அறிவிக்கிறார்:

ஸைத் வந்து "அல்லாஹ்வின் தூதரே! ஸைனபுடைய நாவு என்னோடு மிக கடுமையாக உள்ளது. அவரை பிரிந்துவிட நான் விரும்புகிறேன்" என கூறினார்.

ஆனால் அல்லாஹ்வின் தூதர், "அல்லாஹ்வை பயந்துகொள்! உம் மனைவியை உன்னிடமே நிறுத்திகொள்" என கூறினார்கள். அதேநேரம் அவர்கள் பிரிந்துவிடுவதை விரும்பினார்கள். ஆனால் மனிதர்கள் என்ன பேசுவார்கள் என்பதை பயந்தார்கள்"
(பத்ஹுல் பாரி 8/524)

கதாதா என்ப்பவர் தஃப்சீருக்காக அறியப்பட்ட இமாம். இது அவருடைய சொந்த விளக்கம்.

இவரை பற்றி இமாம் சஅபி கூறுகிறார்.
கதாதா (ஆதாரபூரவமானதையும் ஆதாரபூர்வமற்றதையும்) வேறுபிரித்து அறியமுடியாதவர்.

அபூஉமர் இப்னுல் அலா இவரைபற்றி கூறுகறார.:

 கதாதாவும் அம்ர் இப்னு சுஐபும் அனைவரிடமிருந்தும் அறிவிப்புகளை எடுப்பவர்களாக இருந்தனர். எதையும் தவறானதாக அவர்கள் கருதியதில்லை.
(தஹ்தீப் 8/301-305)

இதில் தவறான எதுவும் நினைக்க இல்லை.

ஸைத் ஸைனபை பிரிந்துவிடுவதை தன்னிடம் கேட்காமல் செய்துவிடுவதையே முகம்மது நபி விரும்பினார். ஏனெனில் ஸைத் ஸைனபை விவாகரத்து செய்துவிடுவார் என அவர் இறைவன் புறத்திலிருந்து அறிந்திருந்தார். இதனால் விவாகரத்து நடப்பதானால் தன்னிடம் கேட்காமலே நடந்துவிட வேண்டும் என விரும்பினார்.

ஆனால் தன்னிடம் அவர் ஆலோசனை கூறியபோது அவ்வாறு செய்துவிட வேண்டாம் என கூறினார்கள்.



 5. ஐந்தாவது அறிவிப்பு:


இப்னு இஸ்ஹாக், ஸீரா அந்நபவிய்யா 283

சஃஅபி கூறியதாக அவரது விடுதலைசெய்யப்பட்ட அடிமை அபூசலமா அல் ஹம்தானியிடமிருந்து யூனுஸ் இப்னு புகைர் அறிவிக்கிறார்:

"ஸைத் சுகயீனப்பட்டார். அல்லாஹ்வின் தூதர் அவரை பார்க்க சென்றார்கள். அப்போது ஸைனப் சைதுடைய தலைமாட்டில் அமர்ந்திருந்தார். ஸைனப் எழுந்தபோது, அல்லாஹ்வின் தூதர் ஸைனபை பார்த்தார்கள். தன் தலையை பணித்துக்கொண்டு ," உள்ளங்களையும் பார்வைகளையும் புரட்டும் அல்லாஹ் தூய்மையானவன்" என கூறினார்கள்.
உடனே ஸைத் "அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்காக அவரை விவாகரத்து செய்துவிடவா?" என கேட்டார்.
உடனே அல்லாஹ்வின் தூதர்: "வேண்டாம்" என கூறினார்கள். அப்போது அல்லாஹ் "எவருக்கு அல்லாஹ் அருள்புரிந்து நீரும் அருள்புரிந்தீரோ அவரிடம் நீர் கூறியபோது" முதல் "அல்லாஹ்வின் கட்டளை நடைபெற்றுதீரவேண்டியதே" வரைக்கும் இறக்கினான்."
இப்னு இஸ்ஹாக்

இதை அறிவிக்கும் சஅபீ ஹிஜ்ரி 21இல் பிறந்தவர். ஆனால் அம்மூவருமோ அவர் பிறக்க முன்பே மரணித்துவிட்டனர். மேலும் இவரும் ஒரு பலவீனமான அறிவிப்பாளரே.
(அபூஸுர்ஆ, அல் ளுஅஃபா (மதீனா பல்கலைகழகம் 1982) பாகம் 2, பக்கம் 432; இப்னு அதீயினுடைய அல்காமில் ஃபிள் ளுஅஃபா பாகம்:4 பக்கம் 333, இலக்கம் 775; இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்களின் அள்-ளுஅஃபா வல்-மத்ரூகீன், பாகம் 2, 12 இலக்கம் 1493; இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானியின் லிஸானுல் மீஸான் பாகம் 3, பக்கம் 112)



 6.ஆறாவது அறிவிப்பு:


தபரானியில் வரும் செய்தி

முகம்மத் இப்னு அப்துல்லாஹ் அல்ஹள்ரமி- அல்ஹசன் பின் அலி அல்ஹுல்வானி- முகம்மத் இப்னு காலித் பின் அஸ்மா- மூஸா இப்னு யஃகூப்- அப்துர்ரஹ்மான் இப்னுல் முனீப்- அபூபக்ர் இப்னு சுலைமான் இப்னு அபூஹஸ்மா:

"அல்லாஹ்வின் தூதர் ஸைதுடைய வீட்டுக்கு சென்று உள்ளே நுழைவதற்கு அனுமதி கேட்டார்கள். ஸைனப் அவருக்கு அனுமதியளித்தார். அவர் முக்காடு அணிந்திருக்கவில்லை. எனவே அவரது ஆடையொன்றை தலையில் போட்டுகொண்டார். அல்லாஹ்வின் தூதர் ஸைதை பற்றி கேட்டார்கள். அதற்கு அவர்: " சற்றுமுன்பு அவன் சென்றார் அல்லாஹ்வின் தூதரே! " என்றார்.
அல்லாஹ்வின் தூதர் எதையோ முணுமுணுத்தபடி போவதற்கு எழுந்தார்.
ஸைனப் சொல்கிறார்: "நான் அவர் சொல்வதை செவிமடுக்க பின்தொடர்ந்து சென்றேன். அவர் "உள்ளங்களை திருப்பக்கூடியவன் பாக்கியம்பொருந்தியவன்" என மறையும்வரை கூறிகொண்டே இருந்தார்.
(தபரானி)

இதை கூறும் அபூபக்ர் பின் சுலைமான் பின் அபூஹஸ்மா என்பவர் தாபீயீன்களில் பிற்காலத்தவர். அவரிடமிருந்து அறிவிக்கும் அப்துர்ரஹ்மான் இப்னுல் முனீப் என்பவர் யாரென்றே அறியப்படாதவர்.

அவருக்கு பின்னுள்ள அறிவிப்பாளரான மூஸா இப்னு யஃகூபுக்கு அறியப்படாத ஆசிரியர்கள் இருந்தனர் என அப்துர்ரஹ்மான் இப்னுல் மஹ்தி கூறுகிறார்.
(தஹ்தீபுல் கமால்-அல்மிஸ்ஸி , பாகம் 29 பக்கம் 172)

இந்த மூஸா இப்னு யஃகூப் என்பவர் கூட மனனத்தன்மை குறைபாடுடையவர் என விமர்சிக்கப்பட்டுள்ளார். (இப்னு ஹஜர் அஸ்கலானியின் தக்ரீபுத் தஹ்தீப் )

எனவே இது பலவீனமான செய்தி ஆகும். இதை கூறுபவர் கூட ஸைனப் அவர்களையோ ஸைத் அவர்களையோ சந்தித்தவரல்ல..

எனவே
இதுவும் தவறான தகவல் ஆகும்.





 7. ஏழாவது அறிவிப்பு:


யஹ்யா இப்னு ஸலாம் தன் தஃப்சீரில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

அல்கல்பீ கூறினார்:
அல்லாஹ்வின் தூதர் ஸைனபை சந்திக்க வந்தார்கள். அவர் நின்றிருப்பதை பார்க்கவே அவர் அன்னாரை ஈர்த்துவிட்டார். ஆகவே அல்லாஹ்வின் தூதர், "உள்ளங்களை புரட்டக்கூடிய அல்லாஹ் தூயவன்" என கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸைனபை விரும்புகிறார் என்பதை கண்ட ஸைத் , "அல்லாஹ்வின் தூதரே! அவரை விவாகரத்து செய்துவிட என்னை அனுமதியுங்கள்" என கூறினார்.

அதற்கு அல்லாஹ்வின்தூதர் அவரிடம் ,"அல்லாஹ்வ பயந்துகொள்! உன் மனைவியை உன்னிடமே வைத்துகொள்" என கூறினார்கள்.

ஆகவே அவரும் அல்லாஹ்நாடியவாறு தன் மனைவியை வைத்துக்கொண்டு பிறகு விவாகரத்து செய்துவிட்டார். அவருடைய இத்தா காலம் முடிந்த பின் அல்லாஹ் அவரது திருமணத்தை தன் தூதருடன் வானத்திலிருந்து இறக்கிவைத்தான்.
(யஹ்யா இப்னு ஸலாமுடைய தஃப்சீர், பாகம் 2, பக்கம் 721-722)

இதை அறிவிக்கும் அல்கல்பீ என்பவர் ஹிஜ்ரி 146 இல் மரணித்தவர். அவர் தான் யாரிடமிருந்து இதை கேட்டேன் என்பதை சொல்லவுமில்லை.

அதுமட்டுமின்றி அவர் ஹதீஸ்துறையில் நிராகரிக்கப்பட்ட அறிவிப்பாளர் ஆவார்.
(சியாருல் ஆலம் அந்நுபலா- தஹபி பாகம் 6 பக்கம் 248-249)

எனவே இதுவும் ஆதாரமற்ற தவறான செய்தி ஆகும்






 8.எட்டாவது அறிவிப்பு:


முகாதில் இப்னு சுலைமானின் அறிவிப்பு

ஸைனபை பற்றி ஸைத் அல்லாஹ்வின் தூதரிடம் முறையிட்டார். அல்லாஹ்வின் தூதர் வந்து ஸைனபுக்கு அறிவுரை கூறினார்கள். ஸைனபோடு பேசியபோது ஸைனபீன் அழகு அவரை ஈர்த்துவிட்டது. அது அல்லாஹ் விதித்தபடி நடந்தது. பின்பு அல்லாஹ்வின் தூதர் திரும்பிவந்துவிட்டார்கள். அல்லாஹ் நாடியது அவருடைய நினைப்பில் இருந்தது. அதன்பின்பு, அல்லாஹ்வின்தூதர் ஸைதிடம் "அவர் உன்னுடன் எப்படி நடந்துகொள்கிறார்" என கேட்டார்கள்.
அவரோ தன் மனைவியை பற்றி முறையிடலானார். ஆகவே அல்லாஹ்வின் தூதர் "அல்லாஹ்வை பயந்துகொள்! உம் மனைவியை உம்மிடமே வைத்துகொள்" என கூறினார்கள் ஆனால் அவரது உள்ளத்திலோ அதுவல்லாததே இருந்தது. .... அதன்பின் அல்லாஹ்வின் தூதர் ஸைதிடம் வந்து ஸைனப் நின்றிருப்பதை பார்த்தார்கள். அவர் அழகானவராகவும் மிகசிறந்த குறைசிய பெண்களில் வெண்மையானவராகவும் அவர் இருந்தார். அவரை அல்லாஹ்வின் தூதர் விரும்பினார்கள். ஆகவே அவர்கள் "உள்ளங்களை புரட்டக்கூடிய அல்லாஹ் தூயவன்" என கூறினார்கள். ஸைத் இதை உணர்ந்து , "அல்லாஹ்வின் தூதரே! என்னை விவாகரத்து செய்துவிட அனுமதியுங்கள். இவர் என்னுடன் கர்வமாக நடக்கிறார் அவரது பேச்சுகளால் என்னை துன்புருத்துகிறார்" என ஸைத் கூறினார். அல்லாஹ்வின்தூதர் "உம் மனைவியை உம்மிடமே வைத்துகொள்ளும். அல்லாஹ்வை பயந்துகொள்ளும்!" என கூறினார்கள். அதன்பிறகும் ஸைத் அவரை விவாகரத்து செய்துவிட்டார்."
(முகாதில் இப்னு சுலைமானின் தஃப்சீர் பாகம் 3 , பக்கம் 492-494)

இதிலுள்ள பிரச்சினை:

இதை கூறுபவர் முகாதில் இப்னு சுலைமான். இவர் இறந்தது ஹிஜ்ரி 150 இல் ஆகும். இவர் இங்கு எந்த அறிவிப்பாளர் வரிசையையும் குறிப்பிடவில்லை. எனவே இது தொடர்பு அறுந்த செய்தி.

இவர் விளக்கமுள்ளவராக இருந்தாலும், இவரது அறிவிப்புகளை நிராகரிப்பதில் அறிஞர்கள் ஒன்றுபட்டுள்ளார்கள் என இமாம் தஹபி சொல்கிறார்.
(இமாம் தஹபியிடைய , சியருல் ஆலம் அந்நுபலா பாகம் 7 பக்கம் 202)


 எனவே இதுவும் பலவீனமான தவறான செய்தி ஆகும்

 ******************************************************************
எனவே இந்த அத்தனை செய்திகளும் அறிவிப்பாளர் வரிசைரீதியாக மிகவும் பலவீனமானவைகள்.

இனி இதன் உள்ளடக்கத்திலுள்ள குழப்பங்களை காண்போம்
*****************************************************************************************************************************


   இந்த அறிவிப்புகளின் உள்ளடக்கத்திலுள்ள குளருபடிகளை காண்போம்:




1.முரண்பாடுகள்:

I. நபியவர்கள் ஸைதுடைய வீட்டுக்கு ஏன் வந்தார்கள் என்பதில் முரண்பாடு:

*ஸைதை காணாததால் பார்க்கவந்ததாக 1வது மற்றும் 2வது செய்திகள் கூறுகின்றன.

*ஸைனபுக்கு உபதேசம் செய்ய வந்ததாக 7வது மற்றும் 8வது அறிவிப்புகள் கூறுகின்றன.

*ஸைதுக்கு சுகயீனம் காரணமாக நலம் விசாரிக்க வந்தார்கள் என 5வது அறிவிப்பு சொல்கிறது

II. நபியவர்கள் வந்தபோது ஸைனபை கண்டபோது ஸைத் இருந்தாரா இல்லையா என்பதில் முரண்பாடு:

*ஸைத் வீட்டிலிருக்கவில்லை என 1வதும் ,2வது, 6வது அறிவிப்புகள் கூறுகின்றன.

*வீட்டில் ஸைத் இருந்ததாகவும் நபியவர்கள் நுழைந்தவுடன் ஸைனபை பற்றி முறையிட அவர் வந்தார் என 3வது அறிவிப்பும்,
ஸைது சுகயீனமாக வீட்டில் இருந்ததாகவும் ஸைனப் அவரது தலைமாட்டில் இருந்ததாகவும் 5வது அறிவிப்பு கூறுகிறது.

III. ஸைனபை எப்படி எந்த நிலையில் பார்த்தார் என்பதில் முரண்பாடு:

*வீட்டில் இரவுஆடையுடன் இருக்க அவர் துள்ளியது ஈர்த்துவிட்டது என 1வது அறிவிப்பும்

*திரைச்சீலை காற்றினால் விலகியதால், ஸைனப் ஆடையின்றி இருந்ததை கண்டு ஈர்க்கப்பட்டார் என 2வது அறிவிப்பு கூறுகிறது.

*ஸைத் சுகயீனமாக இருந்தபோது ஸைதுக்கு தலைமாட்டில் அமர்ந்திருந்த ஸைனப் எழுந்தபோது பார்த்தால் ஈர்க்கப்பட்டார்கள் என 5வது அறிவிப்பு கூறுகிறது.

*முக்காடு இல்லாமல் பார்த்தால் ஈர்க்கப்பட்டார்கள் என 6வது அறிவிப்பு கூறுகிறது.

*ஸைனபை பார்த்து உபதேசிக்க வந்தபோது, அவரை பார்த்து ஈர்க்கப்பட்டார் என 7வது மற்றும் 8வது அறிவிப்புகள் கூறுகின்றன.


இதுவல்லாமலும் இதில் முரண்பாடுகள் உள்ளன. உதாரணமாக நபியவர்கள் என்ன கூறினார்கள்? செவிமடுத்தது ஸைதா ஸைனபா?  வஹி எப்போது வந்தது என சகலதிலும் முரண்

 எனவே இது சாத்தியமல்லாத ஒன்று.





2. இந்த எட்டுஅறிவிப்புகளில் 3வதை தவிர மற்ற அனைத்தும் ஸைனபை முகம்மது நபி பார்த்தபோது விரும்பினார் என்பதில் உடன்படுகிறது. ஆனாலும் இவர்கள் கூறும் இந்த காதல் மிகவும் பிந்தியே (ஸைனப் திருமணம் முடித்தபின்னால்) ஏற்படத்தாக கூறுவது அபத்தமானது.

ஏனெனில் ஸைனப் பிறந்து வளர்ந்தது நபியவர்களுக்கு மத்தியில் தான். அந்த காலத்தில் அவரது அழகை ஸைதுக்கு திருமணம் முடித்து வைக்கும்வரை அவர்கள் அறியாமல் இருப்பார்களா?

எந்தளவுக்கெனில் ஸைனபிடம் ஸைதுக்காக போய் திருமணம் பேசியதே முகம்மது நபி தான். 

முக்காடு அணிவது கடமையாக்கப்பட்டிருக்காத காலத்திலிருந்தே ஸைனபை கண்டுதான் உள்ளார்கள். எனவே முக்காட்டுடனும் முக்காடு இல்லாமலும் அவரை பார்த்தே உள்ளார்கள். இவர்கள் கூறும் காதல் எனும் அவதூறு உண்மையானதாக இருந்திருந்தால், ஸைதுக்கு திருமணம் செய்து கொடுக்க முன்பே முடித்திருப்பாரே! தன் சொந்த மாமியின் (தந்தையின் சகோதரியின்) மகளை பற்றி அவருக்கு தெரியாமலா இருந்திருக்கும்???





3.இந்த அறிவிப்புகள் கூறுவதுபோல நபியவர்கள் ஸைனபை பார்த்தால் ஈர்ப்பு ஏற்பட்டதை ஒரு பேச்சுக்கு உண்மையென கருதினால், முகம்மது நபி செய்ததை போல அப்படி ஈர்க்கப்பட்டவரால் நடந்துகொள்ள முடியுமா? அதாவது தலையை பணித்துகொண்டோ அல்லது அன்னார் கூறியதைபோன்று கூறவோ அப்படிப்பட்டவர்களால் முடியுமா?

அடுத்தது அவர்கள் தன் தலையை பணித்துகொண்டு அந்த வார்த்தைகளை கூறியது எப்படி அவரது ஈர்ப்பை ஸைனபுக்கோ ஸைதுக்கோ சுட்டிக்காட்டும்??

அதுமட்டுமன்றி, இன்னொருவரின் மனைவியை ஆசைவைக்க கூடாது என அவரே போதித்திருக்க , அவர்களே அதை செய்வது எப்படி சாத்தியம்?(abudawud)



சரி ஒரு பேச்சுக்கு நபியவர்களுக்கு ஈர்ப்பு ஏதோ ஒரு தற்செயலாக எதிர்பாராவிதமாக ஏற்பட்டிருந்திருப்பின், அவர்கள் தன் உள்ளத்தில் எனக்காக ஸைனபை ஸைத் விவாகரத்து செய்யவேண்டும் என இருந்ததாக மேற்கூறிய அறிவிப்பாளர்கள் எப்படி மதிப்பிட்டனர்? கண்டறிந்தனர்??



இத்தனைக்கும் பின்னால், அவர்கள் தன் உள்ளத்தில் ஏற்பட்ட ஈர்ப்பையும், ஸைனபை ஸைத் விவாகரத்து செய்ய வேண்டும் என்ற ஆசையையும் மறைத்ததற்காக எப்படி இறைவன் கண்டிக்க போகிறான்??? அப்படி தப்பான ஆசை ஏற்பட்டிருந்தால் அதை நடைமுறப்படுத்த இறைவன் ஏவுபவனா??

இவைகளை சிந்திக்கும்போதே இதிலுள்ள அபத்தங்களும் வழிகேடுகளும் தெளிவாக வெளிப்பட்டு விடுகின்றன.



 4.இந்த அறிவிப்புகள் அறிவிப்பாளர் வரிசையிலும், உள்ளடக்கத்திலும் உள்ள வழிகேடுகள் தெளிவான பின்னாலும் இவற்றை ஏன் பயன்படுத்தவேண்டும்??

நபியவர்களின் உள்ளத்தில் மறைத்திருந்தது "ஸைது தன் மனைவியை விவாகரத்து செய்வார். அதன்பின் நான் முடிப்பேன்" என முன்கூட்டியே இறைவனால் அறிவித்து கொடுக்கப்பட்டது தான் என சாதாரணமாக சிந்தித்தாலும் புரிந்துவிடகூடியதாகவே உள்ளது.



இந்த திருமணத்தை இறைவன் நிறைவேற்றியதற்கு காரணத்தை 33 :37 தெளிவாக சொல்கிறது.


-----------------------------------------------------

முடிவு:

1.நபியவர்கள் தம் உள்ளத்தில் மறைத்து வைத்திருந்தது எதையெனில், அல்லாஹ் அவர்கள் மீது கடமையாக்கிய/விதியாக்கிய இத்திருமணத்தை ஆகும்.

2.இதை மக்கள் குற்றமாக கருதுவார்கள் என்பதால், அல்லாஹ் விதியாக்கியதை செயவதில் எந்த குற்றமும் இல்லை என இறைவன் சொல்கிறான்.
மக்கள் இவ்வாறு குற்றமாக கருதுவதையே நபியவர்கள் பயந்தார்கள்.

3.இத்திருமணத்தை இறைவன் கடமையாக்க முன்பு ஜைதுக்கு ஸைனபை திருமணம் செய்ய வைத்தான். பிறகு அவர் தலாக் செய்த பின் நபிகளாருக்கு திருமணம் செய்துவைத்தான். காரணம்,
"விசுவாசிகளால் வளர்க்கப்பட்டவர்கள் தம் மனைவியரை விவாகரத்து செய்தால், அந்த விவாகரத்து செய்யப்பட்ட பெண்களை வளர்த்த விசுவாசிகளுக்கு முடிப்பதில் எந்த குற்றமும் இருக்காது" என்பதை நிகழ்த்தி காட்டுவதற்கு ஆகும் என்பதை 33:37 சொல்கிறது.

ஏனெனில் சொந்த மகன்களினால் விவாகரத்து செய்யப்பட்டால் ,விவாகரத்து செய்யப்பட்டோரை  திருமணம் முடிப்பது அவர்களின் பெற்றோரான வளர்த்தவர்களுக்கு பெரும் குற்றம். 

இதேபோன்று வளர்க்கப்பட்டோருக்கு வராது என்பதை நிகழ்த்தி காட்டுவதற்கு ஆகும்.


4.நபியவர்கள் தம் வசதிக்காக இதை இட்டுகட்டியிருக்க முடியாது. ஏனெனில் இந்த வசனங்களே அவருக்கு மிகவும் கஷ்டமானதாக இருந்தன. குர்ஆனில் எதையாவதை மறைப்பதாக இருந்திருந்தால் , இந்த 33:37 வசனத்தை மறைத்திருப்பார்கள் என நபித்தோழர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி 7420

எனவே இவ்வவதூறுகள் தவறானவை ஆகும்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்