இயேசு பற்றிய தீர்க்கதரிசனங்கள்-திரிபுகள் (சுவிசேசங்கள்) பகுதி 1

பழைய ஏற்பாட்டில் உள்ள அநேக வசனங்களை திரித்து புதிய ஏற்பாட்டில் இயேசுவை பற்றிய தீர்க்கதரிசனங்கள் என எழுதப்பட்டிருக்கின்றன. அவை பற்றி பார்ப்போம்



1.இம்மானுவேல் முன்னறிவிப்பு



இயேசு ஒரு கன்னியிடம் பிறப்பார் என்று பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளதாக மத்தேயு எழுதுகிறார்:



²¹ “அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.”

²² தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.

²³ “அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.”

²⁵ “அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான். (மத்தேயு 1:21-23,25)




பழைய ஏற்பாட்டில் இதை போய் பார்க்காமலேயே இது இயேசுவுக்கு பொருந்தாததை திணித்து எழுதியுள்ளார் மத்தேயு என புரியும் .



ஏனெனில்

1.தேவதூதன் இயேசு என பெயரிடுமாறே யோசேப்புக்கு சொல்கிறார் -(மத் 1:21)

2.யோசேப்பு குழந்தைக்கு இயேசு என்றே பெயரிட்டார்- (மத் 1:25)

3.மரியாளிடமும் தேவதூதர் இயேசு என பெயரிடுமாறே சொல்கிறார் -(லூக்கா 1:31)

4.மரியாளும் யோசேப்பும் சேர்ந்து குழந்தைக்கு இயேசு என்று தான் பெயரிட்டார்கள் -(லூக்கா 2:21)


ஆகவே இம்மானுவேல் என்று பெயரிடப்படவில்லை! ஆகவே அது இவரை குறிக்க இயலாது.



இனி பழைய ஏற்பாட்டில் போய் இதை பார்ப்போம்:

¹⁴ “ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.”

¹⁵ தீமையை வெறுத்து நன்மையைத் தெரிந்துகொள்ள அறியும் வயதுமட்டும் அவர் வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவார்.

¹⁶ “அந்தப் பிள்ளை தீமையை வெறுக்கவும், நன்மையைத் தெரிந்துகொள்ளவும் அறிகிறதற்குமுன்னே, நீ அருவருக்கிற தேசம் அதின் இரண்டு ராஜாக்களால் விட்டுவிடப்படும்.” (ஏசாயா 7:14-16)



அந்த இம்மானுவேல் பருவ வயதை அடையும் முன்பே , ஆகாஸ் ராஜா வெறுக்கும் தேசம் , அதன் இரண்டு இராஜாக்களாலும் விடப்பட்டுவிடும் என்று உள்ளது.

இயேசு காலத்தில் ஆகாஸ் வெறுத்த தேசம் இரண்டு ராஜாக்களால் விடப்பட்டதா??


ஏன் கர்த்தர் அடையாளத்தை கொடுத்தார்?

ஆகாஸுடைய ஆட்சியில் இஸ்ரவேலின் ராஜாவும், சீரிய ராஜாவும் எருசலேமின் மீது யுத்தம் செய்ய வந்தனர்-(ஏசாயா 7:1)

சீரியர் எப்ராயீம் (இஸ்ரேல்) மக்களுடன் இருப்பதை அறிந்து ராஜா ஆகாஸ் பயந்தான் -7:2

கர்த்தர் ஏசாயாவையும் பையனையும் அனுப்பி ராஜாவிடம் இதை குறித்து அஞ்ச வேண்டாம் என்று சொல்ல சொல்கிறார் -7:3-6

அவர்கள் திட்டம் போட்டது நடக்காது என்றும், 65 வருடங்களில் இஸ்ரேல் /எப்ராயீம் தேசம் நிலைக்காமல் அழிந்து போகும் என்கிறார் -7:7-9

இது நடப்பதற்கு தேவனிடம் அடையாளத்தை வேண்டிக்கொள் என ராஜாவிடம் கூற, ராஜா கேட்கமாட்டேன் என்கிறான்-7:10-12



அப்போது தான் இந்த அடையாளம் கொடுக்கப்படுகிறது.

அதாவது ஒரு கன்னி/இளம் பெண் கர்ப்பமாகி ஒரு குமாரனை பெற்று இம்மானுவேல் என பெயரிடுவான். அவன் வளர்ந்து பெரியாளாக முன்பே அவன் அவருவருத்த எப்ராயீம் தேசம் சீரிய ராஜாவினாலும், இஸ்ரேல் ராஜாவினாலும் கைவிடப்படும் என்ற அடையாளம் கொடுக்கப்படுகிறது !


இயேசு காலத்தில் இஸ்ரேல் ராஜா இருந்ததா? சீரிய ராஜா இருந்ததா? அவர்கள் ஆகாஸ் காலத்திலிருந்து 65 வருட காலத்தினுள்ளே வாழ்நதனரா?

இல்லை.. மாறாக 700 வருடங்கள் பின்பு இயேசு பிறந்தார்.


65 வருடத்தில் இஸ்ரேல்/எப்ராயீம் அழியும் என்பதற்கு அடையாளமாக கொடுக்கப்பட்ட குழந்தை பருவ வயதை அடைய முன்பே எப்ராயீம் தேசம் கைவிடப்படும் என்பதிலிருந்து இம்மானுவேல் ஆகாஷ் காலத்தில் பிறப்பவன் என்று தெளிவாகிறது.


-அடுத்து கன்னி கர்ப்பமாகி குழந்தை பெறுவாள் என்பது, உடலுறவின்றி பிறக்கும் என்பது அல்ல!! மாறாக கன்னிப் பெண்ணை திருமணம் முடித்து அவள் பெறும் முதல் குழந்தை என்பதாகும்.

இவ்வாறே ஏசாயா ஒரு தீர்க்கதரிசி பெண்ணை சேர்ந்து பிள்ளை பெற வைக்கிறார்- ஏசாயா 8:3

இந்த பையன் பேச துவங்கும் முன்பே இஸ்ரேல் (சமாரியா), தமஸ்கு (சீரியா) செல்வங்களெல்லாம் அசீரிய ராஜாவுக்கு கிடைத்துவிடும் என்கிறார் -8:4



அசீரிய ராஜா மூலம் இஸ்ரேலை அளிப்பார் என்கிறார்-8:6-7

இது யூதாவுக்குள்ளும் புகும் என்று இம்மானுவேலை விளித்து சொல்கிறார்-ஏசாயா 8:8

ஆகவே இம்மானுவேல் என்பவர் ஏசாயா காலத்தில் உள்ளவனே அல்லாமல் ,700 வருடம் பிறகு பிறப்பவர் அல்ல!


ஒரு கன்னி/இளம் பெண் கர்ப்பமாகி ஆண்பிள்ளையை பெறுவாள் என்பதால், இயேசு கன்னியின் பையன் என்பதால், அதனுடன் சம்பந்தமின்றி லின்க் செய்துள்ளார் மத்தேயு!


வேடிக்கையாக கன்னியை குறிப்பதற்கு பாவிக்கும் பெத்தூலா என்ற வார்த்தையே இங்கு இல்லை !

மாறாக அல்மா என்ற வார்த்தையே உள்ளது. அது இளம் பெண்ணையே குறிக்கும்! கன்னியும் அதில் அடங்கினாலும், எப்போதும் அது கன்னியையே குறிக்கவேண்டியதில்லை!

—————–


2.பெத்லகேமில் பிறப்பார்.


⁵ அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அதேனென்றால்:

⁶ “யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள்.”(மத்தேயு 2:5-6)

இங்கே பெத்லகேமில் பிறப்பார் என வேதபாரகர் மெசியாவை குறித்து சொன்னார்களாம்.


லூக்கா 2:5இன்படி , நாசரேத் ஊரில் வாழ்ந்த இருவர் குடிமதிப்பு எழுத பெத்லகேமுக்கு போக , அங்கே இயேசு பிறந்தார். பின்பு மத்தேயு 2:22, லூக்கா 2:39,51,மாற்கு 1:24,6:1 ,யோவான் 7:41-42 படி அவர்கள் மீண்டும் நாசரேத் ஊரில் தான் வாழ்ந்தனர்…



குறிப்பாக யூதர்கள் இயேசுவை ஏற்காததற்கு காரணமாக கிறிஸ்த்து (மெசியா) தாவீதின் ஊரிலிருந்து வருவார். ஆனால் இயேசுவோ கலிலேயா (இதன் ஒரு ஊர் நாசரேத்) இலிருந்து கிறிஸ்து (மெசியா) வரமாட்டார் என்ற கருத்தும் இருந்தது. (யோவான் 7:41-42).


மெசியா பெத்லகேமிருந்து புறப்படுவாரே தவிர, அவர் பெத்லகேமில் பிறப்பார் என கூறப்படவில்லை

இயேசு பெத்லகேமில் வாழ்ந்தவர் அல்ல என்பதால் (அவர் நசரேத்தில் தான் வாழ்ந்தார்.) அவரை பெத்லகேமில் ஜாயின் பண்ணி விடுவதற்காக தான் பெத்லகேமுக்கு அவரது பெற்றோர் போனதாகவும், அங்கே அவர் பிறந்ததாகவும் கதை எழுதப்பட்டுள்ளது.


இதற்கு வேடிக்கையான ஒரு காரணம் கூறப்படுகிறது. குடிமதிப்பு எழுதுவதற்காக யோசேப்பு தன் தந்தையான தாவீதின் ஊருக்கு போனாராம்.காரணம் அவர் தாவீதின் வம்சத்தானாம். (லூக்கா 2:4-5).

யோசேப்பு தனக்கு முன் 1000 வருடத்திற்கு முன் வாழ்ந்த தன் முன்னோரின் ஊருக்கு ஏன் குடிமதிப்பு எழுத போக வேண்டும்?? அப்படி சட்டம் ஏதும் இருக்கவில்லை…. இயேசுவுக்கு பெத்லகேமுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு இவ்வாறு எழுதியுள்ளார்கள்.


அடுத்து இந்த மெசியா இஸ்ரேலை ஆளப்போகும் பிரபு ஆவார். ஆனால் இயேசுவை குறித்து அப்படி புதிய ஏற்பாடு சொன்னாலும், அவர் இஸ்ரேலை ஆளவில்லை!!!


ஆகவே இது இயேசுவுக்கு பொருந்தாது.


காரணம்

1.மீகா 5:2 இல் மெசியா பெத்லகேமில் பிறப்பார் என சொல்லவில்லை!

2.இயேசு பெத்லகேமில் வாழவில்லை. அவர் வாழ்ந்தது கலிலேயாவில் நாசரேத் ஊரில் ஆகும்.

மேலும் அவர் இஸ்ரேலை ஆளுபவர். இயேசு ஆளவில்லை!

————-



3.எகிப்தில் மெசியா வாழ்வார் என்று உள்ளதாம்.



¹⁴ “அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய்,”

¹⁵ “ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.” (மத்தேயு 2:14-15)



முதலில் இது தீர்க்கதரிசனமே கிடையாது. இஸ்ரேல் மக்களை மோசே காலத்தில் எகிப்திலிருந்து புறப்படப் பண்ணியதை கூறும் வசனம் ஆகும்.



“”அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன்.””

— யாத்திராகமம் 4:22



¹ இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்.

² “அவர்கள் தங்களை அழைக்கிறவர்களின் முகத்துக்கு விலகிப்போய்விட்டார்கள்; பாகால்களுக்குப் பலியிட்டு, விக்கிரகங்களுக்குத் தூபங்காட்டினார்கள்.” (ஓசியா 11:1-2)



ஓசியா 11:1 இல் , இஸ்ரேலிய மக்களை ஒருமையில் ஒரு இனமாக கூறி , அவர்களை எகிப்திலிருந்து வெளிக்கொண்டுவந்ததை, அப்படியே இயேசுவை குறித்து சொன்னதாக புழுகியுள்ளார் மத்தேயு.


அங்கே “என்னுடைய குமாரன்” என உள்ளதால், இயேசுவை தேவனுடைய குமாரன் என இவர் நம்புவதால், அப்படியே அதை தீர்க்கதரிசனம் என்பது போல இட்டுக்கட்டி எழுதுகிறார்.

ஆகவே இது இயேசு குறித்த தீர்க்கதரிசனம் அல்ல.

காரணம்:

அது இஸ்ரேலிய மக்களை குறித்து கூறுவது. அதுவும் கடந்த கால நிகழ்வை குறிப்பதாகும்.

—————–


4.குழந்தைக்கொலை



¹⁶ “அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான்.”

¹⁷ “புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாதிருக்கிறாள் என்று,”

¹⁸ எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.(மத்தேயு 2:16-18)


இதுகூட வேடிக்கையாக உள்ளது.

இங்கு குழந்தை கொலை நடந்ததாக கூறப்படுவது பெத்லகேமில் ஆகும். அதாவது யூதா கோத்திரத்திற்கு கிடைக்கப்பெற்ற இடத்தில் ஆகும்.

யூதாவோ லேயாள் (லேயா) என்ற பெண்ணுக்கு பிறந்தவர் ஆவார்.

ராகேலுக்கு இரண்டு பிள்ளைகள் தான் பிறந்தனர். முதலாவது யோசேப்பு. அவரது தம்பி பென்யமீன். யோசேப்பின் ஒரு மகனான எப்ராயீம் மக்களுக்கு கிடைக்கப்பெற்ற இடமே ராமா என்ற இடமாகும்.


அதாவது லேயாளுடைய பையன்கள் பெத்லகேமில் கொல்லப்பட்டதற்காக, அவளுடைய தங்கச்சி தன் பேரக்குழந்தையின் ஜனங்களுக்காக அழுகிறாளாம்.. ஏதாவது சம்பந்தம் உள்ளதா?

அதுமட்டுமின்றி அலுகுரல் எப்ராயீம் மக்கள் வாழ்ந்த வேறோரு இடத்தில் கேட்கப்பட்டதா?

ஆகவே சம்பந்தமின்றி மத்தேயு மேற்கோள் காட்டியுள்ளார்.


மேலும் மத்தேயு குறிப்பிடும் எரேமியா வசனத்தை பாருங்கள்:



¹⁵ “ராமாவிலே புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாதபடியால் அவைகளினிமித்தம் ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”

¹⁶ “நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர்விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன் கிரியைக்குப் பலனுண்டென்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் சத்துருவின் தேசத்திலிருந்து திரும்பிவருவார்கள்.”

¹⁷ உன் முடிவைப்பற்றி உனக்கு நம்பிக்கையுண்டு; உன் பிள்ளைகள் தங்கள் தேசத்துக்குத் திரும்பிவருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். (எரேமியா 31:15-17)


இதன்படி எப்ராயீம் கோத்திரத்தினர் ராமாவிலிருந்து பிடிக்கப்பட்டு சென்றுவிட்டனர். அதற்காக ராகேல் அழுவதாகவும், ராமாவில் அழுகுரல் கேட்பதாகவும் எழுதப்பட்டுள்ளது. அந்த ராகேலின் பிள்ளைகள் திரும்பவும் அதே தேசத்திற்கு வருவார்கள் என்றும் (17ம் வசனம் ) கூறுகிறது.


ஆகவே அடிமைகளாக கடத்திச்செல்லப்பட்ட எப்ராயீம் இனமக்களை குறித்து கூறப்பட்டதை, சம்பந்தமேயின்றி குழந்தைக்கொலையுடன் இணைத்து புழுகுகிறர் மத்தேயு.


ஆகவே இது திரிக்கப்பட்டதாகும்.

காரணம்:



1.இது கடத்திச் செல்லப்பட்ட எப்ராயீம் கோத்திரத்தினரை குறித்தது.

ஆனால் குழந்தைக்கொலையோ யூதா கோத்திரத்துடன் சம்பந்தப்பட்டது.



2.எப்ராயீம் கோத்திரத்தினரே ராமாவில் வாழ்ந்தனர். பெத்லகேமில் அவர்கள் இருக்கவில்லை.

3.ராகேலின் பிள்ளைகளில் யோசேப்பின் பையனான எப்ராயீம் கோத்திரத்தினர் தான் வருவர். லேயாளின் பையனாகிய யூதா கோத்திரம் அல்ல!




————-

5.நசரேயன் என அழைக்கப்படுவார்



²³ “நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம்பண்ணினான். நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. ” (மத்தேயு 2:23)


இப்படி ஒரு தீர்க்கதரிசனம் எந்தவோர் புத்தகத்திலும் இல்லை! சிம்சான் என்பவர் பிறந்தது முதல் நசரேயனாக இருப்பார் என்று உள்ளது. இங்கே நசரேயன் என்பது ஊர் சார்ந்தது அல்ல… விரதமிருப்பவரை குறிக்கிறது. அதுகூட மெசியாவை பற்றிய தீர்க்கதரிசனம் அல்ல.. சிம்சானை பற்றியது. (நியாயாதிபதிகள் 13:5,7)


ஆனால் மத்தேயுவோ ஊரோடு லின்க் பண்ணி கதை விடுகிறார். ஆனால் மெசியா வை குறித்து அவர் நசரேயனாக இருப்பார் என எந்த தீர்க்கதரிசன புத்தகத்திலும் இல்லை!

ஆகவே இதுவும் போலி

————



6.வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம்



“”கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே.””

— மத்தேயு 3:3



³ “கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும், தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்;” மாற்கு 1:3



³ “அப்பொழுது: கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்,”

⁴ “பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் செவ்வையாகும், கரடானவைகள் சமமாகும் என்றும்,”

⁵ “மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள் என்றும், வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்று ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தில் எழுதியிருக்கிறபிரகாரம்,”

⁶ “அவன் யோர்தான் நதிக்கு அருகான தேசமெங்கும் போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான்.” (லூக்கா 3:3-6)



²³.அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ்வைப்பண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்.””(யோவான் 1:23)



ஏசாயா தீர்க்கதரிசி யோவானைக்குறித்தே இவ்வாறு சொன்னதாக நான்கு சுவிசேசங்களும் பொய்யாக பேசுகின்றன.

உண்மையில் இது ஏசாயா தீர்க்கதரிசியிடம் பேசிய சத்தமாகும் .


³ “கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்,”

⁴ “பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும் என்றும்,”

⁵ “கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று.”

⁶ “பின்னும் கூப்பிட்டுச் சொல் என்று ஒரு சத்தம் உண்டாயிற்று; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேன் என்றேன். அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது.” (ஏசாயா 40:3-6)



ஏசாயாவிடம் பேசிய சத்தத்தை யோவானை குறித்து சொல்வதாக நான்கு சுவிசேசங்களும் கூறுகின்றன.

————



7.இயேசு நசரேத்தை விட்டு கப்பர்நகூமில் வாசம் பண்ணுதல்



¹³ “நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகான கப்பர்நகூமிலே வந்து வாசம்பண்ணினார்.”

¹⁴ “கடற்கரையருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலுமுள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடும் ஆகிய புறஜாதியாருடைய கலிலேயாவிலே,”

¹⁵ “இருளில் இருக்கும் ஜனங்கள் பெரியவெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று,”

¹⁶ ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.(மத்தேயு 4:13-16)


இயேசு கப்பர்நகூமுக்கு வருவதற்கும் செபுலோன் நப்தலி நாட்டில் இருக்கும் ஜனங்கள் வெளிச்சத்தை காண்பதற்கும் என்ன சம்பந்தம்??

இயேசு செபுலோன் நப்தலி நாட்டுக்கு வரவுமில்லையே.

மேலும் ஏசாயா 9:1-4 பார்த்தால், இது இயேசுவுக்கு சம்பந்தமில்லை என்று புரியும்.

ஏசாயா 8 முதல் 9 அதிகாரம் அசீரியருக்கு அடிமையாகப்போகும் மக்களை குறித்து சொல்கிறது. ஆனால் அப்போது செபுலோன் நப்தலீ நாடுகளுக்கு அப்படி நிகழாது என்றும் கூறி, அவர்கள் தான் வெளிச்சத்தை கண்டவர்கள்.



அசீரியருக்கு அடிமையாகி விடுதலைபெற்று ரோமருக்கு அடிமையாக இருந்தோரை பற்றி இங்கு பேசவில்லை! ஆகவே இயேசுவை குறித்து சொல்லியிருப்பதாக மத்தேயு பொய்யே சொல்கிறார்.



—————–


8.நோயாளிகளை சுகப்படுத்தல்


¹⁶ “அஸ்தமனமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார்.”

¹⁷ “அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.”(மத்தேயு 8:16-17)



இயேசு நோயாளிகளை சுகப்படுத்தியதை, அவர் நம் நோய்களை சுமந்தார் என்று சம்பந்தமின்றி ஏசாயா 53:4 ஐ குறிப்பிடுகிறார்.


“ஆனால், அவர் நமது நோய்களை எடுத்து தனதாக்கிக்கொண்டார். அவர் நமது வலியை எடுத்துக்கொண்டார். தேவன் அவரைக் தண்டித்துவிட்டார் என்று நாம் நினைத்தோம். அவர் செய்தவற்றுக்காகத் தேவன் அவரை அடித்தார் என்று நாம் நினைத்தோம்.”

— எசாயா 53:4 (ERV-TA)



ஏசாயா கூறும் நபரோ, மற்றவர்களின் நோயையும் சுமந்த பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி ஆவார்.



ஆனால் இயேசு நோயாளி அல்லவே!

நோயை சுமந்தார் என்று இருப்பதால், கொஞ்சமும் யோசிக்காமல் நோயை சுகபபடுததிதுடன் லின்க் பண்ணுகிறார்.


ஆகவே இதுவும் ஒரு திரிபே ஆகும்.

—————–

அடுத்து பாகம்




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்