ஆதியாகமம்- தொடர் 1
ஆதியாகமம் பாகம் 1
பழைய ஏற்பாட்டின் ஆதியாகம புத்தகத்தை நாம் சற்று அலசலாம் என்று உள்ளோம்.
அதில் முதல் வசனத்தையும் அதை திரித்து கிறிஸ்தவர்கள் வைக்கும் வாதங்களையும் அதற்கான பதில்களையும் பார்ப்போம்.
உள்ளடக்கம்:
1.எலோஹீம் என்பது திரித்துவமா?
2.எத் (את) என்பது திரித்துவத்திற்கு சாதகமாக அமையுமா?
3.எழுத்து விளையாட்டு 1 - பென்
4.எழுத்து விளையாட்டு 2- பாராவும் பாரும்
1.“ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.”
— 1:1
1.எலோஹீமும் கிறிஸ்தவ திரிபும்
அ.இங்கே தேவன் என்பதை குறிக்க "எலோஹிம் (אלהים) " என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது.
இது "எலோஹ்ஹ (אלוֹהַּ)"என்பதன் பன்மையாகும். இதன் நேரடி அர்த்தம் "கடவுள்கள்" என்பதாகும்.
இதனால் கிறிஸ்தவர்கள் , "இது திரித்துவத்தை குறிக்கிறது " என்கிறார்கள்.
இது அறிவீனமான வாதமாகும். ஏனெனில் திரித்துவம் என்பது ஒரே கடவுள் மூன்று நபர்களாக செயற்படுகிறார்கள் என்பதாகும்.
இவர்கள் கருதுவது போல் வரவேண்டுமாயின் பன்மையில் வரவே கூடாது. வேண்டுமானால் பலதெய்வ கொள்கைக்கு தான் ஆதாரமாக கருதவேண்டும். இது இவர்களது அடிமனதில் இருந்தே , இவர்களது நம்பிக்கை ஒரு கடவுள்கொள்கை அல்ல. மூன்று கடவுள்கள் கொள்கையே என்று வெளிப்படுகிறது.
இனி எலோஹிம் பற்றி பார்ப்போம்:
எலோஹீம் என்பது பாவிக்கப்பட்ட சில இடங்களும் அர்த்தமும்
1.பல தேவர்கள் என்பதை குறிக்கவும் (1 சாமுவேல் 4:8, யாத்திராகமம் 20:3, உபாகமம் 5:7, நியாயாதிபதிகள் 2:3)
2.தேவதூதர்கள் (சங்கீதம் 8:5)
3.மோசே என்ற தனி மனிதரை குறித்து (யாத்திராகமம் 7:1)
4.சாமுவேல் தீர்க்கதரிசியை குறித்து-(1 சாமுவேல் 28:13-14)
5.நியாயதிபதிகளை குறிக்க- (யாத்திராகமம் 21:6)
6.பாகால்பேரீத் எனும் போலி தேவனை குறிக்க (நியாயாதிபதிகள் 8:33)
7.பாகால் என்ற ஒத்தை கடவுளை குறித்து கேலியாக எலியா சொன்னது (1 இராஜாக்கள் 18:27)
இவ்வாறு பலவிதமாக எலோஹீம் என்பது கையாளப்பட்டுள்ளது.
அது பன்மையை (plural) மட்டுமே குறிக்கும் என்று வாதிடுவது அபத்தமாகும்.
பெரிய கடவுளாக வணங்கப்படும் ஒற்றை கடவுளுக்கும் எலோஹீம் என்பது பயன்படுத்தப்படுகிறது. ஒற்றையான போலிக் கடவுளையும் இதே எலோஹீம் என்ற வார்த்தையால் பைபிள் குறிப்பிடுகிறது (நியா 8:33, 1 இராஜாக்கள் 18:27)
அதேபோல் ஒற்றை நபர்களுக்கும் (மோசே , சாமுவேல்) பாவிக்கப்பட்டுள்ளது. (யாத்திராகமம் 7:1, 1சாமுவேல் 28:13-14)
ஆகவே எலோஹீம் என்றாலே பன்மையை மட்டுமே குறிக்கும் என்றும் அது திரித்துவத்திற்கு ஆதாரம் என கருதுவதும் மடத்தனமாகும்.
மேலதிகமாக,
"சிருஷ்டித்தார்" என்பதை குறிக்க "பாரா (baaraa) -(בָּרָא)" என்றே உள்ளது. அதாவது இது ஒருமை ஆண்பால் வினைச்சொல் ஆகும்.
இவர்கள் கருதுவது போல், ஒரு தேவன் மூன்று நபர்களாக செயற்பட்டு, மூன்று நபர்களும் படைத்தனர் என்றால், "பாரூ -baaru (בּרוּ) என்று வரவேண்டும்.
இதிலிருந்து கடவுள் ஒரு நபரே என்று தெளிவாகிறது.
அவர் ஒற்றை நபர் தான் என்பதை ஏசாயா 43:10-15,25, 44:24, 45:5-7, 46:9 என பல வசனங்கள் கூறுகின்றன.
“"நான் பூமியை உண்டுபண்ணி, நானே அதின்மேல் இருக்கிற மனுஷனைச் சிருஷ்டித்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன்."”
— Isaiah 45:12 (TBSI)
“"நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்."”
— Isaiah 44:6 (TBSI)
⁵ "நானே கர்த்தர், வேறொருவர் இல்லை; என்னைத்தவிர தேவன் இல்லை."
⁶ "என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே கர்த்தர், வேறொருவர் இல்லை." ஏசாயா 45:5-6
நான் தான் படைத்தேன். என்னை தவிர தேவன் இல்லை என்று தான் ஒரே நபர் தான். மூன்று நபர்களது கூட்டு அல்ல என தெளிவான ஏகத்துவத்தை இவை கூறுகின்றன.
ஆகவே எலோஹீம் என்பதை வைத்து இப்படி கதை கட்டுவது அபத்தமாகும்
2.எத் (את) பற்றிய திரிபுக்கு மறுப்பு
ஆ.ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் என்பதில் "எத் -eth (את)" என்ற சொல் இருதடவை வருகிறது. இது ஆவியானவரும் வார்த்தையானவரும் ஆகிய இருவரையும் குறிக்கும் என்கிறார்கள் சில போதகர்கள். யூட்யூப் இல் இது பற்றி மணித்தியாலக்கணக்கில் பொய்களை பேசியிருக்கிறார்கள்.
இது பற்றி பார்ப்போம்.
உண்மையில் את-எத் என்பது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க இயலாத வார்த்தை ஆகும். ஆனால் இதை தமிழில் மொழிபெயர்க்கலாம். இது தான் தமிழில் நாம் பாவிக்கும் இரண்டாம் வேற்றுமை உருபு "ஐ" என்பதாகும்.
எபிரேயத்தில் நேரடி செயற்படுபொருளை குறிக்க "את-எத்" என்பது செயற்படுபொருளுக்கு முன்னால் இடம்பெறும். தமிழில் செயற்படுபொருளை குறிக்க சொல்லின் இறுதியில் "ஐ" என்ற வேற்றுமை உருபு இடம்பெறுவது போல தான் இது.
உதாரணமாக
ஆதாம் ஏவாளை அறிந்தான்-
ஹாஆதாம் யாதஃ' எத்-ஹவ்வா (ஆதி 4:1)
ஏவாள்+ஐ = எத்+ஹவ்வா
எபிரேய இலக்கண அறிவில் சற்றும் ஞானம் இல்லாத மடையர்கள் தான் இவ்வாறு புதுசு புதுசாக பொய்களை அடித்துவிடுவார்கள்.
இந்த இலக்கண விசயத்தை மேலும் ஆழமாக விளக்க தேவையில்லை.
கடைசியாக ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் எசேக்கியேல் 23இலிருந்து காட்டுகிறேன்.
"தான் எகிப்திலே பண்ணின வேசித்த்தனங்களை அவள் விடவில்லை" எசேக்கியேல் 23:8
இங்கேயும் அவளுடைய "வேசித்தனங்களை" என்பதை குறிக்க את- முதலிலேயே பாவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வேசித்தனங்களை வார்த்தையானவரும் ஆவியானவரும் செய்தனர் என்று சொன்னால் அவர்களை இழிவுபடுத்துவதாக அமையுமே.
ஆகவே மொழியறிவு இன்றி கதை கட்டுவது தன் கடவுள்களையே கேவலப்படுத்துவதாக அமையும்
3.எழுத்து விளையாட்டு 1. (பென்)
இ."ஆதியிலே" என்று தொடங்கும் இவ்வசனம் எபிரேயத்தில் "பெரேசீத் -Bereshith -(בְּרֵאשִׁ֖ית)" என தொடங்குகிறது. இதன் ஆரம்ப எழுத்து ba (பா) ஆகும். வெளிப்படுத்தின விசேஷம் இறுதி வசனம் "ஆமென்" என முடிகிறது. அதாவது "ன்" இல் முடிகிறது.
ஆகவே பே யில் தொடங்கி "ன்" இல் முடிகிறது. இதை சேர்த்து வாசித்தால் "בּן" ben- பென் என வரும். அதாவது "மகன்" என்பதாகும்.
இதிலிருந்து தேவனுடைய பையனை பற்றி வெளிப்படுத்துவதற்கே வேதம் வந்தது என புரிகிறது என்று இவர்கள் கதை விடுகிறார்கள்.
இதை பார்த்தவுடனே அபத்தமான வாதம் என புரிந்துவிடும். ஆரம்ப எழுத்தையும் கடைசி எழுத்தையும் சேர்த்து வார்த்தை அமைத்து விளையாடுவது மடத்தனம். பென் என்றாலே தேவனது பையன் என்று வராது.
இப்படி கூறுவதானால் இது Ben 10 கார்ட்டூனை பற்றி தான் வெளிப்படுத்துகிறது என்றும் சொல்லலாம். அல்லது அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரை குறிக்கலாம் என்றும் சொல்லலாம்.
பழைய ஏற்பாட்டை படித்தால், அதிலே இஸ்ரேலை தான் தேவனது பையன் என்று குறிப்பாக சொல்லப்பட்டிருக்கும். (யாத்திராகமம் 4:22, ஓசியா 11:1).
புதிய ஏற்பாட்டிலோ பழைய ஏற்பாட்டை திரித்து, யாரையெல்லாம் தேவனது குமாரன் என்று சொல்லப்பட்டிருக்கிறதோ, அங்கே போய் அது இயேசவை குறித்து சொல்லப்பட்டுள்ளதாக எழுதியுள்ளனர். உதாரணமாக ஓசியா 11:1 ஐ மத்தேயு 2:15 இல் இயேசுவை குறித்து சொல்லப்பட்டுள்ளதாக எழுதப்பட்டுள்ளது.
ஆகவே சொல் விளையாட்டு எழுத்து விளையாட்டு எல்லாம் சரிவராது. வீண் கற்பனைகளே
4.எழுத்து விளையாட்டு 2- பாரா (בּרא)
பாராவும் (ברא) பாரும் (בר)
பாரா என்றால் படைத்தார் என்று அர்த்தம். அராமிக் பாசையில் பர் (bar- בַּר) என்றால் மகன் என்று அர்த்தம். அதனால் ஆதியாகமத்திலேயே இயேசுவை பற்றி உள்ளது என்று கதைவிடுகிறார்கள் சில போதகர்கள்.
அப்படி பார்த்தால் ஆங்கிலத்தில் bar என்ற எழுத்துமுறையே அராமிக்கில் மகனை குறிக்க பயன்படுகிறது. அப்படி பார்த்தால் மகன் என்று அராமிக்கில் வருவதெல்லாம் மதுக்கடைகளை குறிக்கும் என்று சொன்னால் ஏற்பார்களா?
Zebra runs fast என்றால் அதை நேரடி அர்த்தத்தை விட்டுவிட்டு, Zebra என்பதிலேயே bra என்று உள்ளது என்று கூறி அதற்கென்று கதை அளந்தால் சரிப்பட்டு வருமா?
தேவனை (אלהים) எலோஹீம் என்று ஆதி 1:1 இல் எழுதப்பட்டுள்ளது. அதேபோல் எலோவா (אלה) என அபக்கூக் 1:11 இல் எழுதப்பட்டுள்ளது. அராமிக்கில் எலாஹ் (אלה) என எஸ்ரா 5:1 இல் எழுதப்பட்டுள்ளது. . அதேபோல் சாபம் என்பதை ஆலா (אלה) என்று தான் சொல்வார்கள்-உபா29:20 . அதற்கும் ஒரே எழுத்துக்கள் தான் வருகிறது.
அப்படி பார்த்தால் தேவன் என்பது சாபத்தை வெளிப்படுத்துகிறது என்று சொன்னால் ஏற்பார்களா?
அதேபோல் சில ஏசாவின் வம்சத்தில் வரும் பிரபுவான ஏலா (אלה) என்பதற்கும் அதே எழுத்துக்கள் தான் வருகிறது.-ஆதி 36:41
இதுபோல் நிறைய உள்ளன.
ஆகவே இதுபோன்ற கதைகள் மடத்தனமானவை ஆகும்.
ஆகவே இதுபோன்ற மடத்தனமான வாதங்களை தவிருங்கள்.
-----
கருத்துகள்
கருத்துரையிடுக