ஆதியாகமம் தொடர்-5

 ஆதியாகமம் தொடர்-5

தொடர்4 இன் தொடர்ச்சி

உள்ளடக்கம்

14.தேவன் பறவைகளை எதனால் படைத்தார்? எப்போது படைத்தார்?-முரண்பாடு

15.ஆடையின்றி நிர்வாணமாக இருந்த மனிதன்

16.ஏதேன் தொட்ட வாழ்க்கை தற்காலிக பயிற்சியே

17.பாம்பு சொன்னது உண்மையானதாம். தேவன் சொன்னது பொய்யானதாம் 

18.பெண்ணின் வித்தும் கிறிஸ்தவமும்



14.தேவன் பறவைகளை மண்ணினால் படைத்தாரா தண்ணீர் உண்டாக்கியதா? பறவைகளும் மிருகங்களும் மனிதனுக்கு முன்பே படைக்கப்பட்டனவா? மனிதனுக்கு பின்பு படைக்கப்பட்டனவா?  


“"தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று."”

  — ஆதி 2:19 (TBSI)


ஆனால் பறவைகள் தண்ணீர் மூலமாகவும், மிருகங்கள் தான் மண் மூலமாகவும் படைக்கப்பட்டதாக முதலாம் அதிகாரம் சொல்கிறது.


²⁰ "பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்."

 …  

²⁴ "பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று." (ஆதியாகமம் 1:20,24)


இதிலே இன்னொரு டவுட்டும் வருகிறது, அதாவது மிருகங்களை, பறவைகளை ஆதாமுக்கு முன்பே ஐந்தாம் நாளிலும் (ஆதி 1:20-23) , மிருகங்களை ஆறாம் நாளிலும் (ஆதி 1:24-25) படைத்தாரா? அல்லது ஆறாம் நாளில் ஆதாமை படைத்த பின்பு பெயரிடுவதற்காக சகலத்தையும் படைத்தாரா என்ற பிரச்சினையும் எழுகிறது.

ஏனெனில் முதலாம் நாளிலேயே சகல மரங்களை படைத்தாலும் அவை எதுவுமே முளைக்கவில்லை , காரணம் மனிதன் இருக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

“"நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை; ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை."”

  — ஆதி 2:5 (TBSI)


மரங்கள் மனிதன் நிலத்தை பண்படுத்தும் வரை முளைக்கவில்லை என்றால், பறவைகள் , மிருகங்கள் ஒரு நாள் பட்டினி கிடந்திருக்க வேண்டும்.

ஏனெனில் தேவன் அவைகளுக்கும் மனிதனுக்கும் கனிமரங்களை புற்பூண்டுகளை தான் சாப்பாடாக கொடுத்திருந்தார்-ஆதி 1:29,30

--------

15.ஆரம்பத்திலேயே தேவன் மனிதனை ஆடையின்றி நிர்வாணமாக வைத்திருந்தாராம்.

“"ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள். "”

  — ஆதி 2:25 

ஆதாம் பழத்தை சாப்பிட்டால் எல்லோரும் மிருகங்களை போன்று ஆடையில்லாமல் சுற்றிக்கொண்டிருப்பார்களா? 

⁶ "அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்."

⁷ "அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்." (ஆதி 3:6-7)


-------


16.ஏதேன் தோட்ட வாழ்க்கை தற்காலிகமானதான பயிற்சிக்காக கொடுக்கப்பட்டது. என்றென்றும் இருப்பதற்கு அல்ல.


காரணம்,

1.தேவனது ஆசீர்வாதமானது பூமி முழுவதும் மனிதர்கள் பெருக வேண்டும் என்பதே- ஏதேனுக்குள் தோட்ட வேலை பார்ப்பதல்ல

“"பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்."”

  — ஆதி 1:28 (TBSI)


2.ஆதாம் இந்த மரத்திலிருந்து சாப்பிடுவார் என கடவுளுக்கு தெரியாதா?

இருந்தும் அவர் அதை படைக்க காரணம் ஏதேனில் இவர்களுக்கான சோதனைக்காக.

“"தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்."”

  — ஆதி 2:9 (TBSI)


3.பாம்பு தந்திரம் மிகுந்தது என்றும் அது தடுக்கப்பட்ட பழத்தை இவர்களை சாப்பிட வைக்கும் என்று தேவனுக்கு தெரியாதா? அப்படி இருந்தும் அதை அங்கே வைக்க காரணம் சுயமாக தேர்வு செய்யும்போது தேவனது கட்டளையை மீறினால் ஏற்படும் நட்டத்தை உணர்விக்கவே இது.


தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.”

  — ஆதி 3:1 (TBSI)


(ஆனாலும் பாம்பு ஏன் இவர்களை வஞ்சிக்க (?) நினைக்க வேண்டும் என்பதற்கோ விளக்கம் பைபிளில் இல்லை. குர்ஆனில் மட்டுமே உண்டு.)


இவ்வாறு அல்லாமல் , தேவன் மனிதனை நிரந்தரமாக வாழ படைத்திருந்தால், தான் எதிர்பார்த்தது போல் படைக்க தெரியாதவர் என்றே நிரூபனமாகும்..

மேலும் தேவனது சித்தமே அவன் நிரந்தரமாக பூமியில் என்றென்றும் இருக்கக்கூடாது என்பதுவே

“"பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும்ன்று,"”

  — ஆதி 3:22 (TBSI)

------------


17.பாம்பு உண்மையாளராம். கடவுள் ஞானம் இருந்தும் பொய்யாய் போன தேவவாக்கும்.


பாம்பு சொன்னதாம்: பழத்தை சாப்பிட்டால் கண்கள் திறக்கப்படும், நன்மை தீமை அறிந்து தேவர்களை போல ஆவீர்கள்


⁴ அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை;

⁵ "நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது." (ஆதி 3:4,5)


பாம்பு சொன்னது போல கண்கள் திறக்கப்பட்டன:


“"அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்."”

  — ஆதி 3:7 (TBSI)


பாம்பு சொன்னது போல நன்மை தீமை அறிந்து தேவர்களை போல ஆனார்கள்:

“"பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று,"”

  — ஆதி 3:22 (TBSI)


இங்கே பாம்பு எதுவும் பொய் சொன்னதாக இல்லை. உண்மையை மட்டுமே சொல்லியுள்ளது.


ஆனால் தேவன் என்ன சொன்னார்?:

“ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.”

  — ஆதி 2:17 (TBSI)


அதாவது சாப்பிடும் நாளில் செத்துப்போவாய் என்றாராம்..

இது ஆன்மீக மரணமல்ல என்பதை முந்தைய பதிவில் எழுதியிருக்கிறேன்.

தேவன் கருணை காட்டி வாழ்வை நீடித்தாலும், தேவன் அறிந்துகொண்டே சொன்னதால் பொய் என்றே அது சித்தரிக்கப்படுகிறது .

(தேவனிடம் ஒரு நாள் 1000 வருடம். அது முடிய முன்பே 930 வயதில் ஆதாம் மரணித்துவிட்டாரே என்று சிலர் சிந்திக்கலாம். அது சரியாக இருந்தால் இரட்டை அர்த்தத்தில் தேவன் பேசியிருக்கிறார் என்று வரும்.)

-------

18.பெண்ணுடைய வித்தும் கிறிஸ்தவமும்.

பாம்பின் சொல்லை கேட்டு பெண் பழத்தை சாப்பிட்டு தன் கணவனையும் சாப்பிட வைத்ததால் , தேவன் அதை சபித்தார். அதன் தொடர்ச்சியாக:

“"உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்."”

  — ஆதி 3:15 (TBSI)

பாம்புக்கும் பெண்ணுக்கும் பகை இருக்குமாம். அதேபோல் பாம்பின் வித்துக்கும் பெண்ணின் வித்துக்கும் பகை இருக்குமாம்.

ஏதோ ஏதேனில் இருந்தது மரியாள் என்பது போல கிறிஸ்தவர்கள் கதை கட்டி, பெண்ணின் வித்து இயேசு. காரணம் அவர் மட்டுமே ஆண் துணையின்றி பிறந்தவர் என்கிறார்கள்.


இதற்கு நம் பதிலாக,


1.இங்கே மரியாளின் வித்து என்று சொல்லப்படவில்லை. மாறாக ஏதேனில் இருந்த பெண் ஏவாள். அவளுடைய வித்து என்பது ஏவாளுடைய பிள்ளைகளையே குறிக்கும்.


2.இங்கே வித்து என்பதை குறிக்க "ஸெரஃ" (זרע) என்பதே உள்ளது.பைபிள் பிரகாரம் இது பெண்ணுக்கும் ஆணுக்கும் பொதுவாக அவரவர் சந்ததியை குறிக்க பயன்படுவதாகும்.

உதாரணமாக இதே ஆதி 16:10 இல் இஸ்மவேலை குறித்து ஆகாரின் (ஸெரஃ-זרע) ஆக சித்தரிக்கப்படுகிறது.

“"பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: உன் சந்ததியை (ஸர்ஏக்- זרעך) மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாயிருக்கும் என்றார்."”

  — ஆதி 16:10 (TBSI)


மேலும் இஸ்ரவேலரை ரெபெக்காவின் ஸெரஃ ஆக ஆதி 24:60 சித்தரிக்கிறது.

“"ரெபெக்காளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியார் (ஸர்ஏக்- זרעך)  தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள்."”

  — ஆதி 24:60 (TBSI)


ஆகவே இங்கே ஆதி 3:15 ஏவாளின் வித்தையை சொல்கிறது. ஏவாள் கன்னி கழியாமல் பிள்ளை பெறுவார் என்றோ அல்லது ஏவாளின் பிள்ளைகளில் ஒரு பெண் கன்னி கழியாமல் பிள்ளை பெறுவார் என்றோ சொல்லவில்லை.



3.ஏவாளுக்கு ஆபேலுக்கு பதிலாக வேறொரு ஸெரஃ கிடைத்ததாக அடுத்த அதிகாரமே சொல்கிறது

“"பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்று: காயீன் கொலை செய்த ஆபேலுக்குப் பதிலாக, தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் (זרע אחר) கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குச் சேத் என்று பேரிட்டாள்."”

  — ஆதி 4:25 (TBSI)

சேத்தை தனக்கு ஆபேலுக்கு பதிலாக தேவன் கொடுத்த வித்து என்று ஏவாளே சொல்கிறார்.


4.ஆதி 3:15 ஒருமையில் அவர் என்று சொல்வதால் ஒரே நபராக இருக்க வேண்டுமா?

நிச்சயமாக இல்லை. ஸெரஃ என்று வரும்போது அது ஒருமையிலேயே எபிரேயத்தில் பாவிக்கப்படுகிறது. அதாவது "அவன்/அவர்" என்று ஒருமை ஆண்பாலிலேயே எபிரேயத்தில் வரும்.

உதாரணமாக ஆதி 24:60

“"ரெபெக்காளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள்."”

  — ஆதி 24:60 (TBSI)

இங்கே எபிரேயத்தில்

வெயீரஷ் ( וירשׁ- மேலும் அவன் சுதந்தரித்துக்கொள்வான்)) ,ஸர்எக் (זרעך- உன் வித்து) , எத்ஷஅர் (את שׁער- வாசல்களை) , சொனெஆவ் (שׁנאו- அவனை பகைப்பவர்களின்)

இதன் நேரடி அர்த்தம்,

"உன் வித்து தன்னை பகைப்போரின் வாசல்களை சுதந்தரித்துக்கொள்வான்."

இதுபோன்று தான் ஆதி 3:15உம் ஒருமையில் பாவிக்கப்பட்டுள்ளது.. இதற்கும் இயேசுவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை!


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்