ஆதியாகமம்-தொடர் 2

 ஆதியாகமம்-தொடர் 2


தொடர்1 இன் தொடர்ச்சி


உள்ளடக்கம்

5.ஆதியாகமம் 1:2 ஆவியானவர் என்ற நபரை குறிக்கிறதா?

ஆவியின் வகைகள்

6.தேவனுடை வார்த்தை என்பது நபரா?


5.ஆதியாகமம் 1:2 ஆவியானவர் என்ற நபரை குறிக்கிறதா?

2.“பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.”

  — 1:2 



இது பூமி படைக்கப்பட்ட போது இருந்த நிலையை சொல்கிறது. 

திரித்துவத்தின் மூன்றாம் நபராக பரிசுத்த ஆவி என்ப்படுபவர் கருதப்படுகிறார். அவர் ஆரம்பம் முதலே இருக்கிறார் என்பதற்கு இதை ஆதாரமாக பாமர கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர்.


உண்மையில் "தேவ ஆவியானவர்" என்று இருக்கும் வார்த்தை குழப்பமானதாக இருக்கலாம். ஆனால் இதன் அர்த்தம் "தேவனுடைய ஆவி" என்பதாகும். அதுவும் இங்கே பெண்பாலில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

அதாவது (מְרַחֶ֖פֶת-மெரஹெபேத்")- அசைவாடிக்கொண்டிருந்தாள் என்று பெண்பால் ஒருமையிலேயே உள்ளது.

ஆவியானவர் என்ன ஒரு பெண்ணா?

உண்மையில் இது தேவனுடைய ஆவி எனும் நபரை பற்றி கூறும் வசனமே அல்ல.

மாறாக தண்ணீருக்கு மேல் அசைந்து வீசிக்கொண்டிருந்த காற்றை பற்றி தான் கூறுகிறது. அது தேவனுக்கே உரிய காற்றாக இருப்பதால் தேவனுடைய காற்று (רוּח אלהים- ருஆஹ் எலோஹீம்) என்று அழைக்கப்படுகிறது.


இதே போல கீழ் காற்றையும் கர்த்தருடைய காற்று (கர்த்தருடைய ஆவி - רוּח יהוה - ருஆஹ் யாஹ்வே) என பைபிள் கூறுகிறது .


".... கர்த்தருடைய காற்றாகிய (ருஆஹ் யாஹ்வே- கர்த்தரின் ஆவி) கீழ் காற்று வனாந்தரத்தில் எழும்பி வரும்;.." -ஓசியா 13:15


ஆதி 1:2 வசனம் தேவனது காற்று தண்ணீரின் மேல் அசைவாடியது என்பதையே குறிக்கிறது.


பரிசுத்த ஆவியை குறிக்க எந்த முகாந்திரமும் இல்லை. தண்ணீரின் மேல் அசைவாடி விளையாடுபவரா தேவன்? அதுவும் பெண்பாலிலேயே உள்ளது. அவர் அசைந்தாடும் சிறுமியா?


கீழ்காற்று எப்படி கர்த்தருடைய ருஆவாக இருக்கிறதோ அதுபோல ஒரு காற்றுதான் தண்ணீரின் மேல் அசைந்தாடியது.



பைபிளிலுள்ள ருஆக்களின் (ஆவிகளின்) வகைகள் 



1.காற்று. - காற்றை ருஆக் ( רוּח) என்றே எபிரேயத்தில் சொல்லப்படும்.(ஆதி 8:1)

தேவனுடைய காற்று 

( רוּח אלהים)

-ருஆஹ் எலோஹீம்- ஆதி 1:2 இது பெண்பால்


கர்த்தருடைய காற்று

 (רוּח יהוה)

ருஆஹ் யாஹ்வே- ஓசியா 13:15 



2.உயிர் எனும் மூச்சு காற்று.

(רוּח אלוֹה)

ருஆ எலோஆ

யோபு 27:3 (தமிழ் பைபிளில் 27:2)


தமிழில் 

"தேவன் தந்த ஆவி என் நாசியில் இருக்குமட்டும்" என்று போடப்பட்டிருக்கிறது.


ஆனால் மூல மொழியில் "தேவனது ஆவி என் நாசியில் இருக்குமட்டும்" என்றே வரும்.


3.தேவனது பிரசன்னம்


רוּחך

உம்முடைய ஆவி (ரூஹெகா) -சங்கீதம் 139:7


கடவுள் தன் ஞானத்தால் வியாபித்திருக்கிறார் என்பதை கூறும் வசனங்களே சங்கீதம் 139:6-8


அதேபோல் ஆகாய் 2:5 இலும் தேவனது ஆவி மக்கள் மத்தியில் நிலைகொண்டிருக்கும் என்றும் பயப்பட வேண்டாம் என்றும் கூறுகிறது


அதிலே

רוּחִי

ரூஹீ -என்னுடைய ஆவி என்று வருகிறது.


அது பெண்பாலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆவியானவர் என்ன பெண்ணா?


வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பதென்றால்,


"என்னுடைய ஆவியானவளும் உங்கள் நடுவில் நிலைத்திருப்பாள் " என்று தான் வரும்.



உண்மையில் இது தேவனது பிரசன்னத்தையே குறிக்கிறது. தேவன் தன் ஞானத்தால் அவர்களுடன் இருக்கிறார். அவரது இருப்பிடமோ வானத்தின் மேலே ஆகும்.



4.வல்லமை/ஆற்றல்

யோபு 33:4

“தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்; சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது.”

  இங்கே ஆவியானவர் என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். 

ஆனால் எபிரேயத்தில் பெண்பாலில் தான் இது உள்ளது

רוּח אל עשׂתני

ருஆஹ் எல் ஆசாதெனீ (பெண்பால் ஒருமை வினைச்சொல்)

இதன் நேரடி அர்த்தம்

"தேவனுடைய ஆவியானவள் என்னை உண்டாக்கினாள்" என்று தான் வரும். 


அதாவது இங்கே ஆவி என்பது நபராக இருந்தால், நிச்சயமாக பெண்ணாக தான் இருக்க வேண்டும். அப்படி பார்த்தால் திரித்துவத்தில் பெண்தெய்வமும் வந்துவிடும். மாறாக இது தேவனது சக்தி ஆற்றல் என்பவற்றை குறிக்கிறது. தேவனது வல்லமை தான் உண்டாக்கியது. அது நபர் அல்ல. தேவனுடைய வல்லமை உண்டாக்கியது என்பது தேவன் உண்டாக்கியதை குறிக்கும். நபரை குறிக்காது.

மேலும் யோபு 26:13 இலும் அவருடைய ஆவி என்பது வல்லமையை குறிக்கும். நபரை அல்ல. 


5.தேவனுடைய ஒரு ஈவு/பரிசு/வரம், மற்றும் இறைத்தூண்டல் 


“"நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்; — சகரியா 12:10 

ஆவிகள் ஊற்றப்படும் என்று சொல்லப்படுகிறது. இதேபோல் பெந்தகோஸ்த்து ஆவியை பற்றிய தீர்க்கதரிசனமாக அப்போஸ்தலர் நடபடிகள் மேற்கோள்காட்டும் யோவேல் 2:28-29 இலும் கூறப்பட்டுள்ளது. நபரை எப்படி ஊற்றுவது?

இதேபோல் தாவீதின் மேல் ஆவி வந்திருக்கிறது.அங்கேயும் பெண்பாலில் தான் உள்ளது. ஆவியானவர் என மொழிபெயர்த்துள்ளனர். 1 சாமுவேல் 16:13-14

தீர்க்கதரிசிகள் மத்தியில் சவுல் போனபோது அவன் மீதும் ஆவி (பெண்பால்) இறங்கியது. அதனால் அவனும் தீர்க்கதரிசனம் சொன்னானாம்.-1 சாமுவேல் 10:10

இதேபோல் நியாயாதிபதிகள் 3:10, 6:34, 9:23, 11:29, 13:25,14:6,19, 15:14, எண் 11:25-27,24:2 இலும் காணப்படுகின்றன. இவை பெண்பாலில் தான் உள்ளன. தேவனுடைய தூண்டல், மற்றும் ஒருவித வரத்தையே (வரம்) இது குறிக்கிறது.

இதனால் தான் தாவீது ராஜா, "உமது பரிசுத்த ஆவியை என்னிடமிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்"-சங்கீதம் 51:11 என வேண்டுகிறார். 


இது கடவுளல்ல. கடவுளால் கொடுக்கப்படுகிறது.

இந்த வரத்தினால் தூண்டல்களும், சக்தியும்,உள்ளுணர்வும் கொடுக்கப்படுகிறது. இதை தான் பரிசுத்த ஆவியினால் அபிசேகம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.


6.தேவதூதர்

தேவதூதர்களை ஆவிகள் என்று பைபிள் சொல்கிறது.

"அவர் தம்முடைய தூதர்களை காற்றுகளாகவும் (ரூஹோத்-ஆவிகள்), தம்முடைய ஊழியக்காரரை அக்கினி ஜுவாலைகளாகவும் செய்கிறார்- சங்கீதம் 104:4


இதேபோல் ஆகாபை வஞ்சிப்பதற்கு ஒரு ஆவி கர்த்தர் முன் வந்து நின்றதாக சொல்லபடுகிறது. அங்கே அது ஆண்பாலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அது பேசக்கூடியதாகவும் இருக்கிறது. 1 இராஜாக்கள் 22:21-23 ,2 நாளாகமம் 18:20-22.


இதன்மூலம் தீர்க்கதரிசிகள் மூலமாக தேவதூதர்கள் பேசுவார்கள் என தெரிகிறது.

இதேபோல் தாவீது ராஜா தன்னை குறித்து கூறும்போது, 

கர்த்தருடைய ஆவியானவர் (ருஆக் யாஹ்வே- கர்த்தரின் ஆவி) என்னைக் கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது.”

  — 2 சாமுவேல் 23:2 

இவர்களுக்கு எந்த தெய்வீகமும் கிடையாது.

7.தேவனுடைய பரிசுத்த உள்ளம் (மனது)

“"அவர்களோ கலகம்பண்ணி, அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள்; அதினால் அவர் அவர்களுக்குச் சத்துருவாய் மாறி, அவரே அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணினார்."”

  — ஏசாயா          63:10 

இதேபோல் எஸ்போன் ராஜாவின் ஆவியை (ருஆஹ் என்று தான் எபிரேயத்தில் உள்ளது) கடினப்படுத்தியதாக உபாகமம் 2:30 இல் கூறப்படுகிறது.  இங்கே ஆவி என்பது மனதை குறிக்கிறது.

இதேபோல் ஏசாவின் மனைவிகள் ஈசாக்கிற்கும் ரெபேக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள் -ஆதி 26:35 இங்கும் ருஆஹ் -ஆவி என்பது மனதையே குறிக்கிறது.. இதுபோல் ஆதி 41:8, யாத்திராகமம் 6:9, 

இதன்படி ருஆஹ் கோதேஷ் (பரிசுத்த ஆவி) என்று ஏசாயா 63:10 கூறுவது தேவனது பரிசுத்த மனதையே குறிக்கிறது என புரிகிறது.


ஆனால் அதே ஏசாயா 63:11,14 ஆகியவற்றில் உள்ளதோ ஏற்கனவே கூறிய தேவனது ஈவு பற்றியதாகும். அதிலுள்ள பரிசுத்த ஆவியை தேவன் அவர்கள்மேல் கட்டளையிட்டார். 

63:14 இலோ அவரது ஆவி அவர்களை இளைப்பாற பண்ணியதாக கூறப்படுகிறது. அதுவும் பெண்பாலிலேயே உள்ளது. ஆவியானவர் ஒன்றும் பெண் அல்லவே.  தேவன் கொடுத்த ஈவாகிய பரிசுத்த ஆவி அவர்களை இளைப்பாறப்பண்ணியது.


முதலில் இவை நபரே கிடையாது.


தேவதூதர்களும் வரும் ஆவிகளே நபர்களாக இருப்பார்கள். அவர்களை ஆண்பாலில் பாவிக்கப்பட்டிருக்கும். அவர்களுக்கு தெய்வீகம் கிடையாது. அவர்களில் உள்ள பரிசுத்த ஆவி என்பது கடவுளோ தெய்வீகம் பொருந்தியவரோ கிடையாது. அவருக்கு தெய்வீகம் உண்டு என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.

--------------


6.தேவனுடைய வார்த்தை (ஆதி 1:3) ஒரு நபரா? 


3.தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார்.வெளிச்சம் உண்டாயிற்று. ஆதியாகமம் 1:3

இதன் மூலம் வார்த்தையானவர் என்பவர் இருக்கிறார் என்கிறார்கள் கிறிஸ்தவர்கள். அவரே திரித்துவத்தின் ஒரு நபரான இயேசு என்கிறார்கள்.


பதில்: இது பார்த்தவுடனே மடத்தனமான வாதம் என்று புரிந்துவிடும். 

தேவன் "யஹீ-உண்டாகு" என்று பேசுகிறார். அதனால் படைப்புகள் உண்டாகின்றன.

தேவன் பேசுவது எப்படி ஒரு நபராக ஆகும்? 

தேவனது பேச்சு என்பது தேவனோ அல்லது இன்னொரு நபரோ அல்ல. மாறாக தேவனது பண்புகளில் ஒன்றாகும். தேவனது பார்வை, கேள்விப்புலம் எப்படி பண்போ அதுபோன்றே பேச்சு என்பதும் ஒரு பண்பே. அது நபர் கிடையாது.

இதேபோல் சங்கீதம் 33:6, 148:5 வசனங்களை விளக்கும் விதமாக ஆதி 1:3 முதல் வரும் வசனங்கள் அமைகின்றன.

இதை தவறாக புரிந்துகொண்ட யோவான், வார்த்தையை ஒரு நபராக கருதி, அவரே இயேசுவாக வந்ததாக யோவான் 1:1-14 இல் எழுதுகிறார்


தேவனது வார்த்தை மூலம் இயேசு தன் தாயின் வயிற்றில் கருவுற்றதால் இயேசு கடவுளுடைய ஒரு வார்த்தையாக கருதப்படுகிறார். 

தேவனது ஒரு வார்த்தை மூலம்  எப்படி ஒளி  உண்டானதோ, (அதை பகல் என்று தேவன் பெயரிட்டார்.) அதுபோன்றே மரியாளிடம் "ஆகு" என்ற கட்டளைப்படி கருவுற்றார். அதனால் வார்த்தை மனிதனாக  மாறியதாக இவர்கள் கருதிவிட்டனர். ஆனால் உண்மையில் வார்த்தை மூலமே அவர் மனிதனாக மாறினார்.. எப்படி ஒளி (பகல்) கடவுள் கிடையாதோ, அதே போன்று இயேசு கடவுளல்ல. ஒளி (பகல்) எப்படி ஒரு படைப்போ, அது போன்று இயேசுவும் ஒரு படைப்பாவார்.

ஏனெனின் ஒரு பெண்ணின் இரத்தத்தை உறிஞ்சு கர்ப்பத்தில் வளரும் ஒரு பூச்சு மனித படைப்பே அன்றி படைத்தவராக மாட்டார்.

இந்த வார்த்தை எனும் விசயத்திலேயே கிறிஸ்தவர்கள் மிகவும் குழம்பியே இருக்கிறார்கள். 

தேவனது பேச்சு, கட்டளை, வார்த்தை என்பது ஒரு நபரே கிடையாது. இவர்கள் சிந்திக்க வேண்டும்!

----------

தொடர்3


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்