அப்போஸ்தலர் நடபடிகள் செய்த திரிபுகள்

1.யூதாசை பற்றிய தீர்க்கதரிசனம்


¹⁶ "சகோதரரே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவி தாவீதின் வாக்கினால் முன் சொன்ன வேதவாக்கியம் நிறைவேறவேண்டியதாயிருந்தது."


¹⁷ "அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்திலே பங்குபெற்றவனாயிருந்தான்."


¹⁸ "அநீதத்தின் கூலியினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறுவெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று."


²⁰ "சங்கீத புஸ்தகத்திலே: அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது, ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக என்றும்; அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன் என்றும் எழுதியிருக்கிறது." (அப்போஸ்தலர் 1:16-20)


முதலிலியே யூதாசு அநீதத்தின் கூலியால் ஒரு நிலத்தை சம்பாதித்தார் என்று 1:18 கூறுகிறது.



ஆனால் உண்மையில் மத்தேயுவின் கூற்றுப்படி, யூதாசு நிலத்தை சம்பாதிக்கவில்லை! அவன் முப்பது காசை ஆலயத்தினுள் எறிந்துவிட, அந்நியனை அடக்கம் செய்வதற்கு யூத ஆசாரியர்கள் தான் நிலத்தை சம்பாதித்தனர்.(மத்தேயு 27:5-7)




இனி தீர்க்கதரிசனம் பற்றி பார்ப்போம்:



"அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது" என்று யூதாசை குறித்து கூறப்பட்டுள்ளதாம்!



ஆனால் உண்மையில் தாவீது ராஜா தன் எதிரிகளையே அவ்வாறு சபித்தார். ஒரே ஒரு நபரை சபிக்கவில்லை! மாறாக எதிரிகள் கூட்டத்தை சபிக்கிறார். அதன் ஒரு வரியை தூக்கியெடுத்து , அது யூதாசை குறித்து தாவீது சொன்னதாக அடித்து விடுகிறார்!



¹⁹ தேவரீர் என் நிந்தையையும் என் வெட்கத்தையும் என் அவமானத்தையும் அறிந்திருக்கிறீர்; என் சத்துருக்கள் எல்லாரும் உமக்கு முன்பாக இருக்கிறார்கள்.


²³ அவர்களுடைய கண்கள் காணாதபடி அந்தகாரப்படக்கடவது; அவர்கள் இடுப்புகளை எப்போதும் தள்ளாடப்பண்ணும்.


²⁴ உம்முடைய உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றும்; உம்முடைய கோபாக்கினி அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக.


²⁵ அவர்கள் வாசஸ்தலம் பாழாகக்கடவது; அவர்களுடைய கூடாரங்களில் குடியில்லாமற்போவதாக.(சங்கீதம் 69:19,23-25)




இதேபோல் "அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன்" என்றும் யூதாசை குறித்து தாவீது சொன்னதாக அடித்து விடுகிறார்.



அதுகூட தாவீதை கொல்ல நினைத்த பகைவனையே தாவீது சபிக்கிறார். அதை சம்பந்தமே இல்லாமல், யூதாசை குறிப்பதாக பொய்யாக புழுகியுள்ளார்கள்.



² "துன்மார்க்கனுடைய வாயும், கபட்டுவாயும், எனக்கு விரோதமாய்த் திறந்திருக்கிறது; கள்ளநாவினால் என்னோடே பேசுகிறார்கள்."


³ "பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு, முகாந்தரமில்லாமல் என்னோடே போர்செய்கிறார்கள்."


⁸ அவன் நாட்கள் கொஞ்சமாகக்கடவது; அவன் உத்தியோகத்தை வேறொருவன் பெறக்கடவன்.


¹⁶ "அவன் தயைசெய்ய நினையாமல், சிறுமையும் எளிமையுமானவனைத் துன்பப்படுத்தி, மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே."


²⁰ "இதுதான் என்னை விரோதிக்கிறவர்களுக்கும், என் ஆத்துமாவுக்கு விரோதமாய்த் தீங்கு பேசுகிறவர்களுக்கும் கர்த்தரால் வரும் பலன்."


²² "நான் சிறுமையும் எளிமையுமானவன், என் இருதயம் எனக்குள் குத்துண்டிருக்கிறது."(சங்கீதம் 109:2,3,8,16,20,22)



தாவீது தன் எதிரிகளை குறித்து சபித்து ஜெபித்த ஜெபத்தை, யூதாசை குறித்து சொன்னதாக எழுதுவது இலக்கிய மோசடி இல்லையா?? தம் மதத்தை பரப்புவதற்கு இப்படி பொய் பேசவேண்டுமா?

-------------------------------------------------



2.யோவேலின் தீர்க்கதரிசனம் பெந்தகோஸ்து 


¹⁶ தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது.


¹⁷ "கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்;"


¹⁸ "என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்."


¹⁹ "அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழ பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன்."


²⁰ "கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்."


²¹ அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார். (அப்போஸ்தலர் 2:16-21)



இது யோவேல் 2:28-32 இல் உள்ளது.


இங்கு கூட, மாம்சமான அனைவரிலும் தன் ஆவியை ஊற்றுவதாகவும், குமாரரும் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள் என்று கூறப்படுகிறது.



ஆனால் இங்கு ஆவியானது அனைவர் மீதும் இறங்கவில்லை! சீடர்கள் மீது இறங்கியதாகவே கூறப்படுகிறது. 


மேலும் அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லவில்லை!! மாறாக ஏனைய யூதர்களின் ஜென்மபாசைகளில் பேசினார்கள் அவ்வளவே. (அப்போஸ்தலர் 2:6-11)

ஆகவே இதுவும் போலியாக திரித்தே எழுதியுள்ளார்!

--------------------------------------------



3.இயேசு அழிவை காண்பதில்லை என்று தாவீது தீர்க்கதரிசனம் சொன்னானாம்!


 …  

²⁵ அவரைக்குறித்துத் தாவீது: கர்த்தரை ஏப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்;


²⁶ "அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாவு களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்;"


²⁷ "என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்;"


²⁸ ஜீவமார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சந்நிதானத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான்.


²⁹ "சகோதரரே, கோத்திரத்தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களுடனே தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது."


³⁰ "அவன் தீர்க்கதரிசியாயிருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க மாம்சத்தின்படி உன் சந்ததியிலே கிறிஸ்துவை ஏழும்பப்பண்ணுவேன் என்று தேவன் தனக்குச் சத்தியம்பண்ணினதை அறிந்தபடியால்,"


³¹ "அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்." (அப்போஸ்தலர் 2:25-31)




தாவீது தன்னை குறித்து பாடியதை மீண்டும், இயேசுவை குறித்து சொன்னதாக பொய்யாக இட்டுக்கட்டி எழுதுகிறார்.



¹ "தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன்."


 …  

⁸ கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.


 …  

¹⁰ என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்.

¹¹ "ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு. " (சங்கீதம் 16:1,8,10-11)



இங்கே தெளிவாக "என் ஆத்துமாவை பாதாளத்தில் விடீர்" என்று இருப்பதை அப்படியே "இயேசுவின் ஆத்துமாவை பாதாளத்தில் விடீர் " என்று பொய்யாக புழுகுகிறார்.


இது இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றி சொன்னதாக வேறு கதை விடுகிறார்.



இவர்களது நம்பிக்கை படி, இயேசு இழிவான மரணத்தை பெற்றதாக நம்புகிறார்கள். பிறகு எப்படி அழிவை காணவிடமாட்டீர் என்பது இயேசுவை குறிக்கும்??

அழிவை கண்டுவிட்டாரே..


அடுத்து உயிர்த்தெழுதல் என்பது அனைவருக்கும் உள்ள ஒன்று தான்.

மோசே இயேசுவை வந்து சந்தித்ததாக இதே லூக்கா எழுதி வைத்திருக்கிறார்.


ஆபிரகாமின் மடியில் லாசரு இருப்பதாக வேறு கதையை எழுதியும் வைத்திருக்கிறார்.


இப்படி எல்லாருமே உயிர்த்தெழுந்து இருக்கும்போது,, இவர்களது நம்பிக்கைப் படி இழி மரணத்தை சந்தித்த இயேசு அழிவை காணவில்லையாம். பாதாளத்தில் விடப்படவில்லையாம். எவ்வளவு வேடிக்கை??



தாவீது தன்னை குறித்து பாடியதை இயேசுவை குறித்து சொன்னதாக பொய்யாக பேசுவதால் பயன் இல்லை!!


தாவீதை பாதாளத்தில் விடவில்லை என இதே சங்கீதம் 30:3 கூறுகிறது.


இழிவான மரணத்திலிருந்து இரட்சிக்கப்படுவதையே இது குறிக்கும்.. மற்றபடி மரணித்து அடக்கம் செய்யப்பட்டார் என்பதை அல்ல!


ஆனால் இயேசுவுக்கோ அப்படி இல்லை!!

----------------------------------------------




4.இயேசு பரலோகத்துக்கு போவார் என தாவீது சொன்னதாக மீண்டும் பொய்யாக சொல்கிறார்.



³⁴ "தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே. நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும்,"


³⁵ நீர் என் வலதுபாரிசத்தில் உட்காருமென்று கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று அவனே சொல்லியிருக்கிறான்.


³⁶ "ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்." (அப்போஸ்தலர் 2:34-36)



தாவீதுக்கு வலது பாரிசசத்தில் தேவன் இருக்கிறார் என்று சங்கீதம் 16:8 சொல்கிறதே.


அப்படி என்றால் தாவீது பரலோகத்தில் தேவனுடைய இடது பக்கத்தில் நின்றுகொண்டிருக்கிறார் என்று அர்த்தமா? அல்லது தேவன் பூமியில் தாவீதுக்கு வலது பக்கத்தில் நின்றுகொண்டிருந்தார் என்று அர்த்தமா?


தாவீதுடைய சங்கீதக்காரன் தாவீதைக்குறித்து சங்கீதம் 110:1-2 இல் பாடுவதை, தாவீது இயேசுவை குறித்து சொல்லியிருப்பதாக புழுகுகிறார்




-------------------------------------


5.மோசேயை போன்ற தீர்க்கதரிசி 




²² மோசே பிதாக்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.

²³ "அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனெவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான் என்றான்."(அப்போஸ்தலர் 3:22-23)


இது உபாகமம் 18:15-19ஐ திரித்து கூறியுள்ளார்.



“உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.”

  — உபாகமம் 18:15 


அந்த தீர்க்கதரிசி யின் சொல்கேளாதவன் நிர்மூலமாக்கப்படுவான் என்று அந்த புத்தகத்திலேயே கிடையாது..

மாறாக அவனை நான் விசாரிப்பேன் என்றே உள்ளது.

“என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.”

  — உபாகமம் 18:19 


பழைய ஏற்பாட்டு வசனங்களுக்கு பட்டி டிங்கரிங் பார்த்து தான் இயேசுவுக்கு அதை பொருத்துவதற்கு அப்போதே முற்பட்டுள்ளனர்.


சரி.. இது இயேசுவுக்கு பொருந்துமா?


இயேசு மோசேயை போன்ற தீர்க்கதரிசியாக இருந்தாரா?



1.மோசே புது சட்டத்தை (தோரா) கொண்டுவந்தார். இயேசு அதற்கு கீழ்படிந்தே வாழ்ந்தார். அப்படியாயின் இயேசுவை அதிகபட்சமாக ஆரோனை போன்ற தீர்க்கதரிசி என்று தான் சொல்லலாம்.. மோசேயை போன்றவராக மாட்டார்.


2.மோசேயின் பிறப்பு முதல் மரணம் வரை எதிலுமே இயேசு அவரை போன்றவராக இருக்கவில்லை! 


3.மோசே தன் இனத்தாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், அவர்களுக்கு தலைவராக இருந்தார். அவரை ஏற்றுக்கொள்ளாதோர் அப்போதே அழிக்கப்பட்டனர். ஆனால் இயேசுவையோ அப்படி முழு இனத்தாரும் ஏற்றுக்கொள்ளவில்லை! 


சோ எந்த விதத்திலும் மோசேக்கு சமானமாக இயேசு இருக்கவில்லை! அவரை பின்தொடர்ந்தவராகவே இருந்தார்.


மேலும் யோவான் சுவிசேசத்தின்படி, அக்கால யூதர்கள் கூட "எலியா,மெசியா, தீர்க்கதரிசி ஆகிய மூவரும் வெவ்வேறானவர்கள் " என்றே நம்பியிருந்தனர். யோவான் கூட அதற்கு பதிலளிக்கும் போது அதை மறுத்து பேசவில்லை (யோவான் 1:19-22)

----------



6.கர்த்தருக்கு விரோதமாகவும், அவரது கிறிஸ்வுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் கூட்டம் கூடினார்கள்.




²⁶ "கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே."


²⁷ "அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி,"


²⁸ "ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள்."(அப்போஸ்தலர் 4:26-28)


இது சங்கீதம் 2:1-2 இல் இடம்பெற்றுள்ளது.


அதில் குறிப்பாக 2:7ஐ பார்க்கும்போது, 


“"தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி, நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;"”

  — சங்கீதம் 2:7 (TBSI)



கர்த்தர் என்னை நோக்கி சொன்னார் என்று கூறி, என்னை அவரது குமாரன் என்று சொன்னதாக சொல்கிறார் தாவீது. அதாவது தாவீதை தான் தன் குமாரன் என தேவன் சொன்னதாக இங்கு கூறப்படுகிறது.






---------------------



7.ஆப்ரகாமின் வரலாற்றை மாற்றி பேசுதல்.


² "அதற்கு அவன்: சகோதரரே, பிதாக்களே, கேளுங்கள். நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்னமே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி:"


³ "நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா என்றார்."

⁴ "அப்பொழுது அவன் கல்தேயர் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, காரானூரிலே வாசம்பண்ணினான். அவனுடைய தகப்பன் மரித்தபின்பு, அவ்விடத்தை விட்டு நீங்கள் இப்பொழுது குடியிருக்கிற இத்தேசத்திற்கு அவனை அழைத்துக்கொண்டுவந்து குடியிருக்கும்படி செய்தார்." (அப்போஸ்தலர் 7:2-4)


அதாவது ஆப்ரகாம் காரான் என்ற ஊரிலிருந்து வெளியேறியது தனது தந்தை மரணித்த பின்னர் என்கிறார் ஸ்தேவான்.. அதுவும் பரிசுத்த ஆவியால் நிறைந்து சொன்னாராம்.


ஆனால் பழைய ஏற்பாட்டை போய் பார்த்தால், ஆப்ரகாம் தன் தந்தை மரணிக்க முன்பே காரான் ஊரிலிருந்து வெளியேறிவிட்டார்.



²⁶ "தேராகு எழுபது வயதானபோது, ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்."


 …  

³¹ "தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், ஆரானுடைய குமாரனும், தன் பேரனுமாயிருந்த லோத்தையும், தன் குமாரன் ஆபிராமுடைய மனைவியாகிய தன் மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடனே ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு, கானான் தேசத்துக்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான் மட்டும் வந்தபோது, அங்கே இருந்துவிட்டார்கள்."

³² தேராகுடைய ஆயுசு நாட்கள் இருநூற்றைந்து வருஷம்; தேராகு ஆரானிலே மரித்தான். (ஆதியாகமம் 11:26,31-32)



ஆப்ரகாமின் தகப்பன் 70 வயதில் ஆப்ரகாம் பிறந்துவிட்டார்.. (ஆதி 11:26)..

ஒரு பேச்சுக்கு இதை 80 என்று வைத்தாவது ஸ்தேவான் சொன்னதை காப்பாற்ற முடியுமா என பார்ப்போம்.


அவர்கள் ஆரான் (காரான்) எனும் ஊருக்கு வந்து அங்கு தங்கினார்கள். (ஆதி 11:31)


தேராகு 205 வயதில் இறந்தார்.(ஆதி 11:32)


அதாவது ஆப்ரகாமின் 145ஆவது வயதில் இறந்திருக்க வேண்டும். அதன் பின்னர் தான் ஆரானிலிருந்து வெளியேறி இருக்க வேண்டும் (அப்போஸ்தலர் 7:4)


 என்று ஸ்தேவான் ஆவி தூண்டி பேசினாராம்.


ஆனால் பழைய ஏற்பாடு ஆப்ரகாம் 75 வயதில் ஆரானிலிருந்து வெளியேறி போய்விட்டார் என்கிறது.



“"கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப்போனான்; லோத்தும் அவனோடேகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான்."”

  — ஆதியாகமம் 12:4 


அதாவது தன் தந்தை மரணிப்பதற்கு 70 வருடங்கள் முன்னரே ஆப்ரகாம் ஆரானிலிருந்து வெளியேறிவிட்டார்.


இது தான் இவர்களது பரிசுத்த ஆவி... பழைய ஏற்பாட்டில் இருப்பதை கூட சரியாக வாசித்து சொல்லாமல் தப்புதப்பாகவே கூறும்.

--------------------





-----------------


8.யாக்கோபின் அடக்கத்தளம் பற்றி மாற்றி பேசுதல்.


¹⁵ "அந்தப்படி யாக்கோபு எகிப்துக்குப் போனான். அவனும் நம்முடைய பிதாக்களும் மரித்து,"

¹⁶ "அங்கேயிருந்து சீகேமுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆபிரகாம் சீகேமின் தகப்பனாகிய ஏமோருடைய சந்ததியாரிடத்தில் ரொக்கக்கிரயத்துக்கு வாங்கியிருந்த கல்லறையில் வைக்கப்பட்டார்கள்."

¹⁷ "ஆபிரகாமுக்கு தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறுங்காலம் சமீபித்தபோது," (அப்போஸ்தலர் 7:15-17)


அதாவது யாக்கோபும் கோத்திரபிதாக்களும் சீகேமில் அடக்கம் பண்ணப்பட்டார் என்று இதே ஸ்தேவான் சொல்கிறார்.


உண்மையில் சீகேமின் தகப்பனிடம் யாக்கோபு தான் நிலத்தை வாங்கினார். ஆப்ரகாம் அல்ல. (ஆதி 33:18) ,

 அங்கேயோசேப்பின் எலும்புகளை தான் 470+ வருடங்கள் கழித்து அடக்கம் செய்தார்கள். யாக்கோபை அல்ல!(யோசுவா 24:32) 


ஆனால் ஆப்ரகாம் ஏத்தியனான எப்ரோனிடம் தான் கல்லறைக்காக குகையை வாங்கினார். அங்கு தான் யாக்கோபு அடக்கப்பட்டார்.


“"அவனைக் கானான் தேசத்துக்குக் கொண்டுபோய், ஆபிரகாம் மம்ரேக்கு எதிரே இருக்கிற மக்பேலா என்னும் நிலத்திலே தனக்குச் சொந்தக் கல்லறை பூமியாக ஏத்தியனாகிய எப்பெரோனிடத்தில் வாங்கின நிலத்திலுள்ள குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்."”

  — ஆதியாகமம் 50:13 


அதாவது ஆவி தூண்டி பேசிய ஸ்தேவான் பழைய ஏற்பாட்டை சரியாக படிக்கவில்லை.. அவரிடம் இருந்த ஆவிக்கு கூட இது தெரியவில்லை!


-------------


9.எகிப்துக்குப்போன இஸ்ரேலிய மக்களின் எண்ணிக்கையை மாற்றி பேசுதல்.




“"பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபும் தன்னுடைய இனத்தார் யாவருமாகிய, எழுபத்தைந்துபேரை அழைக்க அனுப்பினான்."”

  — அப்போஸ்தலர் 7:14 (TBSI)


ஆனால் பழைய ஏற்பாட்டில் 70 பேர் என்றே உள்ளது.(ஆதி 46:27, யாத்திராகமம் 1:5)

இதுவும் ஆவி தூண்டி பேசிய ஸ்தேவான் தான் சொல்கிறார்... பாருங்கள் ஆவியின் இலட்சியத்தை!!!


------------------------


10.வரலாற்றை மாத்தி பேசும் ஆவிதூண்டிய ஸ்தேவான்.


⁴⁰ ஆரோனை நோக்கி: எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும் என்று சொல்லி;

⁴¹ "அந்நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு, தங்கள் கையின் கிரியைகளில் களிகூர்ந்தார்கள்."

⁴² "அப்பொழுது தேவன் அவர்களை விட்டு விலகி, வானசேனைக்கு ஆராதனை செய்ய அவர்களை ஒப்புக்கொடுத்தார். அதைக்குறித்து: இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்தரத்திலிருந்த நாற்பது வருஷம்வரையில் காணிக்கைகளையும் பலிகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ என்றும்,"

⁴³ "பணிந்துகொள்ளும்படி நீங்கள் உண்டாக்கின சொரூபங்களாகிய மோளோகினுடைய கூடாரத்தையும், உங்கள் தேவனாகிய ரெம்பான் என்னும் நட்சத்திர சொரூபத்தையும் சுமந்தீர்களே; ஆகையால் உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடிபோகப்பண்ணுவேன் என்றும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதே."(அப்போஸ்தலர் 7:40-43)



மோசேயின் காலத்தில் மாட்டை வணங்கியதற்காக, ஆமோஸ் காலத்தில் நட்சத்திர கடவுளை வணங்க வைத்ததோடு லின்க் பண்ணுகிறார்.


குறிப்பாக அதில் தமஸ்குவுக்கு அப்பால் குடிபோக பண்ணுவேன் (ஆமோஸ் 5:27) என்று உள்ளதை அப்படியே ஆவி தூண்டியதால், குழம்பி "பாபிலோனுக்கு அப்பால் குடிபோக பண்ணுவேன் "(அப்7:43) என்று மாற்றி கூறுகிறார்.


இவர்களது பரிசுத்த ஆவியின் லட்சணம் இது தான்... பழையதை சரியாக வாசிக்கவே மாட்டார்கள்.

-------------


11.மோசேயிடம் சொன்னதை ஆப்ரகாமிடம் சொன்னதாக தப்பாக பேசும் ஆவி தூண்டிய ஸ்தேவான்.


“அவர்களை அடிமைப்படுத்தும் ஜனத்தையோ நான் ஆக்கினைக்குட்படுத்துவேன். அதற்குப்பின்பு அவர்கள் புறப்பட்டுவந்து இவ்விடத்திலே எனக்கு ஆராதனை செய்வார்கள் என்றார்.”

  — அப்போஸ்தலர் 7:7 


ஆப்ராகமிடம் இதை தேவன் சொன்னதாக சொல்கிறார். ஆனால் ஆப்ராகமிடம் மிகுந்த பொருட்களுடன் புறப்பட்டு வருவார்கள் என்று தான் சொன்னார்.


“இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள்.”

  — ஆதியாகமம் 15:14 .



எனக்கு ஆராதனை செய்வார்கள் என்று இதே விசயத்தை மோசேயிடம் தான் சொன்னார்:


“"அதற்கு அவர்: நான் உன்னோடே இருப்பேன்; நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்துவந்தபின், நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம் என்றார்."”

  — யாத்திராகமம் 3:12 



இதை கூட மாற்றியே சொல்கிறார்.

----------




---------------------



11.அடிக்கப்படும் ஆட்டை போல இருந்தார். பழைய ஏற்பாட்டை மீண்டும் திரிக்கிறார்.



³² அவன் வாசித்த வேதவாக்கியம் என்னவென்றால்: அவர் ஒரு ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்; மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்.


³³ அவர் தம்மைத் தாழ்த்தினபோது அவருடைய நியாயம் எடுத்துப்போடப்பட்டது; அவருடைய ஜீவன் பூமியிலிருந்து எடுபட்டுப்போயிற்று; அவருடைய வம்சத்தை யாராலே சொல்லிமுடியும் என்பதே.(அப்போஸ்தலர் 8:32-33)


ஏசாயா 53இல் இடம்பெறும் வசனமே இது.

ஆனால் இது இயேசுவுக்கு பொருந்தாது. காரணம், அந்த நபருக்கு சந்ததி காணப்படும். 


அந்த சந்ததியை அவர் ஆயூள் நீடிக்கப்பட்டு காண்பார் என்று அதே ஏசாயா 53:10 இல் தெளிவாக உள்ளது.


பாவிகளால் பாதிக்கப்பட்டு பாவிகளின் இழிசொல்லுக்கு அகப்பட்ட நல்ல மனிதர்களை பற்றியே இவ்வதிகாரம் உவமையாக பேசுகிறது.


அந்த தன் ஆவியை குற்ற நிவாரண பலியாக கொடுக்கும்போது அவர் சாகாமல், ஆயுள் நீடிக்கப்பட்டு தன் சந்ததியை காண்பார்.


ஆனால் இயேசுவுக்கு சந்ததி கிடையாது. 

Zera என்பது மாம்ச சந்ததியையே குறிக்கும்.

தோர் என்பது அல்ல! சோ இயேசுவுக்கு சம்பந்தப்படாத வசனத்தை எத்தியோப்பியர் வாசிப்பார்கள். அதுக்கு பிலிப்பு விளக்கம் வேறு தப்பு தப்பாக கொடுப்பாராம்.


----------------------


12.தீர்க்கதரிசிகள் கூறாததை கூறியதாக கூறுதல்


“அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.”

  — Acts 10:43 (TBSI)


இப்படி பழைய ஏற்பாட்டில் எங்கே உள்ளது??



------------_----

13.தாவீது பேரில் மீண்டும் திரித்து பேசும் பவுல்.


³² "நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று இரண்டாம் சங்கீதத்தில் எழுதியிருக்கிறபடியே,"

³³ இயேசுவை எழுப்பினதினாலே தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார் என்று நாங்களும் உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கிறோம்.

³⁴ இனி அவர் அழிவுக்குட்படாதபடிக்கு அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்பதைக்குறித்து: தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்குக் கட்டளையிடுவேன் என்று திருவுளம் பற்றினார்.

³⁵ "அன்றியும், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர் என்று வேறொரு சங்கீதத்தில் சொல்லியிருக்கிறது."

³⁶ "தாவீது தன் காலத்திலே தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியஞ்செய்தபின்பு நித்திரையடைந்து, தன் பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டு, அழிவைக் கண்டான்."

³⁷ தேவனால் எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை. (அப்போஸ்தலர் 13:32-37)



முதலில் "நீர் என்னுடைய குமாரன். இன்று நான் உம்மை ஜெனிப்பித்தேன்" சங்கீதம் 2:7 தாவீதிடம் தேவன் சொன்னதாகும்.


அதாவது அதிலேயே, "அவர் என்னை நோக்கி சொன்னார்" என்றே இருக்கிறது. ஆகவே முதலாவதே பொய்.


இயேசுவை எழுப்பியதால் , இவர்களும் தேவனுடைய பிள்ளைகள் ஆகிவிட்டார்கள் என்று பவுல் இங்கு கதைவிடுகிறார்.


மீண்டும் தாவீது இறந்ததால் அழிவை கண்டதாகவும், இயேசு எழுந்து விட்டதால் அழிவை காணவில்லை என்றும் கதைவிடுகிறார்.



தாவீது இறந்தாலும், தீர்க்கதரிசி எவர் இறந்தாலும் தேவனிடம் பரலோகத்தில் உயிரோடு தான் இருப்பார்கள்..


இயேசுவை சந்திக்க எலியாவும் இறந்துபோன மோசேயும் வந்ததாக இதை எழுதிய அதே லூக்கா எழுதுகிறார். (லூக்கா 9:30)



இதே போன்றே ஆப்ரகாம் பரலோகத்தில் இருப்பதாகவும் , அவரது மடியில் லாசரு இருந்ததாகவும் இயேசு சொன்னதாக லூக்கா எழுதியுள்ளார் (லூக்கா 16:23)



அழிவை காணவொட்டீர் என்பது இழிவான மரணத்தை விட்டு பாதுகாப்பதையே குறிக்கும்.

ஆனால் இவர்கள் நம்பிக்கைப் படி இயேசு இழிவான மரணத்தை சந்தித்தார். அதாவது அழிவை கண்டுவிட்டார்..  


அழிவை கண்டவரை அழிவை காணாதவர் என்று சித்தரிப்பது திரித்து பேசுவதாகும்.

------------------------------

-------


14.எகிப்திலிருந்து புறப்பட்டது முதல் தாவீது வரை உள்ள காலத்தை தப்பாக சொல்லும் பவுல்



¹⁸ "நாற்பது வருஷகாலமாய் வனாந்தரத்தில் அவர்களை ஆதரித்து,"


¹⁹ "கானான் தேசத்தில் ஏழு ஜாதிகளை அழித்து, அவர்களுடைய தேசத்தை இவர்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிட்டுக் கொடுத்து,"


²⁰ பின்பு ஏறக்குறைய நானூற்றைம்பது வருஷகாலமாய் சாமுவேல் தீர்க்கதரிசிவரைக்கும் அவர்களுக்கு நியாயாதிபதிகளை ஏற்படுத்திவந்தார்.


²¹ அதுமுதல் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்; அப்படியே தேவன் பென்யமீன் கோத்திரத்தானாகிய கீசுடைய குமாரனான சவுலை நாற்பதுவருஷகாலமாய் அவர்களுக்குக் கொடுத்தார்.


²² "பின்பு அவர் அவனைத் தள்ளி, தாவீதை அவர்களுக்கு ராஜவாக ஏற்படுத்தி, ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியும் கொடுத்தார்."(அப்போஸ்தலர் 13:18-22)


அதாவது 40 வருடம் வனாந்தரத்தில் அலைதல்


பிறகு 450 வருடம் சாமுவேல் வரை 


பிறகு 40 வருடம் சவுல் ஆட்சி. 


பிறகு தான் தாவீது வருகிறார். ஆக 40+450+40= 530 வருடங்கள்.


ஆனால் 1 இராஜாக்கள் 6:1 ஆனது, எகிப்திலிருந்து புறப்பட்டதிலிருந்து சொலமோன் ராஜாவானதுவரை 476 வருடங்கள் என்கிறது. (480வது வருடம் சொலமோன் ராஜாவாகிய 4வது வருடம்).

தாவீது 40 வருடம் ஆண்டார். ஆகவே தாவீது ராஜாவாகும்வரை உள்ள காலம் வெறும் 436 வருடங்கள் ஆகும் .


ஆனால் பவுல் பரிசுத்த ஆவி தூண்டி 94 வருடங்களை கூட்டி சொல்கிறார்..


ஆவி தூண்டினாலே பழைய ஏற்பாட்டில் குழம்பி விடுவார்கள்.

----------

15.ஏதோம் என்பதை ஆதாம் (மனிதன்) என்று ஆவி தூண்டி தப்பாக வாசிக்கும் யாக்கோபு


¹⁶ "எப்படியெனில், மற்ற மனுஷரும், என்னுடைய நாமந்தரிக்கப்படும் சகல ஜாதிகளும், கர்த்தரைத் தேடும்படிக்கு,"

¹⁷ "நான் இதற்குப்பின்பு திரும்பிவந்து, விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை மறுபடியும் எடுப்பித்து, அதிலே பழுதாய்ப்போனவைகளை மறுபடியும் சீர்ப்படுத்தி, அதைச் செவ்வையாக நிறுத்துவேன் என்று இவைகளையெல்லாஞ்செய்கிற கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது."

(அப்போஸ்தலர் 15:16-17)


மனுசரில் (ஆதாமில்) என்று இவர் வாசிக்கிறார். ஆனால் உண்மையில் ஏதோமில் என்றே உள்ளது



¹¹ "ஏதோமில் மீதியானவர்களையும், என் நாமம் விளங்கிய சகல ஜாதிகளையும் வசமாக்கிக்கொள்ளும்படிக்கு,"

¹² "அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன் என்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார்." (ஆமோஸ் 9:11-12)


யூத ரபீயிடம் ஒழுங்காக க்ளாஸ் போயிருந்தால், ஏதோமை ஏதோம் என்று வாசித்திருப்பார்கள். இவர்களோ ஆதாம் என்று வாசித்து ஒட்டுமொத்த அர்த்தத்தையே மாற்றுகிறார்கள்

இவர்கள் தப்பாக வாசிப்பதை பொழுதுபோக்காக கொண்டிருக்கிறார்களோ என்பதை நான் அறியமாட்டேன்.







கருத்துகள்

பிரபலமான இடுகைகள்