தானியேல் 9:26-27 சிலுவை மரணத்தை குறிக்குமா?

 தானியேல் 9 மேசியா மற்றவர்களின் பாவத்திற்காக மரிப்பார் என்கிறதா?

--------------------------------------------------------------------------------




பொதுவாக கிறிஸ்தவ போதகர்கள் பழைய ஏற்பாட்டை திரித்து தமது கற்பனைக் கதைகளை பழைய ஏற்பாட்டில் சொருகுவதில் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். முதல் நூற்றாண்டில் எவ்வாறெல்லாம் தோராவையும் நவியீமையும் திரித்தார்களோ அதைவிட தற்போது திரிபு மேலோங்கி விட்டது.



அந்த காலத்திலாவது இஸ்ரேலை என் மகன் என்றதை இயேசுவை என் மகன் என்றதாகவும், ராகேல் தன் பிள்ளைகளான எப்ராயீமியர் சிறைபிடிக்கப்பட்டதற்கு அழுததாக வருவதை , ராகேலின் அக்கா லேயாளின் பிள்ளைகளான யூதாவின குழந்தைகள் கொல்லப்பட்டதற்காக ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுததாக மத்தேயு சொல்கிறார்.(மத்2:15-18)


ஆனால் தற்போது உள்ளவராகளோ எழுத்துக்கு எழுத்து கதை கட்டுகிறார்கள். ஒருவர் சொல்கிறார் வினைச்சொல்லின் செயற்படுபொருளின் அடையாளப்படுத்தும் எபிரேய உரிச்சொல்லை (ஏத்) கூச்சமே இல்லாமல் இயேசுவை குறிப்பதாக சொல்கிறார். அதையும் மக்கள் நம்பி தம் மதம் எவ்வளவு உண்மையானது என ஆச்சரியப்படுகிறார்கள் !! (இதன் மூலம் இவர்களது நிலையை கண்டு நானும் ஆச்சரியப்படுகிறேன்!)




அந்த வகையில் வந்ததே தானியேல் 9:25-27 இயேசு சிலுவையில் மற்றவர் பாவத்திற்காக மரணிப்பதை குறிக்கிறது என பச்சையாக சொல்கிறார்கள்.


இனி இதை ஆராய்வோம்.



உப பிரிவுகள்

1.தானியேல் 9:25-27 இயேசுவை குறிப்பதாக புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் கருதினார்களா?

2.பரிசுத்த ஆவி புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களுக்கு இதை எழுத தூண்டாதது ஏன்?

3.பிற்காலத்து (முதல் நூற்றாண்டிற்கு பின்னுள்ள) கிறிஸ்தவர்கள் எப்படி இதை கண்டுபிடித்தனர்?

4.மேசியா என்று வந்தாலே அது இயேசுவையா குறிக்கும்?

5.தானியேல் 9:25-27 சரியான மொழியாக்கமும் விளக்கமும்!

***************************************

1.தானியேல் 9:25-27 ஐ இயேசுவை குறிப்பதாக புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் கருதினார்களா?




புதிய ஏற்பாட்டில் இயேசுவுக்கு சம்பந்தமே இல்லாத வசனங்கள் கண்டுபிடித்து மேற்கோள் காட்டிய புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் எவருமே தானியேல் 9:25-27 இயேசுவின் சிலுவை மரணத்தை குறிப்பதாக எங்குமே வாய்திறந்ததில்லை.




எந்தளவுக்கு என்றால், இயேசு நசரேத்தில் வாழ்ந்ததால் நசரேயன் எனப்படுவார் என தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறியது (மத் 2:23) என இல்லாத வசனத்தையே பழைய ஏற்பாட்டில் இயேசுவை குறித்து உள்ளதாக மத்தேயு சொல்கிறார்..


இவரது கண்ணுக்கு கூட இந்த தானியேல் 9:25-27 இயேசுவை குறிப்பதாக கண்ணில் படவில்லை.


பவுல் பழைய ஏற்பாட்டில் நுனிப்புல் மேய்ந்தவர். எங்கே தமக்கு சார்பாக வசனம் இருந்தாலும் அதை கொண்டுவந்து விடுவார். அவரது கண்ணிற்கும் இவ்வசனம் இயேசுவை குறிப்பதாக தெரியவில்லை .


இதெல்லாரையும் விட கற்பனைப் புயல் தான் எபிரேயர் (Hebrews) என்ற புதிய ஏற்பாட்டு கடிதத்தை எழுதியவர்.


இவர் தேவனை பற்றி நோயாளி பாடியதையும், ராஜாவை குறித்து பாடகர்கள் பாடியதையும் (எபி 1:5-13) இயேசுவை குறித்து தேவன் சொன்னதாக புகுத்தியவர். இவரது கண்ணிற்கு கூட இந்த தானியேல் 9:25-27 இயேசுவை குறிப்பதாக தெரியவில்லை!




பேதுரு இயேசுவின் சிலுவை மரணத்தை குறித்து, தாவீது தன்னை குறித்து சொன்னதை தாவீது மேசியாவை குறித்து சொன்னதாக (அப்போஸ்தலர் 2:25-31) சொல்கிறார். வேடிக்கையாக சங்கீத புத்தகத்தை அலசி, அதிலே யூதாசை பற்றியும் உள்ளதாக தாவீது தன் துரோகிகளை குறித்து சொன்னதை திரித்து கூறினார் (அப் 1:16-20).


இப்படிப்பட்ட அடிமட்டம் வரை இறங்கி அலசக்கூடிய இவர்களின் கண்களில் இவ்வசனம் படாமல் போனது ஏன்??


காரணம் அவர்கள் அதை அவ்வாறு காணவே இல்லை!!! இதை தவிர வேறு என்ன காரணம்?? கண்டிருந்தால் அதை விட்டிருப்பார்களா??


****************************************

----



2.பரிசுத்த ஆவி இதை ஏன் புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்களுக்கு எழுத தூண்டவில்லை?




புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் தம் மனதுக்கு சரியென பட்டதை பொய் கலந்து அலங்கரித்தே எழுதினார்கள். 


உதாரணமாக நான் அவர்களுக்கு புருஷனாக (நாயகராக) இருந்தும் என் உடன்படிக்கையை அவமாக்கி போட்டார்கள் (எரேமியா 31:32) என உள்ளதை கூட திரித்து ஆவி தூண்டி "அந்த உடன்படிக்கையில் அவர்கள் நிலைநிற்கவில்லை. நானும் அவர்களை புறக்கணித்தேன்" (எபி 8:9) என எழுதியுள்ளார் எபிரேய ஆசிரியர்.



இப்படி "நான் அவர்களது நாயகராக (கணவனாக) இருந்தேன்" என்பதை "நான் அவர்களை புறக்கணித்தேன்" என மாற்றும் அளவுக்கு தூண்டிய ஆவியானவர் ஏன் இந்த தானியேல் 9:25-27 இயேசுவின் மரணத்தை குறிக்கிறதாக அவரது தியாகத்தை குறிக்கிறதாக சொல்லவில்லை??



ஆவியானவருக்கு கூட இது தெரியாமல் போனது ஏனோ?


ஆகவே ஆவியானவர் கூட இது இயேசுவை குறிப்பதாக பார்க்கவில்லை!



*****************************************



3.பிற்காலத்து (முதல் நூற்றாண்டிற்கு பின்னுள்ள) கிறிஸ்தவர்கள் எப்படி இதை கண்டுபிடித்தனர்?




முதல் நூற்றாண்டில் இயேசுவோடு கூட இருந்தவர்களாக கருதப்பட்டவர்களுக்கு கூட இது தெரியவில்லை.. அவர்கள் அதை அவ்வளவு முக்கியமாக கருதி மேற்கோள் காட்டவுமில்லை.. 


ஏன்?, பேதுரு இயேசுவை தனியே அழைத்து சென்று உமக்கு இதெல்லாம் நேரிடக்கூடாது என கடிந்து கொண்டார் அப்போது இயேசு சாத்தானே எனக்கு பின்னால் போ என அதட்டி, நீ தேவனுக்கேற்றவைகளை சிந்திக்காமல் , மனுசனுக்கு ஏற்றவைகளை சிந்திக்கிறாய் என கடிந்து கொண்டார். (மத் 16:22-23).


அப்போது கூட இயேசு, பேதுருவே! "மேசியா தன் பாவத்திற்கல்லாமல் சாகுவார் என தானியேல் சொல்லியிருக்கிறாரே! அதை படிக்கவில்லையா?" என கேட்கவில்லை! ஏசாயா புத்தகத்தை கரைத்துக் குடித்த இயேசுவுக்கு தானியேல் புத்தகத்தில் தன்னை குறித்து உள்ளது தெரியாமல் போகுமா? சுட்டிக்காட்டவேண்டிய இடத்தில் கூட இதை குறிப்பிடாமல் விட்டுவிட்டாரே! காரணம் அது அவரை குறித்ததாக புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் காணவில்லை! அதனால் இயேசுவின் வாயில் அதை போடவில்லை!



ஆனால் பிற்காலத்தவர்கள் இயேசுவை வரிக்கு வரி பழைய ஏற்பாட்டில் தேடினார்கள். எங்கெல்லாம் மெசியா என்று வருகிறதோ, அதை இயேசுவுக்கு மேட்ச் பண்ணுவதற்கு முயற்சித்தார்கள். அதில் சிக்கியது தான் தானியேல் 9:25-27 ஆகும்.




அதுவும் இவர்களது சொந்த கற்பனையே ஆகும்.. அங்கு இரண்டு மேசியாக்களை பற்றி கூறும்போது, அதை ஒரே மேசியாவாக மாற்றியே கதை அளந்துள்ளனர்.


*******************************************



4.மேசியா என்று வந்தாலே அது இயேசுவையா குறிக்கும்?





பழைய ஏற்பாட்டில் மேசியா என்பது அபிசேகம் பண்ணப்பட்ட அனைவரையும் குறிக்கும்... அபிசேகம் பண்ணப்பட்டதாக கருதப்படும் அரசர்களையும், ஆசாரியர்களையும் இது குறிக்கும். 



1.சவுலை கூட சாமுவேல் தீர்க்கதரிசி தேவனுடைய மேசியா என்கிறார். அதாவது "மசீஹூ- அவரது மசீஹ் (his Messiah)" என்கிறார்.


"இதோ இருக்கிறேன். கர்த்தரின் சந்நிதியிலும் அவர் அபிசேகம் பண்ணிவைத்தவருக்கு (மசீஹூ -"מְשִׁיח֗וֹ-"-அவரது மசீஹ் )முன்பாகவும் எனனை குறித்து சாட்சி சொல்லுங்கள்! (1 சாமுவேல் 12:3)


மேலும் 12:5, இல் மீண்டும் சவுலை சாமுவேல் அவரது (தேவனது ) மசீஹ் -messiah என்கிறார்.




2.-1 சாமுவேல் 24:6 இல் தாவீது தன் வாயால் சவுலை -"மசீஹ் யாஹ்வே" - Messiah of Yhwh " என்கிறார்..


 எபேரேய வாசகத்தை செக் பண்ணுங்கள்.


-அதைவிட ஒருபடி மேலே போய் சிலுவை தாவீது, "அதோனி, மசீஹ் யாஹ்வே" அதாவது என் ஆண்டவரும், யாஹ்வேயின் மெசியாவும் என்று சவுலை குறித்து சவுலிடமே சொல்கிறார் - 1 சாமுவேல் 24:10


இப்படி சவுலை மெசியா என்று பல வசனங்கள் காணப்படுகின்றன. அவற்றையெல்லாம் மொழிபெயர்த்து "அபிசேகம் பண்ணப்பட்டவர்" என்று எழுதியுள்ளார்கள்.





3.-தாவீதை அபிசாய் யாஹ்வேயின் மசியாஹ் (மசியாஹ் யாஹ்வே) என்கிறார். 2 சாமுவேல் 19:21


மேலும் 2 சாமுவேல் 22:51 இலும் தாவீது மசீஹு (அவருடைய மசீயாக்) என சொல்லப்பட்டுள்ளது.





4.-கோரேசு ராஜாவை "மசீஹு" அவரது மசீயஹ் என தேவன் சொன்னதாக ஏசாயா 45:1 கூறுகிறது.





5.-பாபிலோனியரால் பிடிபட்ட ராஜாவையும் யாஹ்வேயின் மெசியாஹ் என்று புலம்பல் 4:20 சொல்கிறது.



"கர்த்தரின் அபிசேகம் பண்ணப்பட்டவனும் (மெசியாஹ் யாவே) , எங்கள் நாசியின் சுவாசமுமாயிருந்தவனும் அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டான். அவனுடைய நிழலிலே ஜாதிகளுக்குள்ளே பிழைத்திருப்போம் என்று அவனை குறித்து சொல்லியிருந்தோமே!" (புலம்பல் 4:20)





இப்படி மெசியாஹ் என வருமிடங்களிலெல்லாம் அதை மொழிபெயர்த்து விட்டு, சம்பந்தமே இல்லாமல் தானியேல் 9இல் மட்டும் மொழிபெயர்க்காமல் விட்டுவிட்டு மக்களை குழப்புகின்றனர்.



ஆனாலும் இது தவறான திரிபு என புரியும் நல்லுள்ளம் கொண்ட கிறிஸ்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.


அவர்கள் அது வேறு அரசனையே குறிக்கின்றது என உணர்ந்து மொழிபெயர்த்துள்ளார்கள்.




5.தானியேல் 9:25-27 சரியான மொழியாக்கமும் விளக்கமும்!



கீழே ரோமன் கத்தோலிக்க திருவிவிலிய தமிழாக்கம்:


தானி 9 (ERV-TA)

¯¯¯¯¯¯¯¯¯¯

²⁵ “தானியேலே, இவற்றைக் கற்றுக்கொள். இவற்றைப் புரிந்துகொள், எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுவதற்கான கட்டளை தரப்பட்டதுமுதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன் வரும்வரை ஏழு வாரங்களாகும். எருசலேம் மீண்டும் கட்டப்பட்டு கூட்டம் கூடுவதற்கான இடங்கள் ஏற்படுத்தப்படும். பாதுகாப்பிற்காக நகரத்தைச் சுற்றி ஒரு பள்ளம் தோண்டப்படும். எருசலேமானது ⁶² வாரங்களில் கட்டப்படும். ஆனால் அந்நேரத்தில் அநேக துன்பங்கள் நேரிடும்.

²⁶ ⁶² வாரங்கள் சென்றபிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் கொல்லப்படுவான். அவன் போய்விடுவான். பிறகு வருங்காலத் தலைவனின் ஜனங்கள் நகரத்தையும் பரிசுத்தமான இடத்தையும் அழிப்பார்கள். அம்முடிவானது வெள்ளத்தைப்போன்று வரும். போரானது முடிவுவரை தொடரும். அந்த இடம் முழுமையாக அழிக்கப்படவேண்டும் என்று தேவன் கட்டளை கொடுத்திருக்கிறார்.

²⁷ பிறகு, வருங்கால அரசன் பல ஜனங்களோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வான். அந்த ஒப்பந்தம் ஒரு வாரத்திற்கு நீடிக்கும். அரை வாரத்திற்குப் பலிகளும் காணிக்கைகளும் நிறுத்தப்படும். பாழாக்குகிறவன் வருவான். அவன் பயங்கரங்களையும், அழிவுக்குரியக் காரியங்களையும் செய்வான். ஆனால் தேவன், அந்த பாழாக்குகிறவன் முழுமையாக அழிக்கப்படவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார்” என்றான்.


NRSV மொழிபெயர்ப்பு

Dan 9 (NRSV)

¯¯¯¯¯¯¯¯¯¯

²⁵ Know therefore and understand: from the time that the word went out to restore and rebuild Jerusalem until the time of an anointed prince, there shall be seven weeks; and for sixty-two weeks it shall be built again with streets and moat, but in a troubled time.

²⁶ After the sixty-two weeks, an anointed one shall be cut off and shall have nothing, and the troops of the prince who is to come shall destroy the city and the sanctuary. Its end shall come with a flood, and to the end there shall be war. Desolations are decreed.

²⁷ He shall make a strong covenant with many for one week, and for half of the week he shall make sacrifice and offering cease; and in their place shall be an abomination that desolates, until the decreed end is poured out upon the desolator."


விளக்கம்

இவ்வசனங்கள் தானியேல் எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகத்தை பார்க்கிறார். அதில் எருசலேம் மீண்டும் கட்டப்படுவதற்கு 70 வருடங்கள் செல்லும் எனசொல்லப்பட்டிருப்பதை காண்கிறார். (தானியேல் 9:2).


எரேமியா 25:11, 29:10 இல் இது கூறப்பட்டிருக்கிறது.. இதை படித்து அறிந்துகொண்ட தானியேல் தேவனிடம் ஜெபிக்க துவங்குகிறார்.


அதன் இறுதியில் தான் காபிரியேல் தூதர் வந்து தானியேலுக்கு தெளிவுபடுத்துகிறார்.






1. 70 வாரங்களை தேவன் யூதர்களுக்கு நிர்ணயித்தார். அதாவது 490 வருடங்களை தேவன் நிர்ணயித்திருக்கிறார். அக்காலத்தினுள் அவர்கள் கொடிய பாவங்களை நிறுத்திக்கொண்டு தம்மை திருத்திக்கொள்ளுவதற்காக அதை நிர்ணயித்திருக்கிறார். அதனுள் அவர்களுக்கான தீர்க்கதரிசனம் முத்திரிக்கப்படும். (அதன்பின் அவர்களில் தேவனிடமிருந்து தீர்க்கதரிசி வரமாட்டான்!)



“தேவன் 70 வாரங்களை உனது ஜனங்களுக்கும் உனது பரிசுத்தமான நகரத்திற்கும் அனுமதித்தார். தீமைகள் செய்வதை நிறுத்துவதற்கும், பாவங்கள் செய்வதை நிறுத்துவதற்கும், ஜனங்களைச் சுத்தப்படுத்துவதற்கும், என்றென்றும் நிலைத்திருக்கிற நன்மையைக் கொண்டு வருவதற்கும், தரிசனங்களையும், தீர்க்கதரிசிகளையும் முத்திரையிடுவதற்கும், மிகப்பரிசுத்தமான இடத்தை அர்ப்பணிப்பதற்கும் இந்த 70 வாரங்கள் நியமிக்கப்பட்டன.”

  — தானி 9:24 (ERV-TA)




*.இந்த 70 வாரங்களான 490 வருடங்களில் , முதல் 7 வாரத்தில் அதாவது 49 வருடத்தில் ஒரு மெசியா வருவார். . அவர் வந்து எருசலேமை கட்டுவார்.




இங்கே கூறப்பட்ட ராஜா தான் கோரேஸ் ராஜா ஆவான். இவரை "அவருடைய மெசியா" என்று தேவனே தன் வாயால் சொன்னதாக ஏசாயா 45:1 சொல்கிறது.


இவரே எருசலேமை கட்டுவதற்கு அனுப்பியவர். (2 நாளாகமம் 36:21-24)



இது கட்டப்பட்டு மீண்டும் 62 வாரங்களில் அதாவது (62+7 = 69 வாரங்களில் - 483 வருட முடிவில் மீண்டும் கட்டப்பட்டிருக்கும்.


 அப்போது அநேக துன்பங்கள் ஏற்படும்.





““தானியேலே, இவற்றைக் கற்றுக்கொள். இவற்றைப் புரிந்துகொள், எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுவதற்கான கட்டளை தரப்பட்டதுமுதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன் வரும்வரை ஏழு வாரங்களாகும். எருசலேம் மீண்டும் கட்டப்பட்டு கூட்டம் கூடுவதற்கான இடங்கள் ஏற்படுத்தப்படும். பாதுகாப்பிற்காக நகரத்தைச் சுற்றி ஒரு பள்ளம் தோண்டப்படும். எருசலேமானது 62 வாரங்களில் கட்டப்படும். ஆனால் அந்நேரத்தில் அநேக துன்பங்கள் நேரிடும்.”

  — தானி 9:25 (ERV-TA)




அதாவது அப்போது எருசலேம் ரோமர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.





3.இந்த 62 வாரங்களெனும் (62+முதல் 7 வாரங்கள்) 483 வருடங்களின் பின் அடுத்த மெசியா கொல்லப்படுவான். அவன் முற்றாகவே போய்விடுவான். இவனை கொன்றுவிட்டு பிறகு பரிசுத்த ஆலயத்தையும் எருசலேம் நகரத்தையும் அழிப்பார்கள்.


இந்த இடமான எருசலேம் முற்றாக அழிக்கப்பட வேண்டும் என தேவன் கட்டளையிட்டிருக்கிறார்.





“62 வாரங்கள் சென்றபிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் கொல்லப்படுவான். அவன் போய்விடுவான். பிறகு வருங்காலத் தலைவனின் ஜனங்கள் நகரத்தையும் பரிசுத்தமான இடத்தையும் அழிப்பார்கள். அம்முடிவானது வெள்ளத்தைப்போன்று வரும். போரானது முடிவுவரை தொடரும். அந்த இடம் முழுமையாக அழிக்கப்படவேண்டும் என்று தேவன் கட்டளை கொடுத்திருக்கிறார்.”

  — தானி 9:26 (ERV-TA)



அதாவது 69 வாரம் முடிந்து 70வது வாரத்தில் தான் இது நிகழுகிறது.



கிறிஸ்தவ நம்பிக்கைப் பிரகாரம், இயேசு கொல்லப்பட்டு அடுத்த ஒரு வாரத்திற்குள் அதாவது ஏழு வருடங்களினுள் ஆலயமும் எருசலேமும் அழிக்கப்பட்டதா??


இல்லையே..






4.அடுத்து அதை அழிக்க போகும் ராஜா இந்த 62 +7 வாரமான 483 வருடம் முடிந்த பின்பு, கடைசி ஒரு வாரத்தில் அதாவது இறுதி ஏழுவருசமான 70வது வாரத்தில் , ஜனங்களோடு ஒப்பந்தம் செய்துகொள்வான். அதாவது சமாதான உடன்படிக்கை செய்வான்.


பிறகு அந்த ஒரு வாரத்தில் அரைவாரம் முடியும்போது அதாவது 3.5 வருடம் முடியும்போது மொத்தமாக 486.5வது வருடத்தில் அவன் பலிகளையும் , காணிக்கைகளையும் ஒழியப்பண்ணுவான். அதன் பின் பாழாக்குபவன் வந்து முற்றாக அழிப்பான்.




“பிறகு, வருங்கால அரசன் பல ஜனங்களோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வான். அந்த ஒப்பந்தம் ஒரு வாரத்திற்கு நீடிக்கும். அரை வாரத்திற்குப் பலிகளும் காணிக்கைகளும் நிறுத்தப்படும். பாழாக்குகிறவன் வருவான். அவன் பயங்கரங்களையும், அழிவுக்குரியக் காரியங்களையும் செய்வான். ஆனால் தேவன், அந்த பாழாக்குகிறவன் முழுமையாக அழிக்கப்படவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார்” என்றான்.”

  — தானி 9:27 (ERV-TA)



அதாவது 486.5 வது வருடத்தில் பிரதான ஆசாரியன் கொல்லப்பட்டான் அதாவது கி.பி. 66 இல் பிரதான ஆசாரியன் கொல்லப்பட்டான். அதன் மூலம் அப்போது பலிகளும் காணிக்கைகளும் முற்றாக ஒழிக்கப்பட்டன. அந்த கொல்லப்படும் இரண்டாவது மெசாயா இவனே.. இவன் போனதோடு அனைத்து பலிகளும் காணிக்கைகளும் முற்றாக போய்விட்டன. அந்த ராஜா செய்த உடன்படிக்கை 1 வாரம் இருக்கும். அதாவது ஆசாரியனான மெசியா 3.5 வருடத்தில் கொல்லப்பட்ட பின் அதாவது 69 வாரம் சென்றதன் பின்புள்ள வாரத்தில், மேலதிகமாக அரை வாரம் இருக்கிறது. அதாவது 3.5 வருடம் இருக்கிறது. அந்த மூன்றரை வாரம் முடிந்ததன் பின்பு   கி.பி. 70 இல்  எருசலேம் ஆலயம்  அழிக்கப்பட்டது. யூதர்களும் அடித்து துரத்தப்பட்டனர். பலர் கொல்லப்பட்டனர்.



இந்த 490 வருடங்களே தானியேலிடம் சொல்லப்பட்டது.



அதாவது முதல் 7 வார முடிவின் பின் 49 வருடங்களின் பின் ஒரு மெசியா வந்து எருசலேமை கட்டுவான். - கோரேஸ் வந்து கட்டினான்.(2 நாளாகமம் 36:21-23.)  அவனை மெசியா என்று ஏசாயா 45:1 சொல்கிறது.



பிறகுள்ள 62 வார முடிவில் மீண்டும் எருசலேம் கட்டப்படும். அதன் பின் அடுத்த மெசியா கொல்லப்படுவான்.


அவன் கொல்லப்பட முன்பே ஒரு வாரம் (7வருடம்) உடன்படிக்கை செய்யும் ராஜா , 3.5 வருடத்தில் இந்த மெசியாவை கொல்வதன் மூலம் பலிகளையும் காணிக்கைகளையும் ஒழிப்பான். பின்பு மிகுதி அரைவாரம் முடிந்த பின் அதாவது 70வது வாரமான 490 வருடம் முடிந்த பின் , பாழாக்குபவன் நகரத்தை முற்றாக அழிப்பான்!!!



இதுவே நடந்தது!! 



யூதர்களுக்கு திருந்துவதற்கும் பாவமன்னிப்புகளை பெற்றுக்கொள்ளவும், தீர்க்கதரிசனங்களை அவர்களிடையே முத்திரிப்பதன் மூலம் அவர்களிடையே தீர்க்கதரிசிகள் வராமலிருப்பதுமான நிகழ்வு பூரணப்படவே இது கொடுக்கப்பட்டது.



ஆனால் அவர்கள் தம் பாவத்தை ஒழிக்கவுமில்லை, நன்மையை கொண்டுவரவுமில்லை! 



இதை சம்பந்தமேயின்றி இயேசுவுக்கு பொருத்துவதென்பது வேடிக்கை..


இவர்கள் நம்பிக்கை பிரகாரம் இயேசு இரண்டு தடவை வரவுமில்லை.. முதல் தடவை எருசலேமை கட்டுவதற்கு அனுப்பவுமில்லை.. இரண்டாவது தடவையில் இவரது மரணத்தோடு பலிகள் ஒழிக்கப்படவுமில்லை.. மாறாக 33 வருடங்கள் பின்பே அது நடந்தது.


அதாவது கடைசி வாரத்தில் கொல்லப்படவேண்டிய மெசியா 5 வாரங்கள் முன்னதாகவே கொல்லப்பட்டு விட்டார். அதாவது 64வது வாரத்திலேயே கொல்லப்பட்டு விட்டார்.



ஆகவே அது அவரை குறிக்கும் என்பது ஏற்க முடியாது.




இதனால் தான் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் இதை மேற்கொள் காட்டவுமில்லை!!



ஆகவே கற்பனை கதைகளை நம்பி ஏமாற வேண்டாம்!





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்